March 26, 2023

ஐ.நா.வின் யுனிசெஃப் அமைப்பின் தூதர் ஆனார் – நடிகை த்ரிஷா!

கடந்த  1999-ம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்தை பெற்ற நடிகை திரிஷா தனது திரைப் பயணத்தை தொடங்கினார். திரை உலகில் பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றவர் நடிகை திரிஷா இவர்  நடிப்பு மட்டுமின்றி சமூக சேவைகளிலும் நாட்டம் காட்டி வருகிறார். விலங்குகள் நலன், குழந்தைகள் கல்வி போன்றவற்றுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கிறார். அண்மையில் கேரள அரசும் யுனிசெஃப் நிறுவனமும் இணைந்து தயாரித்த, குழந்தைகளுக்கு தட்டம்மை ஊசி போட வலியுறுத்தும் விளம்பரத்தில் த்ரிஷா நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து த்ரிஷாவின் சமூக ஈடுபாட்டுக்கு அங்கீகாரம் தரும் வகையில் ‘யுனிசெஃபின் செலிப்ரிடி அட்வகேட்’ என்ற பதவியை அவருக்கு வழங்கியுள்ளனர். இந்த பதவியில் இருந்தபடி அவர் குழந்தைகள் கல்வி, குழந்தைத் திருமண முறை, குழந்தைத் தொழிலாளர் முறை, பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் போன்றவற்றை எதிர்த்துக் குரல் கொடுக்க வுள்ளார். அப்பேர் பட்ட த்ரிஷாவை யுனிசெஃப் தூதராக அறிவிக்கும் நிகழ்ச்சி நேற்று (நவம்பர் 19) சென்னையில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய த்ரிஷா, “இது எனக்குப் பெரிய கவுரவம். தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வி, சுகாதாரம், குழந்தைகள் பாதுகாப்புக்காக தொடர்ந்து நான் குரல் கொடுப்பேன். பெண் குழந்தைகள் 18 வயது வரை கட்டாயம் கல்வி பயின்றால் குழந்தை திருமண முறையை ஒழித்துவிடலாம்” என்று தெரிவித்தார்.

மேலும் இன்று யுனிசெஃப் அமைப்பு நடத்தும் குழந்தைகள் தின விழாவில் த்ரிஷாவை கௌரவித்து சிறப்பித்துள்ளது. தென்னிந்திய சினிமாவிலிருந்து ஒரு நடிகை யுனிசெஃப் அமைப்பின் இந்த அங்கீகாரத்தைப் பெறுவது இதுவே முதல் முறை என்பதால் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிகின்றன.