நீ யாரும்மே.. அடுத்தவங்க ஃபேமிலி பஞ்சாயத்தை தீர்த்து வக்கறே! – ஸ்ரீப்ரியா கேள்வி

முன்னொரு காலத்தில் வீடு என்று இருந்தால் திண்ணை என்று தவறாது இருக்கும். வந்து போகின்ற பாதசாரிகள் களைப்பாறிச் செல்லவே முந்தைய தமிழன் கட்டி வைத்த ஏற்பாடு. திண்ணையில் அமர்ந்த முன்பின் பழக்கம் இல்லாத பாதசாரிகள் தாகத்திற்கு நீர் கேட்டால் மோர் கொண்டு வந்து கொடுத்து இன்முகத்தோடு விருந்தோம்பல் செய்த மனித நேயமிக்க வாழ்வை வாழ்ந்தனர் நம் முன்னோர்கள். இன்று தன் குடும்பம், தன் பிள்ளை, தன் வாழ்வு என்று மாறிவிட்ட சுயநலப் போக்காலும், மனிதர்களுக்குள் இருந்த மனிதநேயம் செத்து வருகின்ற காரணத்தாலும் வீடுகளில் திண்ணைகளுக்குப் பதிலாக பெரும் மதில் சுவர்களை எழுப்பி, எழுப்பிய சுவருக்கு மேல் கண்ணாடித் துண்டுகளைப் பதித்தும், கூரான கம்பிகளைப் பதித்தும், மேலும் நம்பிக்கை இல்லாமல் வாசலுக்கு ஒரு கண்காணிப்பாளரை நியமித்தும், கூடவே நாய்களையும் காவலுக்கு நிறுத்தி பாதுகாப்பான வாழ்க்கை வாழ்கிறது நிகழ்காலத் தமிழகம்.

tv nov 28

ஆனாலும் சுயநல வாழ்வின் இன்னொரு அம்சமே வேடிக்கை பார்ப்பது. வேடிக்கைப் பார்ப்பது என்பது தமிழனின் ரத்தத்தில் வம்சா வழியாக ஊறிப்போன உணர்வாகும். ஆம்.. நாடு பிடிக்க ஒரு தமிழ் அரசனோடு பிற நாட்டு அரசன் போரிட்ட போது மற்ற தமிழ் மன்னர்களும், குறுநில மன்னர்களும் குதூகலித்தனர். சுருக்கமாகக் கூறினால் எட்ட நின்று வேடிக்கை பார்த்தனர். இந்த எண்ணத்தின் எச்சமாக இன்று சாலையில் எவராவது அடிபட்டுக் கிடந்தாலும் கண்டும், காணாமல் செல்வது, இரண்டு பேர் அடித்துக்கொண்டால் விலகி விடாமல் தூர நின்று வேடிக்கை பார்ப்பது, பக்கத்து வீட்டில் கணவன் மனைவிக்குள் குடும்பச் சண்டை நிகழ்ந்தால் தன் வீட்டுச் சாளரத்தைத் திறந்தும், ஏன் கதவைத் திறந்தும் குத்துக்கல்லாய் நின்று வேடிக்கைப் பார்ப்பது, அரசியல் கூட்டம், நடிகர்கள் வருகை, என எவர் மேடை போட்டுப் பேசினாலும் வேடிக்கைப் பார்ப்பது, திரைப்படம், சின்னத்திரை, பத்திரிக்கை, இணையம் என எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்துப் பார்த்தே வாழுகின்ற அவலமான நிலையில் தமிழர்களின் தினசரி வாழ்க்கை ஓடுகிறது.

இதனால் வேடிக்கைத் தமிழர்களின் உணர்வை அறிந்த தமிழ் ஊடகங்கள், தமிழனை மேலும் வெட்டியான வேடிக்கை மனிதனாக்கும் முயற்சியில் மும்முரமாக இறங்கிவிட்டது. இதில் சில சின்னத்திரை ஊடகங்கள், “வேடிக்கைத் தமிழர்களே பக்கத்து வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை நீங்கள் ஏன் கதவைத் திறந்து பார்க்க வேண்டும். இதோ நாங்களே அந்த அந்தரங்கப் பிரச்சனைகளை அள்ளி வந்து உங்கள் முன் அரங்கேற்றுகிறோம். இனிக் கதவை மூடிக்கொண்டு உங்கள் வீட்டு முற்றத்திலேயே பக்கத்துவீட்டு சமாச்சாரங்களை பார்த்துக் களியுங்கள்” என்ற பற்பல கேவலமான நிகழ்ச்சிகளைக் கொண்டு வந்து ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் கொட்டிவிட்டுப் போகின்றது. இதில் செயற்கை முறையிலான குடும்பச் சண்டைகள், மற்றும் இயற்கை முறையிலான குடும்பச் சண்டைகளை நான், நீ என போட்டி போட்டுக் கொண்டு காட்டத் துவங்கி விட்டது தமிழ் சின்னத்திரை ஊடகங்கள்.

ஆமா… குறிப்பாக தற்போது தொலைக்காட்சியில் குடும்பத்தினருக்குள் இருக்கும் பிரச்சினைக்கு சமரசம் என்ற பெயரில் பல்வேறு சேனல்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சன் டி.வி.யில் குஷ்பு தொடங்கி ஜி டி வியில் லட்சுமி ராமகிருஷ்ணன், மலையாள டி வியில் ஊர்வசி, தெலுங்கு டி வியில் ரோஜா உள்ளிட்ட பலர் இதுபோன்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் இது போன்ற இந்நிகழ்ச்சிகள் குறித்து நடிகை ஸ்ரீப்ரியா குறித்து தன் ட்விட்டர் பேஜில் , “தம்பதிகளுக்கிடையே பிரச்சினை வந்தால் அதைத் தீர்த்து வைக்க குடும்ப நல நீதிமன்றம் இருக்கிறது. கிரிமினல் குற்றங்களை கையாள தனித்தனி சட்டப் பிரிவுகள் உள்ளன.தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நம்மைப் போன்ற நடிகர்கள் உட்கார்ந்து மற்றவர்களின் பிரச்சினைகளுக்கும் வலிகளுக்கும் தீர்வு சொல்வதை என்னால் பார்க்க முடியவில்லை / ஜீரணிக்க முடியவில்லை. இதை தயவு செய்து நிறுத்தலாமே? நாம் கைப்பிடி அளவு கற்று வைத்திருக்கும் கலைகளுக்கு மட்டும் நடுவர்களாக இருப்போமே? ப்ளீஸ்” என்று  தெரிவித்திருக்கிறார் ஸ்ரீப்ரியா.

மேலும் அவர் ‘இது போன்ற பிரச்சனைகளை தீர்த்து வைக்க நாம் நீதிபதிகள் அல்ல என்பதை உணருங்கள். நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது தயவு செய்து இப்படி செய்வதை நிறுத்துங்கள்’ என்று அவர் உரத்தக் குரலில் கேட்டுக்கொண்டுள்ளார்.