ஆக்டர் விவேக்-க்கு ஹார்ட் அட்டாக் & ஆஞ்சியோ என்றால் என்ன? முழு விபரம்!

பொதுவாக மனிதர்களுக்கு 40 வயதுக்கு மேல் ஆகிவிட்டால் பல்வேறு நோய்த்தொற்று, நோய்கள் மற்றும் உடல் ரீதியான பாதிப்புகள் ஆகியவற்றிற்கு உள்ளாகின்றனர். இது போன்ற பல்வேறு நோய் தொற்றுகளிலும் நம்மை காத்துக்கொள்ள தினந்தோறும் உடற்பயிற்சி செய்தாலே போதும். யோகா மற்றும் பிராணயாமா செய்வதை அதிகளவில் விரும்புகிறேன். சாப்பிடும் எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு. சில உணவுப் பொருட்களில் மட்டும் நான் கட்டுப்பாடு வைத்திருக்கிறேன் என்று கூறி நான் பொய் சொல்ல விரும்பவில்லை. உண்மையில், எந்த கடுமையான உணவுகளையும் நான் பின்பற்றுவதில்லை. எல்லாவற்றையும் சாப்பிடுகிறேன். அதில், மிதமானது தான் முக்கியம் என்றெல்லாம் சொல்லி இருந்த நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று (ஏப்.15) கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், இன்று (ஏப்.16) அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் உடல்நிலை குறித்து சிம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தற்போது செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”நடிகர் விவேக்கிற்கு ஏற்பட்ட பாதிப்புக்கும், கரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவருக்கு ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. எக்மோ கருவி உதவியுடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதாவது காலை 11 மணியளவில் சுயநினைவு இல்லாத நிலையில் விவேக் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். கொரோனா தடுப்பூசியால் நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்படவில்லை. விவேக்கின் இதயத்தின் ஒரு புறத்தில் 100 சதவீதம் அடைப்பு உள்ளது. இதயத்தில் ஏற்பட்ட அடைப்பால் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் மிகவும் குறைந்துள்ளது. அவருக்கு மாரடைப்பு மற்றும் இருதய நோய்க்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  எக்மோ கருவி உதவியுடன் விவேக்கிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருக்கு கொரோனா தொற்று ஏதும் பாதிக்கப்படவில்லை, தற்போது கவலைக்கிடமான நிலையில் உள்ள நடிகர் விவேக்கின் உடல்நிலை குறித்து 24 மணி நேரத்துக்குப் பிறகே தெரியவரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்:

இதயத்திற்கு, ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்களில், அடைப்பு ஏற்படுவதால் ரத்த ஓட்டம் தடைபடும். இது மாரடைப்புக்கு வழி வகுத்து விடுகிறது. ரத்த நாள அடைப்பை, அறுவைச் சிகிச்சை இன்றி சரி செய்ய, ‘ஆஞ்சியோ பிளாஸ்டி’ என்ற சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடையின் நரம்பு வழியாக, கதீட்டர் கம்பி வழியாக, ‘ஸ்டென்ட்’ என்ற விரியக்கூடிய உலோக வலை அனுப்பப்படும்.அடைப்பு ஏற்பட்ட பகுதியில் வைத்து, ‘ஸ்டென்ட்’ விரிவடைய செய்யப்படும். இதனால், அடைப்பு நீங்கி, ரத்த ஓட்டம் சீரடையும். இதுதான் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை.

இதில் மற்றொரு முறை உள்ளது அது… ‘ஆஞ்சியோஜெட் திராம்பெக்டமி’ சிகிச்சை. இதயத்திற்கு செல்லும் ரத்த நாள அடைப்பை நீக்க, ‘ஸ்டென்ட்’ பொருத்தும் வழிமுறையை, சிறு மாற்றத்துடன் செய்வது, ‘ஆஞ்சியோஜெட் திரம்பெக்டமி’ எனப்படுகிறது.

இதற்காக, தயாரிக்கப்பட்ட வளை கம்பியின் முனையில், இரண்டு பம்புகள் இணைக்கப்பட்டு இருக்கும். இதை, நோயாளியின் தொடை ரத்தக்குழாய் வழியாக, கணினி உதவியுடன், இதயத்தின் அடைபட்ட ரத்தக்குழாய்க்கு அனுப்புவர்.

அங்கு சென்றதும், ரத்தக்குழாயை அடைத்திருக்கும் ரத்தக் கட்டியின்மீது, ‘சலைன்’ எனும் திரவத்தை பல மடங்கு அழுத்தத்தில், ஒரு பம்ப் பீய்ச்சியடிக்கும். அப்போது அந்த இடத்தில், வெற்றிடம் உருவாகும்.

இதன் பலனால், ஒரு வெடிகுண்டு வெடித்து சிதறுவதுபோல, அந்த ரத்தக்கட்டி சிதறி தூளாகும். தொடர்ந்து, வளைகம்பி முனையில் உள்ள அடுத்த பம்ப் இத்துகள்களை ஒன்றுவிடாமல் உறிஞ்சிக்கொள்ளும். இதனால், ரத்தக்குழாயின் அடைப்பு, 100 சதவீதம் வரை துல்லியமாகவும் நீக்கப்படும். மாரடைப்பு எனும் அபாயம் முற்றிலும் விலகும்.

இந்த சிகிச்சைக்கு பின், இதய ரத்தக்குழாயில், ஸ்டென்ட் பொருத்தப்படுவதில்லை. ஸ்டென்ட் சிகிச்சைக்குப் பின், மாரடைப்பு நோயாளிகள் வழக்கமாக சாப்பிடும் மாத்திரைகளைக் குறைத்துக் கொள்ளலாம். சிகிச்சை முடிந்த ஒரு வாரத்தில் வழக்கமான பணிகளை செய்யலாம்.

இதைவிட மேலாக இதயத்தில், எவ்வித செயற்கைத் துணைப்பொருளும் பொருத்தப்படாமல் இயற்கை வழியில் இதயம் இயங்க இது வழிவகுக்கிறது; கடுமையான மாரடைப்பு வந்தவருக்கும் இந்த சிகிச்சை பலன் தரும் என்கின்றனர் டாக்டர்கள்.