August 2, 2021

ஜெ. மரணம் குறித்து சமூக வலைத்தளத்தில் விளம்பரத்திற்காக விவகாரங்களை பெரிதாக்குவதா? சரத் அதிருப்தி

ஜெ. மரணத்தில் நேர்ந்த சந்தேகங்களை போக்க பிரதமர் மோடி முஇன் வர வேண்டும் என்று நடிகை கெளதமி எழுதிய லட்ட்ர் சர்ச்சையே இன்னும் ஓய வில்லை. இதனிடையே நடிகர் சரத்குமார் மோடிக்கு ஒரு கடிதாசு எழுதி அனுப்பியிருக்கிறார்.

sarath dec 10

அதில், “நான் பிரதம அமைச்சருக்கு எழுதிய கடிதத்தை பலர் தமிழில் கேட்டுக்கொண்டதால் என் கருத்துக்களை தமிழிலும் இங்கே பதிவு செய்கிறேன்.எனது மனசாட்சிப்படி என் அறிவுக்கு புலப்படும் நியாயமான காரணங்களின் அடிப்படையில் எனது சுய அனுபவங்களின் வழியாக இந்த கருத்துக்களை நான் எழுதுகிறேன்.

நமது மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உடல் நிலை குறைவு ஏற்பட்டதில் இருந்து அவர்கள் மறைவு வரை, சமூக வலைத்தளங்களில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தங்களது கனவிற்கும் கற்பனைக்கும் எட்டும் கதைகளை எல்லாம் வெளியிடுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது நமது அரசு இயந்திரங்களையும் ஜனநாயக அடிப்படையிலும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட்ட அனைத்து அதிகாரிகளையும் சந்தேகிக்கும் நோக்கத்தோடு அணுகும் பதிவு ஆகும்.

மத்திய அமைச்சரவை மற்றும் நாட்டின் பிரதம அமைச்சரின் பிரதிநிதியாகவும் ஆளுநரும், மூன்று மூத்த மத்திய அமைச்சர்களும் மருத்துவமனைக்கு வருகை புரிந்து அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்தார்கள். அவர்கள், முதல்வருக்கு அளிக்கப்பட்டு வந்த உலகத்தரம் மிக்க சிகிச்சை பற்றி விளக்கி கூறியதை அறிவோம்.
மேலும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் படும் எந்த ஒரு நோயாளியையும் பார்ப்பதற்கு ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்க வாய்ப்பிருக்கலாம். இந்த நடவடிக்கை நோயாளிகளின் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக அனைத்து மருத்துவமனைகளும் கடைபிடிக்கும் ஒரு விதியாகும். “Visitors not allowed” என்பதை இந்த சமூக வலைத்தளத்தில் விளம்பரத்திற்காக விவகாரங்களை பெரிதாக்கும் “சாமானியர்கள்’ அறியமாட்டார்களா என்ன?

எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் யாரையும் அனுமதிக்கவில்லை என்றும் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும் குறை கூறுபவர் அப்பல்லோ மருத்துவ அறிக்கைகள், ஆளுநர் அறிக்கைகளை படித்திருக்கவில்லையா? அவர்கள் ஆளுநர் வெளியிட்ட அறிக்கைகளின் மீதும், மத்திய அமைச்சர்கள் அளித்த விளக்கத்தின் மீதும் நம்பிக்கை இல்லாதவர்கள் நமது மறைந்த முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மருத்துவமனைக்கு வந்து விளக்கம் கோரியிருக்கலாமே?

ஆளுநரும் அமைச்சர்களும் உண்மைக்கு புறம்பாக செய்தி வெளியிட்டார்கள் என்று இவர்கள் குற்றம் சாட்டினால், ஆளுநரையும் அமைச்சர்களையும் யாராவது நிர்பந்தப்படுத்த முடியுமா? என்ற கேள்விக்கு இவர்கள் பதில் சொல்லமுடியுமா?எதிர்க்கட்சியை சார்ந்தவர்கள் கண்ணியம் காத்து அரசியல் நாகரீகத்தை வெளிப்படுத்தி இருக்கும் இந்த தருணத்தில், சிலர் திடீர் என்று ஏற்பட்ட சமூக அக்கறையினால் தமிழகத்தின் அமைதியை குலைக்க எண்ணுகிறார்கள் என்றே கருத தோன்றுகிறது.

இப்படி அவர்கள் தரமற்ற விமர்சனங்கள் செய்வதும் குறை கூறுவதும், தனிப்பட்ட மனிதர்களை மட்டுமல்ல, ஆளுநர், அவரது அதிகாரம், அமைச்சர்கள், அவர்களது நம்பகத்தன்மை, நமது நாட்டின் இறையாண்மை, சட்ட திட்டங்கள் அவற்றை நிறைவேற்றுபவர்களின் அதிகாரங்கள், உலகத்தரத்தில், இந்தியாவிற்கு பெருமை சேர்த்து மருத்துவ சேவை புரிந்து கொண்டிருக்கும் புகழ்பெற்ற மருத்துவமனை, அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள், ரிச்சர்ட் பெல் போன்ற நிபுணர்கள், இந்தியாவின் மருத்துவ துறையை வழிநடத்தும் எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள், நீண்ட காலமாக உடனிருந்து கடந்த 75 நாட்களாக அருகிருந்து கவனித்துக்கொண்டவர்கள் என பல்வேறு மக்களையும் வேதனைக்கு உள்ளாக்கி உள்ளனர்.

மறைந்த முதல்வரை இழந்து அந்த துக்கத்தில் இருந்து மீள்வதற்கு முன்னரே அவர்களை மேலும் காயப்படுத்துவது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்றதாகும். மேல்கூறிப்பிட்டுள்ள அனைத்து தரப்பினரின் அயராத பணியையும் உண்மையான அக்கறையையும் நாம் பாராட்ட மனதில்லாமல் இருந்தாலும் அரை வேக்காட்டுத்தனமாக கருத்துக்களை பதிவு செய்து குழப்பத்தை ஏற்படுத்தவேண்டாம் என்பது எனது உண்மையான ஆதங்கம்” என்று தெரிவித்துள்ளார்.