ரகுவரன் காலமான தினமின்று!

ரகுவரன் காலமான தினமின்று!

டிசலான தேகம். நீண்டு கோதி விட்ட கேசம். நீண்ட செவ்வக முகம். கரகரத்த குரல்.. பேசுவதற்கு முன் ஒரு முறை எதிரே இருப்பவரை பார்த்து முகத்தை மேலும் கீழும் சன்னமாக ஆட்டி விட்டு….உதட்டை கடிப்பது போல இல்லாமல் மடக்கி பிடித்துக் கொள்வது போல செய்து…..கண்கள் உருட்டி பார்க்கும் போதே கிளாப்… திரையைக் கிழிக்கத் துவங்கும். உடல் மொழியில் வில்லத்தனத்தைக் கொண்டு வந்து அதையும் ரசிக்க வைத்த நடிகன்.“ஐ நோ….. ஐ நோ.. ஐ நோ… ஐ நோ…. ஐ நோ…… என்று, ஒரு பக்கம் பேச வேண்டிய வசனத்தை ஒரு வார்த்தையை திருப்பி திருப்பி சொல்லி வில்லத்தனத்தில் புதுமையை புகுத்திய ரகுவரனை தமிழ் சினிமா ஒரு போதும் மறக்க இயலாது. அதனால்தன் “ரகுவரன் போன்ற ஒரு நடிகரை தமிழ் சினிமா இன்று வரை பார்த்ததில்லை இனியும் பார்க்கப்போவது இல்லை” தமிழ் சினிமாவில் இன்றைக்கும் பகிரப்படும் வார்த்தைகள் இவை.

கதையின் நாயகன், கொடூர வில்லன், சிறந்த தந்தை, நம்பிக்கைக்குரிய நண்பன் என ஒரே நேரத்தில் எல்லாவித கதா பாத்திரங்களையும் ஏற்று நடிக்க தகுதியான ஒரு நடிகர் என்றால் அது தமிழ் சினிமாவின் இதுநாள்வரை ரகுவரன் மட்டுமே. நடை, உடை, பாவனை, பேச்சு என ரகுவரனின் ஒவ்வொரு விஷயமும்தனித்துவமானது தான். அவரின் குரலைப் பேசாத மிமிக்கிரி ஆர்டிஸ்டுகளே இல்லை

அடையாறு திரைப்படக் கல்லூரியில் முறையாக நடிப்பு பயின்று தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான ரகுவரனுக்கு நாயகனாக தொடர்ந்து வெற்றி அமையவில்லை. முன்னரே சொன்னது போல் ஒல்லியான உடல், கனத்த குரல் இவை நாயகனுக்கு தகுதி இல்லாதவை என விமர்சனங்கள் வந்தபோது பூவிழி வாசலிலே திரைப்படத்தில் வில்லனாக நடித்து தன் நடிப்புத் திறனை ரசிகர்கள் மத்தியில் நிரூபித்தார் ரகுவரன். தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் வரத் தொடங்கியபோது புரியாத புதிர் திரைப்படத்தில் சைக்கோ வில்லனாக ரகுவரன் வெளிப்படுத்திய நடிப்பு இதுநாள் வரை தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒன்றாக மாறிப்போனது. தொடர்ந்து வில்லனாக மட்டுமல்லாது குணச்சித்திர கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கத் தொடங்கிய ரகுவரன் தனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு உயிர் ஊட்டி அந்த கதாபாத்திரங்கள் திரையில் நிலைபெறச் செய்தார்.

பாட்ஷா திரைப்படத்தில் ஆண்டனி என்ற கதாபாத்திரத்தில் ரகுவரனின் நடிப்பு ஹாலிவுட் திரையுலகில் வெளியான பேட்மேன் திரைப்படத்தில் வில்லனாக கொண்டாடப்பட்ட ஜோக்கர் கதாபாத்திரத்திற்கு நிகராக இளம் தலைமுறையினராலும் கொண்டாடப்படுகிறது. மாணிக் பாட்ஷா என்ற ரஜினியின் கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்பட ஆண்டனி என்ற வலிமையான வில்லனை பாட்ஷா வீழ்த்தியது முக்கிய காரணம்.

பாட்ஷா திரைப்படம் ரகுவரனுக்கு மைல்கல் என்றால் சங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வன் திரைப்படம் ரகுவரன் நடிப்பு கிரீடத்தின் வைரக்கல். முதல்வர் கதாபாத்திரத்தில் ரகுவரன் வெளிப்படுத்திய முகபாவங்கள் இன்னும் ஒரு நடிகரால் மீண்டும் சிறையில் நிகழ்த்த முடியாத ஒரு அதிசயம்.

அந்த 1996ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை தமிழின் மிக பிசியான நடிகராக வலம் வந்த ரகுவரன் இதே காலகட்டத்தில் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் தனது வெற்றிக் கொடியை உயரமாக பறக்க விட்டார். அமர்க்களம் திரைப்படத்தில் ரகுவரன் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் நடிக்க பேசப்பட்ட நடிகர் அமிதாப் பச்சன். அமிதாப் பச்சனை விட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் என பாராட்டப்பட்ட ரகுவரன் தென்னகத்தின் அமிதாபச்சன் என கொண்டாடப்பட்டார்.

ஆரம்ப காலத்தில் இருந்தே வெரைட்டியில் வெளுத்துக் கொண்டிருந்த ரகுவரனுக்கு தனிப்பட்ட வாழ்வில் அத்தனை ஏற்றம் இல்லை. சினிமாவின் சாபம் நல்ல கலைஞனை பிடித்தாட்டும் என்பது ரகுவரனுக்கும் பொருந்தும். தனக்குள் ஒரு இசைக் கலைஞனை சுமந்து கொண்டு திரிந்த ரகுவரன்… தனக்குள் மட்டுமே பெருவெடிப்பை நிகழ்த்திக் கொண்டிருந்தார். தன்னை மீறி எழ இந்த காலம் அனுமதிக்கவே இல்லை என்பது தான் வருத்தத்தின் மெல்லிசை. அதனால் ஆசை மனைவி, மகனை பிரிந்தவர் குடிக்கு அடிமையாகி போனார்

இறுதி நாட்களில் ஆம்புலன்சில் பயணம் செய்து கூட 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்த ரகுவரன் 2008ஆம் ஆண்டு 49 வயதில் இதே மார்ச் 19ல் மண்ணுலகை விட்டு பிரிந்தார்.

காலத்தால் அழிக்க முடியாத பல கலை படைப்புகளை அரங்கேற்றி சென்ற ரகுவரன் இனி நடிப்பு பயிலும் இளைஞர்களுக்கு பாடமாக என்றும் நிலைத்திருக்கிறார் என்பதே நிஜம்

error: Content is protected !!