September 29, 2021

காவல்துறை நலனுக்கான அறக்கட்டளைக்கு பத்து லட்சம் நிதி : நடிகர் கார்த்தி அதிரடி!

தேசிய அளவில் போலீசார் தற்கொலையில்  தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்து  இருந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அருண் என்ற காவலர் கடந்த வாரம்  தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் தொடர்ச்சியாக சென்னை அயனாவரம் காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இவ்வாறு இம்மாத தொடக்கத்தில் மட்டும் சென்னைக் காவல்துறையை சேர்ந்த இரண்டு பேர் தற்கொலை செய்துகொண்டனர். இதற்கெல்லாம் காவல்துறையினரின் பணிச்சுமையும், அதனால் ஏற்படும் மன அழுத்தமும் தான் காரணம் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

காவல்துறையினர் இடைவேளையின்றி நீண்ட நேரம் பணியாற்ற வேண்டியிருப்பதால், குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடிவதில்லை. பல காவலர்கள் பணி நிமித்தமாக குடும்பத்தினரை பிரிந்து வேறு ஊரில் வாழ வேண்டியிருக்கிறது. பணியிடத்தில் பல நேரங்களில் உயரதிகாரிகளால் இழைக்கப்படும் அவமானங்களும் அவர்களை பாதிக்கின்றன. இதனால் காவலர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. அதோடு, பணிச்சுமை காரணமாக ஏற்படும் மன அழுத்தமும் காவலர்களை தற்கொலைக்கு தூண்டுகிறது. மேலும், உணவுப் பழக்கவழக்கங்களால் ஏற்படும் நோய்களும் காவலர்கள் இளம் வயதிலேயே உயிரிழப்பதற்கு காரணமாக அமைகிறது. இந்நிலையில்  நேர்மையான அதிகாரிகள் தைரியமாக இருப்பதற்கு காவல்துறை அதிகாரிகளுக்கான பொதுநல அறக்கட்டளை அனைத்து இடங்களிலும் ஏற்படுத்த வேண்டும்’ என்று நடிகர் கார்த்தி யோசனை கூறியிருக்கிறார்.

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்ததன் மூலம் காவல் துறையினரின் கஷ்டங்களை கார்த்தி தெரிந்து கொண்டதால், காவல் துறை சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். மேலும் காவல் துறையினர் சம்பந்தமான நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளை தொடக்க விழா கோவை ஆவாரம் பாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று (மார்ச் 18) நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

“காவலர் உடை அணியும் போது திமிர் ஏற்படுகிறது. சம்பளத்திற்காக இந்த வேலை செய்ய முடியாது. மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் தான் இந்த பணி செய்ய முடியும். நேர்மையான காவல்துறை அதிகாரியாக நடிப்பதே இவ்வளவு கஷ்டம் என்றால், நேர்மையாக இருப்பது எவ்வளவு கடினம் என்று தீரன் படம் நடிக்கும் போது எனக்குத் தெரிந்தது. போலீசார் இரவு பகல் பார்க்காமல் உழைக்கிறார்கள் அவர்களுக்கு பொதுமக்கள் மரியாதை அளிக்க வேண்டும். போலீசாரின் மன உளைச்சலை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து பேசியவர், “பணியில் உள்ள காவலர்கள் தற்கொலை செய்யும் சம்பவம் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகிறது. பணியில் உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்கள் பாதிப்பில் உள்ளதைப் பார்க்கும்போது தான், அறக்கட்டளை தொடங்க வேண்டும் என்று தோன்றியது.  எவ்வளவு சொத்து சேர்த்தாலும் பசி, பிணி, தூக்கம், காதல் போன்றவை எல்லோருக்கும் சமம். நாட்டைக் காப்பாற்றுகிற ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்றபிறகு வீட்டைக் காப்பாற்றுகிற செக்யூரிட்டிகளாக மாறுவது வேதனை” நேர்மையாக உழைத்ததற்கு இந்தச் சமூகம் என்ன செய்தது என்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தோன்றிவிடக் கூடாது. நேர்மையான அதிகாரிகள் தைரியமாக இருப்பதற்கு இதுபோன்ற அறக்கட்டளை அனைத்து இடங்களிலும் ஏற்படுத்த வேண்டும். இந்த அறக்கட்டளைக்காக எங்கள் குடும்பம் சார்பில் ரூ.10 லட்சம் நன்கொடையாக வழங்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய கார்த்தி, “காவல்துறை உயரதிகாரிகள் கீழ்மட்ட அலுவலர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வந்தாலும், அது அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. காவலர்களின் மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளைக் களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நேர்மையாக நீங்கள் நடந்துகொள்ள வேண்டும் என்றால் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கிறது” என்றார்.

இந்த விழாவில் நடிகர் சிவகுமார், மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் பாரி, கோவை மாநகர காவல்துறை ஆணையர் பெரியய்யா, ஓய்வு பெற்ற சி.பி.ஐ. முன்னாள் டி.எஸ்.பி. வெள்ளியங்கிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.