February 7, 2023

நடிகரும் இயக்குநருமான ஈ.ராமதாஸ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்!

மிழ் சினிமாவின் பிரபல நடிகரும் எழுத்தாளருமான ஈ.ராமதாஸ் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். இதனை அவரின் மகன் கலைச்செல்வன் சமூக வலைத்தளங்களில் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனது தந்தை எழுத்தாளர், இயக்குநர், நடிகர் ஈ.ராமதாஸ் மாரடைப்பால் இறைவனடி சேர்ந்தார். இறுதி சடங்குகள் 24/01/2023 காலை 11 மணி -மாலை 5 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற இருக்கிறது என்று வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தைச் சேர்ந்த ராமதாஸ், சினிமா மீதான மோகத்தால் சென்னைக்கு புலம்பெயர்ந்தவர். எழுத்தாளராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர். ஆயிரம் பூக்கள் மலரட்டும், ராஜா ராஜாதான், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு, இராவணன், வாழ்க ஜனநாயகம், சுயம்வரம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அதேபோல் எழுத்தாளராக எண்ணற்ற படங்களில் வேலை பார்த்துள்ளார்.

சகல நட்பூக்களிடமும் சரளமாகப் பேசும் ராமதாஸ் நம்மிடம் ‘ சினிமாவுக்கு வந்தால் எப்படிப்பட்ட கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று தெரியாமல் இல்லை. அவை அனைத்தும் தெரிந்துதான் சினிமாவுக்கு வந்தேன். அந்த வகையில் எதிர்பார்த்து வந்த விஷயங்களைவிட எதிர்பாராத விஷயங்கள்தான் அதிகமாக நடந்தன. நான் டைரக்டராகி உருவாகிய படம் ‘ஆயிரம் பூக்கள் மலரட்டும்’. இதுவரை ஐம்பத்தைந்து படங்களுக்கு வசனம் எழுதியும், ஆறு படங்களை இயக்கியும் உள்ளேன். தொடர்ந்து டைரக்‌ஷன் பண்ண நினைத்தாலும் உடல்நிலை ஒத்துழைக்கலை. டைரக்‌ஷன் என்பது சாதாரண வேலை கிடையாது. அதற்கு என்று தனி எனர்ஜி வேண்டும். அதனால் டைரக்‌ஷனைத் தொடரமுடியவில்லை. அன்றும் இன்றும் பந்து ஒன்றுதான். என்னால்தான் அடிக்க முடியவிலை. ஆனால் என்னால் சும்மா இருக்க முடியாது. அதனால்தான் நடிக்க வந்தேன். என்னுடைய இயக்குநர் மணிவண்ணன் சார் பலமுறை என்னை நடிக்கச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறார். அப்போதெல்லாம் அவர் சொன்னதைத் தட்டிக் கழித்திருக்கிறேன்.

ஆனால் டைரக்ர் சரண் பிடிவாதமாக ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் நடிக்க வைத்தார். நடிகராக கிட்டத்தட்ட ஐம்பது படங்களை தாண்டி விட்டேன். சினிமாவுக்கு இப்போது நிறைய இளைஞர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது… நிறைய படியுங்கள். படங்களைப் பார்ப்பதைவிட இலக்கியம், நாவல் என்று அனைத்தையும் படியுங்கள். மூச்சுப் பயிற்சிக்கு யோகா உதவுதுபோல் சினிமாவுக்கு படிப்பு மட்டுமே கற்பனை வளத்தை அதிகமாக்கும். புதிய சிந்தனைகள் தோன்றும்.

நம் சிந்தனை சரியா, தவறா என்று முடிவு எடுக்க உதவும். வாசிப்பு ஒரு படைப்பாளிக்கு ஆக்சிஜன் மாதிரி. நான் சொல்லும் விஷயத்தை உணர்ந்தால்தான் புரியும். புத்தகத்தை கையில் எடுத்து பக்கத்தை புரட்டும் பழக்கத்துக்கு ஈடு இணை எதுவுமில்லை. ஆண்ட்ராயிட் போனில் படிப்பது வேறு மாதிரி அனுபவம். கிளி ஜோசியர் தினமும் கிளி, சில நெல்மணிகளை எடுத்துக்கொண்டு தன்னம்பிக்கையுடன் கிளம்புவது மாதிரி நம்பிக்கையோடு தேடினால் சாதிக்கலாம்.” அப்படீன்னு சொல்லி இருந்தார்

அவரின் மறைவுக்கு ஆந்தை ரிப்போர்ட்டர் சார்பில் அஞ்சலிகள்