March 27, 2023

ஆக்ஸ்போர்ட் டிக்‌ஷனரியில் அப்பா, அண்ணா., அச்சச்சோ!

உலகளவில் பிரசித்தி பெற்ற ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியானது 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. உலகிலுள்ள அகராதிகளிலேயே 6 லட்சம் வார்த்தைகளை கொண்டுள்ள அகராதி இது மட்டும்தான். இந்த அகராதியின் ஆசிரியர் குழு ஒவ்வொரு ஆண்டும் மார்ச், சூன், செப்டம்பர், டிசம்பர் என நான்கு முறை, உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் பிரபலமான வார்த்தைகளை தன்னுடைய அகராதியில் சேர்ப்பது வழக்கம். ஆனால் அகராதியில் சேர்க்கப்படுவதற்கு முன் அந்த வார்த்தை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? எத்தனை மக்களால் பேசப்படுகிறது? என ஆராய்ந்துதான் அகராதியில் இணைக்கும். அந்த வகையில் மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் இதற்கான வார்த்தை சேர்க்கை நடைபெறும். இந்த ஆண்டு இதுவரை உலகின் பல மொழிகளில் உள்ள பல ஆயிரம் வார்த்தைகள், ஆங்கில வார்த்தைகளாக ஆக்ஸ்போர்டு அகராதியில் இடம் பிடித்துள்ளது.

இந்த நிலையில் ஆக்ஸ் போர்டு ஆங்கில அகராதியின் புதிய பதிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதில் இந்திய மொழிகளில் இருந்து 70 வார்த்தைகள் சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.தமிழ், தெலுங்கில் ‘அண்ணா’ என்று மூத்தவர்களை அழைப்பது வழக்கத்தில் உள்ளது. அதை அப்படியே ஆங்கில வார்த்தையாக இடம் பெற செய்துள்ளனர்.

‘அண்ணா’ என்பது ஏற்கனவே ஆக்ஸ்போர்டு அகராதியில் நாணயமான ‘‘அணா’’வை குறிக்கும் பெயர்ச் சொல்லாக உள்ளது. தற்போது அண்ணா 2 (அண்ணன்) என்று குறிப்பிட்டு சேர்த்துள்ளனர். அப்பா என்ற உருது வார்த்தையும் ‘‘தந்தை’’யை குறிக்கும் என்று அந்த அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆச்சரியமான தகவல் அல்லது சந்தேகப்படும் படியான தகவலை கேள்விப்படும் போது ‘‘அச்சச்சோ’’ என்பார்கள். அந்த வார்த்தையும் ஆங்கிலமாக மாறியுள்ளது. சூர்ய நமஸ்காரமும் ஆங்கிலமாகியுள்ளது. இந்திய மொழிகள், வார்த்தைகளில் தமிழ் மொழியில் உள்ள வார்த்தைகள்தான் அதிக அளவில் ஆங்கிலமாக மாறி ஆக்ஸ்போர்டு அகராதியில் இடம்பிடித்துள்ளது