Exclusive

‘வட்டார இலக்கியத்தின் முன்னத்தி ஏர்’ கி.ராஜநாராயணன் – அஞ்சலி குறிப்புகள்!

சாகித்ய அகாடமி விருதுபெற்ற முதுபெரும் எழுத்தாளர் கி.ரா என்ற கி.ராஜநாராயணன் வயது மூப்பால் நேற்றிரவு புதுச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 99. கரிசல் இலக்கியங்களின் தந்தை என்றழைக்கப்பட்டவர், உன்னதக் கதை சொல்லி, வட்டார இலக்கியத்தின் ‘முன்னத்தி ஏர்’, சொலவடை விளக்க வாசி, ,சிறுகதை, நாவல், குறுநாவல், கிராமிய கதைகள், அடல்ஸ் கதைகளை அம்பலத்துக் கொண்டாந்தவர், வட்டார வழக்கு அகராதி உருவாக்கியவர் என இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் இயங்கிய கி.ராஜநாராயணன், பல்வேறு எழுத்தாளர்களுக்கு முன்மாதியாக திகழ்ந்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் கிராமத்தில் 1922 ம் ஆண்டு கி.ராஜநாரயணன் பிறந்தார். இவரது முழுப்பெயர் ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயண பெருமாள் ராமானுஜ நாயக்கர். இதை சுருக்கி கி.ராஜ நாராயணன் என்று வைத்து கொண்டார். இவர், 7ம் வகுப்பு வரை மட்டுமே அவர் கல்வி பயின்றார். விவசாயியாக இருந்த கி.ரா, 40 வயதுக்கு பிறகே எழுத தொடங்கினார்.

தமிழ் இலக்கியத்தில் விவசாயிகளின் பாடுகளை இவர் அளவிற்கு வேறு யாரும் நுட்பமாகபேசி இருப்பார்களா என தெரியவில்லை. ஆவாரம்பூ செடியை இடைக்காட்டார் சித்தர் எப்படி பயன்படுத்தினார் என்று திம்மய நாய்க்கர்கதையாய் சொல்லும்போது ( கிடை), ஆட்டுக்குட்டி மாதிரி நாம் திம்மய நாய்க்கர் பின்னாலேயே போவோம். பஞ்சம் வந்ததுன்னா, ஆவாரம் செடி மட்டுமேமுளைக்கும். மத்ததெல்லாம் முளைக்காதுன்னு அவர் சொல்லும்போது வாய்மூடாமல் கேட்போம்.கவண் கல்லுடன் கிராமத்தில் திரியும் திருவேதி நாய்க்கர் ட்ட (பிஞ்சுகள்) பறவைகள் பற்றிய ஞானம் அபாரம். வல்லயத்தான் பறவையின் விஷேசத்தை சொல்வார். பறவை வேட்டையாடுபவர் என்ற போதிலும், பயிர் பச்சைகளை கெடுக்கும் பூச்சி புழுக்களை பிடித்து தின்னும் பறவைகளை கொல்ல மாட்டார். அவருக்கு என்று சில தர்ம நியாயங்கள் உண்டு. பழங்களையும் தானியங்களையும் உண்ணும் பறவைகளின் மாமிசமே ருசியாக இருக்கும் என்று ஒரு செய்தியை சொல்வார்.

கரிசல் காட்டு விவசாயி துரைசாமி நாயக்கரின் அயராத உழைப்பைப் பற்றி தெரிஞ்சாகணும் என்றால் “ கரிசல்காட்டில் ஒரு சம்சாரி “ குறுநாவலை படிக்கணும். ஒத்தைக்கொம்பு காளைமாட்டை வாங்கி, கூட்டு மாடு சேர்த்து உழவடித்து, அது பின்னடைய ஆரம்பிக்கும் நேரம் பார்த்து, நுகத்தடியின் சரிமத்தியில் இருக்க வேண்டிய ஏர்க்காலை கூட்டு மாடான காங்கேயம் காளையின் பக்கத்தில் தள்ளிப் பூட்டி விடுவாராம். ஒத்தைக்கொம்பு மாடு பல வருஷங்கள் ஈடுகொடுத்து வந்தது என்று சொல்வார்.விவசாயிகளுக்கு கிணறு தோண்ட அரசு கடன்தருவது என்பது எவ்வளவு பெரிய ஏமாற்று வித்தைஎன்பதை “மாயமான்” கதை சொல்லும்.மழைபொய்த்த காலங்களில் கூட, ஏழை விவசாயி, வீட்டுத்தீர்வை கட்டவில்லை என்று சொல்லி, வீட்டின் வாசல்கதவை ஜப்தி செய்துஎடுத்துச்செல்லும் அரசு எந்திரத்தின் கோர முகத்தை “ கதவு “ சிறுகதையில் சொல்லி இருப்பார்.

அவுரி செடியில் இருந்து நீலம் எடுக்கப்பட்டுவெளிநாட்டிற்கு அனுப்பப்படும். அதெல்லாம் ஒரு காலம். இயற்கை சாயமான அவுரி செடிகளை பயிரிட வேண்டும் என்று வெள்ளைக்காரர்கள் ஆண்டபோது கட்டாயப்படுத்தியதாக சொல்வார்கள். வங்காளத்திலும், தமிழ்நாட்டிலும் அவுரி அதிகமாக பயிரிட்டார்கள். அதற்குதண்ணீர் அதிகம் தேவை இல்லை. கரிசல்காடுகளில் மழை அதிகம் இருக்காது என்பதால், அவுரிசெடிகள் அதிகம். நல்ல விலையும் கிடைத்தது.அப்படிப்பட்ட அவுரி பயிரிட்ட விவசாயியின் கதையை “ அவுரி “ என்ற கதையில் சொல்லி இருப்பார்.

கொஞ்சம் பின்னோக்கி பார்த்தால் கி. ராஜநாராயணனும், கு.அழகிரிசாமியும் பக்கத்துப் பக்கத்து வீட்டுக்காரர்கள். குழந்தைப் பருவத்திலிருந்து ஒரு தெருவின் புழுதியில் ஒன்றாய்க் கட்டிப் புரண்டு விளையாடியவர்கள். பின்னால் அழகிரிசாமி வேலை கிடைத்து வெளியூர் போனபோது குறைந்தது நாள் ஒன்றுக்கு ஒரு கடிதமாவது எழுதுவது என்கிற பழக்கம் அவர்களைத் தொற்றிக்கொண்டது. ‘‘தூங்கி எழுந்ததும் காலைக் கடன்களை முடித்து, குளித்துவிட்டு பூஜைக்கு உட்காருவது போல், கடிதம் எழுத உட்காரும் பழக்கம் எங்களிடமிருந்தது’’ என்றார் ராஜநாராயணன். கு அழகிரி சாமிக்கும், கி. ராஜநாராயணனுக்கும் இசை மீதிருந்த கிறுக்கு ஊரறிந்த விஷயம். இளம்பிராயத்தில், ஒரு குருவிடம் முறையாக இசை கற்பது, சாகித்யங்கள், நாட்டிய பதங்கள் பண்ணுவது பின்னாளில் இசை அறிந்த பெண்ணையே மணம் முடிப்பது என்று மனக்கோட்டை கட்டியிருந்தார்கள் அவர்கள். இந்தியாவில் வேறு ஏதாவது ஒரு மொழியில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள் ஒன்றாக எழுத்தாளர்கள் ஆனதும் இரு வருமே குறிப்பிடத்தக்க வகையில் இலக்கியத்தை வளப்படுத்தி சாகித்ய அகாதமி பெற்றதும் நடந்திருக்கிறதா என்று தெரியவில்லை. தமிழ் இத்தகைய பெருமைக்குரியது.

அவர் எழுத்தாளனான கதைக் குறித்துக் கேட்ட போது, “ஆரம்பக் காலத்தில் நான் பொறந்த இடைசெவலில் ரொம்ப வருசமா -நாற்பது வயசு வரைக்கும் ‘சும்மாதான் இருந்தேன். சின்ன வயசுலேர்ந்தே நான் பெரிய நோயாளி. ஐயோ, எனக்கு வந்த வியாதி எல்லாம் இருக்கே… அதுல ஒரே ஒரு வியாதியைக் கண்டாலே, அவனவன் செத்துருவான். நான் சாகலை. ஆனா, எல்லோருக்குமே பயம்தான். எப்ப போவேனோன்னு வந்து எட்டிப் பார்த்துட்டு பார்த்துட்டு போவானுஹ.. ஊருல நம்ம குடும்பம் நல்ல செல்வாக்கான குடும்பம். 80 ஏக்கரா நெலம் இருந்துச்சு. மூணு அண்ணன் தம்பிங்க. அப்படியான சூழல்-லே உடல் உழைப்பே இல்லாம வாழ்ந்துட்டேன். தம்பிகளுக்கு எல்லாம் கல்யாணம் பண்ணி வெச்சேன். நான் பண்ணிக்கலை. நோயாளி இல்லையா? அப்புறம், எங்க பாட்டிதான் சொன்னா, ‘சும்மா தைரியமாக் கல்யாணம் பண்ணிக்கோடா’னு. முப்பது வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்டேன். உள்ளூர்ப் பொண்ணுதான். நான் நோயாளினு தெரிஞ்சே பண்ணிக்கிட்டா. அப்போது அவளுக்கு இருபது வயசு. நல்ல நிர்வாகி அவ. வீட்டு வேலை, வயல் வேலைனு எல்லாத்தையும் கட்டிச் சுமந்தா. ஒருகட்டத்துல சொத்து பாகம் பிரிச்சு, விவசாயம் உட்கார்ந்த பின்னாடிதான் நான் பிழைக்க வேண்டிய சூழல் உருவாச்சு. சரியா அப்போதான் எழுத ஆரம்பிச்சேன். எழுத்தே பிழைப்பாப் போச்சு.” என்று சொன்னார்.

இன்றைக்கு(ம்) தமிழ் எழுத்துலகின் சக்ரவர்த்தியான கி.ரா தன் கல்வி குறித்து பேச்சு வந்த போது, “சின்ன வயசுலே பள்ளிக்கூடம் ஏன் பிடிக்காம போச்சு-ன்னு கேட்டா ‘பலருக்கும் படிப்பு புடிக்காமப்போறதுக்கு வாத்தியாருங்களோட கண்டிப்புதான் காரணமா இருக்கும். ஆனா, என் கதையே வேற. வாத்தியாருங்களோட நெருக்கமான சிநேகம் எனக்கு இருந்துச்சு. அது எப்படின்னா, இந்தக் காலம் மாதிரி வாத்தியாருங்க வசதி வாய்ப்போட இருந்த காலம் இல்லை அது. ரொம்ப ஏழ்மைப்பட்ட சூழல்ல இருப்பாங்க. ஊருல கொஞ்சம் வசதியான விவசாயிங்க பார்த்து ஒதுக்கிவிடுற குடிசைங்கதான் வாத்தியாருங்களுக்கு வீடா இருக்கும். பெரும்பாலான வாத்தியாருங்க தொழுவுலதான் தங்கி இருப்பாங்க. அதனால, வசதியான வீட்டுப் பிள்ளைகளுக்குத் தனி மரியாதை. எங்க ஊர் வாத்தியாருங்களுக்கு விறகுல தொடங்கி பால், மோர் வரைக்கும் எங்க வீட்டுலேர்ந்துதான் போகும். எதுக்கும் துட்டு வாங்கக் கூடாதுனு சொல்லிடுவார் எங்க நைனா. அதனால, பள்ளிக்கூடத்துல மட்டும் இல்லை; அவங்க வீட்டுலேயேகூட சொல்லிக்கொடுக்கத் தயாரா இருந்தாங்க வாத்தியாருங்க. ஆக, அக்கறை எல்லாம் இருந்துச்சு. ஆனா, படிப்பு ஏறலை. படிப்பை வாங்கிக்குற சக்தி எனக்கு இல்லைனு சொல்ல முடியாது. எனக்குப் படிப்பைக் கொடுக்குற சக்தி வாத்தியார்களுக்கு இல்லைங்கிறதுதான் உண்மை. ஆனா, எந்த வாத்தியாரும் இதை ஏத்துக்க மாட்டாங்க.” என்று சொல்லி சிரித்தார்

பின்னாளில் புதுச்சேரி பல்கலைகழக பேராசியராக ஆன கதைக் குறித்து கேட்ட போது, ” அப்படி.. இப்படி ஏழாவது வரைக்கும் பள்ளிக்கூடம் போனேனே தவிர, படிக்கல. இப்படி இருந்தவனை துணைவேந்தரா இருந்த வெங்கடசுப்ரமணியம் ஒருநாள் வந்து பார்த்து, யுனிவர்சிடிக்கு சிறப்பு பேராசிரியரா வரணும்ன்னு கூப்பிட்டார். நான் முடியாதுன்னுட்டேன். ஏன்னா, ‘கல்லூரி வகுப்புகள்ல பிள்ளைகள் கூப்பாடு போட்டுக்கிட்டே இருப்பாக. எனக்கு அது ஒத்து வராது’ன்னேன். ‘இங்கே ஆராய்ச்சி பண்ற மாணவர்கள் மட்டும்தான் வருவாங்க. சாந்தமாத்தான் இருப்பாங்க, நீங்க வரலாம்’னார். யோசனைப் பண்ணி சொல்றேன்னு அவரை அனுப்பிட்டு அடுத்து ‘எனக்கு சுகர் இருக்கு, பிபி இருக்கு… சரியா வராது’ன்னு ஒரு கடிதாசு போட்டேன். ‘இது எல்லாமே எனக்கும் இருக்கு… வாங்க சேந்து போராடுவோம்’-னு பதில் போட்டாரு. கூடவே ‘நீங்க டைம் டேபிளுக்கெல்லாம் வேலை செய்ய வேண்டாம். உங்க வகுப்பு வரும்போது மாணவர்களோட உக்காந்து பேசுங்க. அதுதான் பசங்களுக்குக் கல்வி… உங்க அனுபவங்களைப் பகிர்ந்துகிட்டாப் போதும்’னாரு. அப்படித்தான் அந்தப் பயணம் தொடங்குச்சு. கதைகள், சினிமா, நாடகம்ன்னு பிள்ளைகள்கிட்ட நிறைய பேசினேன். பல்கலைக்கழகத்தைவிட்டு பிள்ளைகளை வெளியில அழைச்சுக்கிட்டுப் போனேன். மூணு வருஷம்தான்… இதுல புதுவையில இருந்த தமிழ் அறிஞர்களுக்குக் கொஞ்சம் வருத்தம். அவலட்சணமா, படிக்காத ஒருத்தனை பல்கலைக்கழகத்துல பேராசிரியரா போட்டுருக்காகளேன்னு எரிச்சல். அதெல்லாம் இருக்கத்தானே செய்யும்.” என்றாராக்கும்

பின்னாளில் சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற தொண்ணூற்று ஒன்பது வயதான கி.ரா. நேற்று காலமானார்.

கடந்த ஆண்டு கொரோனா‌ நோய் தொற்று சூழலில், பெண்களைப் பற்றிய “அண்டரண்டப்பட்சி” என புத்தகத்தை தன் கைப்பட எழுதியுள்ளார். இதை அச்சில் பதிக்காமல், கைப்பிரதியாகவே வாசகர்கள் படிக்க வேண்டும் என விரும்பி எழுதினார். மேலும் சாதி குறித்த “சாவஞ்செத்த சாதிகள்” என்று கதையினையும், தான் எழுதாமல் விட்ட கதைகளைத் தொகுப்பாகக் கொண்டு “மிச்ச கதைகள்” என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் கி.ரா. கடந்த ஆண்டு தனது சுயநினைவுடன் எழுதிக் கொள்வதாக கூறி ஒரு எழுத்து படிவத்தை வெளியிட்டுள்ளார். அதில் தாம் எழுதிய படைப்புகள் அனைத்தின் உரிமையையும் தமது இரண்டு மகன்கள் மற்றும் அவரது வாசகரான சங்கர் என்கிற புதுவை இளவேனிலுக்கு எழுதி வைத்துள்ளார். இதன் மூலம் தமது படைப்புகள் அனைத்தும் இந்த மூவரையும் சாரும் என வாசகர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மூவரும் தமது படைப்புகள் மூலம் வரும் வருவாயில் ஒரு பகுதியை “கரிசல் அறக்கட்டளை” என துவங்கி எழுத்தாளர்களுக்கும் சிறு பத்திரிகைகளுக்கும் தனது பெயரில் பணமுடிப்பும் கூடிய விருதினை வழங்க ஏற்பாடு செய்யும்படி கூறியிருக்கிறார்.

அன்னாரின் நினைவாக ஜெயமோகன் பகிர்ந்துள்ள ஒரு கி.ரா-வின். ஜூம் கலந்துரையாடல் காணொளி நம் வாசகர்கள் கவனத்துக்கு:

aanthai

Recent Posts

ரன் பேபி ரன் – விமர்சனம்!

பொதுவாக சினிமாவில் ஏகப்பட்ட வகைகள் உள்ளது. குடும்பம், பழிவாங்குதல், நகைச்சுவை, மெலோட்ராமா, திகில், ஆக்சன், கல்ட்,இப்படி இன்னும் நிறைய வகைகள்…

2 hours ago

அதிமுக & இரட்டை இலை விவகாரம் : சுப்ரீம் கோர்ட் புது உத்தரவு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம். மேலும்…

4 hours ago

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு ஜெயில் & ரூ.25 ஆயிரம் அபராதம் – புதுவை போலீஸ் அறிவிப்பு

நம் நாட்டில் நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சாலை விபத்தில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பதாக…

5 hours ago

பொம்மை நாயகி -விமர்சனம்!

இந்திய சமூகத்தினுள் ஆண்டாண்டு காலமாக வேரூன்றி இருக்கும் சாதி எனும் வடிவத்திற்கு எதிராக, பொதுத்தளத்தில் களமாடிய மற்றும் களமாடுபவர்களின் பட்டியல்…

6 hours ago

ChatGPT எனும் செயற்கை நுண்ணறிவு செயலியும், இன்ன பிறவும்!

இந்தாண்டுக்கான மிகப்பெரிய ட்ரெண்டிங் வார்த்தைகளில் ஒன்றாக ChatGPT மாறியுள்ளது. நவீன தொழில்நுட்ப உலகில் ஒரு புரட்சிகரமான உரையாடல் AI சாட்பாட்…

7 hours ago

தி கிரேட் இண்டியன் கிச்சன் – விமர்சனம்!

21-ம் நூற்றாண்டு என்று குறிப்பிடும் இப்போதெல்லாம் சர்வதேச அளவில் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். ஆணுக்கு நிகர் பெண்…

1 day ago

This website uses cookies.