பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான முக்தா சீனிவாசன் காலமானார்

பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான முக்தா சீனிவாசன் காலமானார்

சிவாஜிகணேசன் நடித்த அந்தமான் காதலி, ரஜினி நடித்த பொல்லாதவன், ஜெயலலிதா – முத்துராமன் நடித்த சூரியகாந்தி உட்பட ஏராளமான படங்களை இயக்கி, தயாரித்த முக்தா சீனிவாசன் ( வயது 89 ) உடல் நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று இரவு காலமானார். மனைவி பெயர் பிரேமா, அவருக்கு முக்தா சுந்தர், முக்தா ரவி என்ற மகன்களும், மாயா என்ற மகளும் உள்ளனர்.

கதை, வசனகர்த்தா, திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர் என்று பன்முகத்தன்மை கொண்ட இந்தப் பெரியவர் தீவிரமான காங்கிரஸ்காரர்.

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த மாளாபுரம் கிராமத்தில் பிறந்தவர் முக்தா சீனிவாசன். பெரும் சிரமத்திற்கிடையே பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, சினிமாவில் உதவி இயக்குநராக வேலைக்கு வந்தவர். பின்னர் கலைத்துறையில் தனது கடின உழைப்பால் உயர்ந்து திரைப்பட இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர்.

பழம் பெரும் இயக்குநர்கள் கே.ராம்னாத், வீணை எஸ்.பாலசந்தர் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 1947 முதல் 1957ம் ஆண்டுவரையிலும் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த பல்வேறு திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் இவருக்குண்டு.

1957-ல் இவர் இயக்கம் செய்த முதல் திரைப்படம் ‘முதலாளி’ வெளி வந்தது. இந்த முதல் திரைப்படமே, ஜனாதிபதி விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய அண்ணன் முக்தா வி.ராமசாமி அவர்களுடன் இணைந்து முக்தா பிலிம்ஸை துவக்கி அதன் மூலம் 41 திரைப்படங்களைத் தயாரித்து உள்ளார். இதுவரையிலும் மொத்தம் 61 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் முக்தா சீனிவாசன். கூடவே தெலுங்கில் புகழ் பெற்ற 12 திரைப்படங்களை டப்பிங் செய்தும் வெளியிட்டிருக்கிறார்.

இவர் தயாரித்து, இயக்கிய ‘தாமரைக்குளம்’ திரைப்படத்தில்தான் ‘நகைச்சுவைத் திலகம்’ நாகேஷ் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார். இவர் தயாரித்து, இயக்கிய ‘சூரியகாந்தி’ திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவில் தந்தை பெரியார் கலந்து கொண்டது அப்போதைக்கு மிகப் பெரிய பரபரப்பு செய்தி. அந்தப் பெருமையுடன் எனதருமை கவியரசன் கண்ணதாசனின் புகழ் பெற்ற பாடலான ‘பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது’ பாடலை வெளிக்கொணர்ந்த இயக்குநர் என்கிற முறையில் இவர் பெரும் பாராட்டுக்குரியவர்.

‘நடிகர் திலகம்’ சிவாஜியின் உற்ற நண்பரான இவர், ‘அந்தமான் காதலி’, ‘இமயம்’, ‘பரீட்சைக்கு நேரமாச்சு’, ‘கீழ்வானம் சிவக்கும்’ போன்ற படங்களை நடிகர் திலகத்தை நடிக்க வைத்து இயக்கினார். இதில் ‘அந்தமான் காதலியும்’, ‘இமயமும்’ நூறு நாள் ஓடிய திரைப்படங்கள்.. ‘அந்தமான் காதலி’யின் கிளைமாக்ஸ் காட்சியின் வசனங்கள் இன்னமும் எனக்குள் ஓடிக் கொண்டிருக்கின்றன. ‘சூப்பர்ஸ்டார்’ அண்ணன் ரஜினியின் ‘பொல்லாதவன்’, ‘சிவப்புசூரியன்’ திரைப்படங்களைத் தயாரித்து இயக்கியவரும் இவரே.

இன்றளவிலும் உலகின் மிகச் சிறந்த நூறு திரைப்படங்களில் ஒன்றாக ‘டைம்’ பத்திரிகையால் வெளியிடப்பட்ட பட்டியலில் இடம் பெற்றிருக்கும் மணிரத்தினத்தின் ‘நாயகன்’ திரைப்படத்தைத் தயாரித்ததும் இவருடைய ‘முக்தா பிலிம்ஸ்’தான்..

1979-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதலில் இவருடைய தலைமையில்தான் ‘தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்’ முதல் முறையாக உருவாக்கப்பட்டது என்பது தமிழ்த் திரைப்பட உலகத்தின் வரலாறு..

துவக்கக் காலத்தில் தீவிர கம்யூனிஸ்ட்டாக இருந்து வந்த முக்தா சீனிவாசன், 1963-ம் ஆண்டு முதல் கதராடை அணிந்து காங்கிரஸ்காரராக பவனி வர ஆரம்பித்தார். பெருந்தலைவர் காமராஜரின் நம்பிக்கைக்குரியவராக இருந்து வந்தார். அதோடு ஜி.கே.மூப்பனாரின் பள்ளித் தோழர். அவருக்கும் சிறந்த நண்பர் இவர்தான். பின்னர் காங்கிரஸ் கட்சியின் தமிழகத் துணைத் தலைவர்களில் ஒருவராக இருந்து வந்தார்.

இவருடைய இன்னுமொரு மிகப் பெரிய தகுதி.. தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் கோஷ்டி சேர்க்கத் தெரியாத ஒரு தலைவர் உண்டென்றால் அது இவராகத்தான் இருக்க முடியும்.. அப்பேர்ப்பட்டவர் நம் ஆந்தை ரிப்போர்ட்டர் வாசகராக, ரசிகராக இருந்தார் என்பதும் பெருமைக்குரியது..

அன்னாரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்??

error: Content is protected !!