December 2, 2021

திமிங்கலத்தின் வயிற்றுக்குள் அரிசி பைகள் உள்பட சுமார் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்!

தமிழ்நாடு அரசு பிளாஸ்டிக்கை தடைசெய்து விட்டது நல்ல விஷயம்தான் என்றாலும் `உலகில் உள்ள பெருங்கடல்களில் தினந்தோறும் கிட்டத்தட்ட 80 லட்சம் டன் வீதம், இதுவரை சுமார் 15 கோடி டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டிருக்கின்றன’ என்கிறார்கள் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக ((National University of Singapore) ஆராய்ச்சியாளர்கள். அதாவது, ஒரு நிமிடத்துக்கு ஒரு லாரி பிளாஸ்டிக் குப்பைகளை கடலில் கொட்டப் படுகிறதாம். மேலும்`இப்படித் தொடர்ந்து கொட்டிக்கொண்டிருந்தால், 2050-ம் ஆண்டில் கடலில் வாழும் மீன்களைவிட பிளாஸ்டிக் பொருள் களின் எண்ணிக்கை அதிகரித்துவிடும். அவை மீன்களின் எண்ணிக்கையையும் வெகுவாகக் குறைத்துவிடும் என்றெல்லாம் எச்சரிக்கை வெளியான நிலையில் பிலிப்பைன்சின் படாங்காஸ் மாகாணம் மபினி நகரில் உள்ள கடலில் சுமார் 16 அடி நீளம் கொண்ட திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் அந்த திமிங்கலத்தை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அந்த திமிங்கலத்தின் வயிற்றுக்குள் அரிசி பைகள் உள்பட சுமார் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியிருந்ததை கண்டு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ந்து போயினர். பிளாஸ்டிக் கழிவுகள் வயிற்றில் தேங்கியதால் முறையாக இரை உண்ண முடியாமல் தவித்துவந்த அந்த திமிங்கலம் நோய்வாய்பட்டு இறந்ததாக தெரிவித்துள்ளனர்.

மனிதர்கள் உயிர் வாழ ஆக்சிஜன் மிக முக்கியம். இந்த ஆக்சிஜன் மழைக் காடுகளிலிருந்து 28 சதவிகிதமும், கடல் நுண்ணுயிர்களிலிருந்து 70 சதவிகிதமும், மற்ற வழிகளில் இரண்டு சத விகிதமும் கிடைக்கும். அதிலும் கடலிலிருந்து கிடைக்கும் 70 சதவிகித ஆக்சிஜன், `பிளாங்டன்’ (Plankton) நுண்ணுயிர்களின் மூலமே பெறப்படுகிறது. இந்த நுண்ணுயிர்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஃபைட்டோபிளாங்டன் நுண்ணுயிர்கள் மிக முக்கியமானவை. இவை நானோ பிளாஸ்டிக்கால் அதிகளவில் அழிந்துவருகின்றன. இதனால், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் அதிகரித்திருக்கிறது.

நாம் கடலில் கொட்டும் பிளாஸ்டிக் பொருள்கள், கடல் நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டு, ஜப்பான், அமெரிக்கா நாடுகளுக்கு நடுவிலிருக்கும் பசுபிக் பெருங்கடலில் மிகப் பெரிய இரண்டு பிளாஸ்டிக் தீவுகளை உருவாக்கியிருக்கின்றன. இவற்றின் பரப்பளவு, தமிழ்நாட்டைப்போல 10 மடங்கு பெரியது. இதேபோன்ற, பிளாஸ்டிக் தீவு அட்லான்டிக் பெருங்கடலிலும் உண்டு. சிதைந்து போன சிறிய பிளாஸ்டிக் துகள்கள், பெரிய பிளாஸ்டிக் பொருள்கள்தாம் இந்தத் தீவுகள் உருவாகக் காரணம். கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக்கில் 70 சதவிகிதம் கடலின் அடிமட்டத்திலிருக்கும் சேற்றில் புதைந்துவிடும். எஞ்சியவையே ஒன்றுசேர்ந்து தீவுகளாக மாறியிருக்கின்றன. பிளாஸ்டிக் தீவு பகுதிகளில் கப்பல் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதெல்லாம் முன்னரே வந்த தகவல்தான்.

ஆனாலும் உலகம் முழுக்க லட்சக்கணக்கான அரிய கடல்வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக்குக்குப் பலியாகின்றன. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தாய்லாந்தில் இறந்த திமிங்கலத்தின் வயிற்றில் 80 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் கண்டெடுக்கப்பட்டதும் பிலிப்பைன்சிலும் உயிரிழந்த திமிங்கலம் வயிற்றிலிருந்து 6 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பெருங்கடல் பகுதியில் சீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய 5 ஆசிய நாடுகளில் பிளாஸ்டிக் கழிவுகள் பெரும் பிரச்சினையாக உள்ளது. இதனை தடுக்க அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்