October 19, 2021

நம்ம கமாண்டர் அபிநந்தன் இந்தியா வந்தடைந்தார்! – வீடியோ

பாகிஸ்தான் விமான படையினரால் கடந்த 27ஆம் தேதி கைது செய்யப்பட்ட இந்திய விமானப்படை விமானி அபி நந்தன் இன்று மாலை இந்திய பாகிஸ்தான் எல்லையில் உள்ள வாகா எல்லை சாவடியில் இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் திரண் டிருந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னால் நடந்த வான்வெளி சண்டையின் போது பாகிஸ்தான் போர் விமானங்களை அவர்களின் எல்லைக்கே சென்று இந்திய போர் விமானங்கள் விரட்டின. இந்திய விமானி அபிநந்தன் மிக் 21 ரக விமானத்தில் பாகிஸ்தானின் எப் 16 ரக விமானத்தை விரட்டிச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மற்றொரு பாகிஸ்தான் போர் விமானத்தின் ஏவுகணை, அபிநந்தனின் விமானத்தை தாக்கியது. பாராசூட் உதவியுடன் அவர் உயிர் தப்பினார். ஆனால் அவர் தரையிறங்கியது பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஹோரா கிராமம் ஆகும். இது இந்திய எல்லையில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. அவரை பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்து ராவல்பிண்டியில் உள்ள அந்த நாட்டு ராணுவ தலைமையகத்துக்கு அழைத்துச் சென்றது.

அதே சமயம் அபிநந்தன் பாராசூட்டில் கீழே இறங்கியபோது அந்தப் பகுதி மக்களும் ராணுவ வீரர்களும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. முகத்தில் ரத்த காயத்துடன் அவர் இழுத்துச் செல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.இதற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம் எழுந்தது. ஜெனீவா உடன்படிக்கை மீறப்பட்டிருப்பதாக பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டின.

இந்நிலையில் பாக். பிரதமர் இம்ரான்கான், “நல்லெண்ண அடிப்படையில் விமானி அபிநந்தன் வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்படுவார்” என்று அறிவித்தார். உடனே அவரை விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்காத பாகிஸ்தான் அரசு, சாலை மார்க்கமாகவே அபிநந்தன் அனுப்பப்படுவார் என்று தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து பாகிஸ் தானுக்கான இந்தியாவின் செயல் தூதர் கவுரவ் அலுவாலியா நேற்று இஸ்லாமாபாத் வெளியுறவு அமைச்சகத்துக்கு சென்று சட்ட பூர்வ நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்தார். இதன்பிறகு நேற்று மாலை 3 மணி அளவில் ராவல் பிண்டி ராணுவ தலைமையகத்தில் அபிநந்தன் விடுதலை செய்யப்பட்டார்.

இஸ்லாமாபாத்திலிருந்து வந்த இந்திய தூதரக அதிகாரிகள் அபிநந்தன் உடன் வாகா எல்லைச் சாவடிவரை வந்ததாகவும், இந்திய அதிகாரிகள் கையில் அபிநந்தன் ஒப்படைக்கப்படும்வரை உடனிருந்ததார்கள். அபிநந்தனை வரவேற்க அவரது தந்தை சிம்மக்குட்டி வர்த்தமான், அவரது தாயார் டாக்டர் ஷோபாவும் வாகா எல்லை சாவடிக்கு வந்து இருந்தனர். இந்திய விமானப்படை அதிகாரிகள் பிரபாகரன் மற்றும் ஆர்.ஜி.கே. கபூர் அவரை அழைத்துக்கொண்டு அமிர்தசரஸ் நகருக்கு விரைந்தனர்.

ராணுவ விதிகளின்படி அபிநந்தன் இந்தியா திரும்பியதும் அவரை முழு உடல் பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு அவர் பாகிஸ்தானிடம் சிறைப்பட்ட நேரத்தில் இருந்து விடுதலை செய்யப்படும்வரை நடந்த எல்லாவற்றையும் அபிநந்தனிடம் கேட்டு பதிவு செய்வார்கள்.இந்திய பாதுகாப்பு ஏஜென்சிகள் விசாரணை நடத்தி விவரங்களைப பதிவு செய்வார்கள் அதன் பிறகே அபிநந்தன் தன் குடும்பத்தாருடன் கலந்து பேச முடியும் எனத் தெரிகிறது.