December 2, 2021

கிரிக்கெட்டில் இருந்து முழு ஓய்வு -டிவில்லியர்ஸ் அறிவிப்பு!

ர்வதேச அளவில் தனக்கென ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட தென்னாப்பிரிக்காவின் கிரிக்கெட் வீரரான ஏபி டிவில்லியர்ஸ், சர்வதேச போட்டிகளிலிருந்து முன்னரே ஓய்வுபெற்ற நிலையில், ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடிவந்தார். இந்நிலையில், தற்போது திடீரென அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விடைபெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.

ஆபிரகாம் பெஞ்சமின் டி வில்லியர்ஸ்… உலகம் முழுக்க கிரிக்கெட் மைதானங்களில் சிக்ஸர், பௌண்டரிகளால் அதிர்வேட்டுகள் நிகழ்த்தும் அதிரடி நாயகன். ஒருநாள் கிரிக்கெட்டின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து உலகம் முழுக்க ரசிகர்கள் அதிகமாக உள்ள நபர் இவர்தான். கிரிக்கெட் விமர்சகர்கள் என எல்லோரது லைக்ஸையும் அள்ளியிருக்கிறார் டி வில்லியர்ஸ். 16 பந்து களில் 50 ரன், 31 பந்துகளில் சதம், 64 பந்துகளில் 150 ரன் என ஏகப்பட்ட சாதனைச் சதங்களும் இவர் வசம்தான் உள்ளது. இப்பேர்பட்ட அதிரடி வீரர் ஏபி டிவில்லியர்ஸ். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து, டி-20 லீக் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வந்தார். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஆடிவந்தார். கடந்த சீசனில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இது விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அந்தப் பதிவில், ‘இது நம்ப முடியாத பயணம். ஆனால், அனைத்துவிதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துவிட்டேன். மகிழ்ச்சியுடனும் கட்டுக்கடங்காத உற்சகாத்துடனும் இந்த விளையாட்டை விளையாடினேன். இப்போது இந்த 37 வயதில் அந்தச் சுடர் பிரகாசமாக எரியவில்லை. என் குடும்பம், சகோதரர்கள், மனைவி டேனியல், என் குழந்தைகள் செய்த தியாகங்கள் இல்லாமல் எனக்கான எதுவும் சாத்தியமில்லை. என் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை உண்மையிலேயே இப்போது முதலிடத்தில் வைக்க இருக்கிறேன்.

நான் பயணித்த அதே பாதையில் என்னுடன் பயணித்த சகவீரர்கள், எதிரணி வீரர்கள், பயிற்சியாளர்கள், பிசியோதெரபிஸ்ட், உதவியாளர்கள், தென்னாப்பிரிக்க மற்றும் இந்தியாவில் நான் ஆடிய அனைத்து இடங்களிலும் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஆடிய , டைட்டன், தென்னாப்பிரிக்கா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்காக அல்லது உலகம் முழுவதும் விளையாடி இருந்தாலும் இந்த கிரிக்கெட், கற்பனை செய்ய முடியாத அனுபவங்களையும் வாய்ப்புகளையும் கொடுத்திருக்கிறது.

அதற்கு நன்றியுள்ளவனாக இருப்பேன். ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடிய போது எனக்கு மகிழ்ச்சியான அனுபவங்கள் கிடைத்தன. 11 வருடம் அந்த அணிக்காக விளையாடிவிட்டு அதில் இருந்து விலகுகிறேன். அந்த நிர்வாகம், நண்பர் விராத் கோலி, பயிற்சியாளர்கள், ஊழியர்கள், ஆர்சிபி குடும்பம் அனைவருக்கும் நன்றி. பெங்களூரு அணியுடனான பயணம் மறக்க முடியாதது. நான் எப்போதும் ஆர்சிபிக்காரன் தான்”என்று டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.