பஞ்சாப் : ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த்மான் – யார்? எப்படி?

ஞ்சாப்பில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான் பிரபல ஸ்டேண்ட் அப் காமெடியனான இவர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

பிப்ரவரி 20 ஆம் தேதி பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாபில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இன்று விடை கிடைத்துள்ளது.கடந்த 2017ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி பஞ்சாபில் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமல் தேர்தலை சந்தித்தது தான் என கூறப்படுகிறது. அதனால், இந்த முறை முதல்வர் வேட்பாளர் யார் என்று தற்போது அறிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை மக்களே தேர்வு செய்யும் வகையில் இலவச தொலைபேசி எண்களை அறிவித்திருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால். அந்த பொது வாக்கெடுப்பின் படி ஆம் ஆத்மியின் பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பகவந்த் மான் (48) பஞ்சாபில் உள்ள சடோஜ் கிராமத்தில் பிறந்தவர். பஞ்சாப் மக்கள் மத்தியில் ஒரு அரசியல்வாதி என்பதை விட காமெடி நடிகராக அறியப்படுகிறார் பகவந்த். இவர் தனது கல்லூரிப் பருவத்தில் இருந்தே ஸ்டேண்ட் அப் காமெடியனாக தன்னை மேம்படுத்திக் கொண்டவர். நிறைய கல்லூரி நிகழ்வுகளில் காமெடி ஷோக்களில் பங்கேற்றுள்ளார். நாளடைவில் அதுவே அவரை டெலிவிஷன் நிகழ்ச்சிகள் வரை கொண்டு சென்றது. பின்னர், சில பட வாய்ப்புகளும் வந்தன.

இவரது தனிச் சிறப்பு அவரின் அரசியல் நையாண்டி. பஞ்சாப் மற்றும் தேசிய அரசியலின் நடப்பு நிகழ்வுகளை காமெடியாக மாற்றி மக்கள் முன்னிலையில் நடிப்பார். இந்த பாணி அவரை மக்கள் மத்தியில் வெகுவாக கொண்டு சேர்த்தது. இப்படி புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராக இருந்த பகவந்த் முதலில் 2011ல் மன்பிரீத் சிங் தலைமையிலான பஞ்சாப் மக்கள் கட்சியில் இணைந்தார். அந்த கட்சி சார்பில் 2012ல் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், தோல்வி அடைந்தார். இதன் பின்னர் 2014ல் பஞ்சாபில் புதிய கட்சியாக கால்பதித்த ஆம் ஆத்மியில் இணைந்தார். அப்போது அக்கட்சி சார்பில் தனது சொந்த தொகுதியில் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி கண்டார். இதனால், அவருக்கு அக்கட்சியில் செல்வாக்கு கூடியது அரவிந்த் கெஜ்ரிவாலின் நம்பிக்கைக்கு உரியவரானார். பின்னர், 2019 தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு வென்று மக்களவை உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இன்று அவர் ஆம் ஆத்மியின் பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.\

பகவந்த் மான் மீது ஏராளமான சர்ச்சைகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக மதுப்பழக்கம் அவரை நிறைய கேலிகளை சர்ச்சைகளை சந்திக்க வைத்துள்ளது. பல முறை குடித்துவிட்டு பொதுவெளியில் அவர் தள்ளாடி செல்லும் வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளன. சில ஆண்டுகள் முன் ஆம் ஆத்மியின் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் வைத்து, “இனி மது அருந்த மாட்டேன். பஞ்சாப் மக்களுக்காக உழைக்க இனி எனது நேரத்தை ஒதுக்குவேன்” என்று தனது தாயாரிடம் சத்தியம் செய்தார் பகவந்த்.

இதுமட்டுமல்ல, நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பு விஷயங்களை வீடியோ எடுத்த விவகாரம், மனைவியை பிரிந்த விவகாரம் என பகவந்த் மீது சர்ச்சைகள் ஏராளம். இந்த சர்ச்சைகளை தாண்டி கெஜ்ரிவால் அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முக்கிய காரணம் அவரின் அரசியல் செயல்பாடுகள் என்று தகவல் வருகிறது