December 5, 2021

சிம் கார்டு வாங்க ஆதார் கட்டாயமில்லை: மத்திய தொலை தொடர்புத் துறை அதிரடி உத்தரவு !

மத்திய அரசின் பல்வேறு சமுக நலத் திட்டங்களின் பயன்களை பெறுவதற்கு ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயப்படுத்தி வரும் நிலையில் இனிமேல் சிம் கார்டு வாங்க ஆதார் கட்டாயமில்லை என்று மத்திய தொலை தொடர்புத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

நம் நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் அவர்களது சொந்த அடையாளங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சார்பில் வழங்கப்படும் இந்த அட்டையை பல்வேறு மானிய திட்டங்களுக்கு மத்திய அரசு கட்டாயமாக்கி வருகிறது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்டு உள்ளன. இந்த வழக்கு விசாரணையின், போது இந்த வழக்கின் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, சிம்கார்டுகள் வழங்க ஆதார் எண்ணை கட்டாயமாக கேட்க கூடாது என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

அதே சமயம் இந்த ஆதார் அட்டை வந்த பின், அது எல்லா இடங்களிலும் முக்கியமான அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது. எல்லா இடங்களிலும் ஆதார் எளிதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மேலும் ஆதார் அட்டைதான் வேண்டும் என்று சில விஷயங்களில் அரசு கட்டாயப்படுத்துகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு வரை ஆதார் அட்டையை மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மக்களை தொல்லை செய்து இருந்தது. ஆனால் அப்படி இணைக்க தேவையில்லை என்று மத்திய தொலைத்தொடர்பு துறை ஆணை பிறப்பித்தது.

இந்த நிலையில் தற்போது இனி சிம் கார்டு வாங்க ஆதார் கட்டாயமில்லை என்று மத்திய தொலை தொடர்புத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதற்க்காக வேறு அடையாள அட்டை வைத்தும் இனி சிம் வாங்கலாம் என்றும் மத்திய தொலை தொடர்புத் துறை கூறியுள்ளது. அதாவது வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றை வைத்து இனி சிம் வாங்க முடியும். ஆதார் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றுள்ளது. பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது