April 13, 2021

இனி கைரேகை மூலம் பண பரிவர்த்தனை!- பீம் ஆப் – இது புதுசு

உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்கான முயற்சிகளில் ஒன்றாக பீம் ஆப் ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பீம் ஆப்சில், ஆதார் அடிப்படையிலான பரிவர்த்தனை வசதியை பிரதமர் நரேந்திரமோடி நேற்று அறிமுகம் செய்து வைத்தார். கடைகளில் பொருட்கள் வாங்கிவிட்டு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த டெபிட் கார்டு பயன்படுத்தப்படுகிறது. வங்கி கணக்கில் ஆதார் எண் இணைத்தவர்கள், இனி கைரேகை வைப்பதன் மூலம் கடைக்காரருக்கு பணம் செலுத்தலாம். தற்போது 40 கோடி வங்கி கணக்குகளில் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது.

bhim apr 15

18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 99 சதவீதம் பேர் வங்கி கணக்கில் ஆதாரை இணைத்துள்ளதால் இத்திட்டத்தை எளிதாக செயல்படுத்த முடியும். பீம் – ஆதார் சேவையில் 30 வங்கிகள் பங்கேற்றுள்ளன. இது பாதுகாப்பான, எளிதான பரிவர்த்தனையாக அமையும். கிராம புறங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேம்பட உறுதுணையாக இருக்கும். சில்லரை வணிகர்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என நேஷனல் பேமன்ட் கார்ப்பொரேஷன் தெரிவித்துள்ளது.

இதனிடையே உயர் மதிப்பு ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பிறகு, டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க லக்கி கிராஹக் யோஜனா மற்றும் வியாபாரிகளுக்கான டிஜிதன் வியாபார் யோஜனா ஆகிய 2 திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, ரூபே ஏடிஎம் கார்டுகள், அரசின் வாலட்கள் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்வோருக்கும், பாயின்ட் ஆப் சேல் இயந்திரங்கள் மூலம் பணம் பெறும் வியாபாரிகளுக்கும் கடந்த டிசம்பர் 25ம் தேதி முதல் 100 நாட்களுக்கு தினந்தோறும் மற்றும் ஒவ்வொரு வாரமும் அதிர்ஷ்ட பரிசுகள் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் 100ம் நாளில் ரூ.1 கோடி பரிசுத் தொகைக்கான மெகா குலுக்கல் நடந்தது. இதன் முடிவுகளை கடந்த 10ம் தேதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அறிவித்தார். பரிவர்த்தனையின் அடையாள எண் அடிப்படையில் அதிர்ஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவர்களின் பெயர் உடனடியாக வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், மெகா குலுக்கலின் பரிசளிப்பு விழா நாக்பூரில் நேற்று நடந்தது. இதில், லக்கி கிராஹக் யோஜனாவின் முதல் பரிசான ரூ.1 கோடியை மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவி சாரதா மோகன் மேங்க்ஷெட்டிக்கு பிரதமர் மோடி வழங்கினார். 20 வயதான அந்த மாணவி, புதிதாக வாங்கிய மொபைல் போனுக்கான மாதாந்திர இஎம்ஐ ரூ.1,590யை தனது ரூபே ஏடிஎம் கார்டு மூலம் ஆன்லைனில் செலுத்தி உள்ளார். அந்த பரிவர்த்தனைக்காக அவருக்கு குலுக்கலில் பரிசு விழுந்திருக்கிறது. 2வது பரிசான ரூ.50 லட்சம் குஜராத்தின் காம்பாத் பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஹர்திக் குமாருக்கு கிடைத்திருக்கிறது.

வியாபாரிகளுக்கான குலுக்கலில், முதல் பரிசான ரூ.50 லட்சம் சென்னை, தாம்பரத்தில் உள்ள பிரபல நகைக்கடையின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் அனந்தபத்மநாபனுக்கு கிடைத்திருக்கிறது. இவர் ரூ.300க்கான தொகையை டிஜிட்டல் முறையில் பெற்றதற்காக இப்பரிசு கிடைத்திருக்கிறது. 2வது பரிசான ரூ.25 லட்சம், மகாராஷ்ராடிராவின் தானேவை சேர்ந்த பியூட்டி பார்லர் உரிமையாளர் ராகினி ராஜேந்திரா உத்தேகருக்கு கிடைத்திருக்கிறது.

இத்திட்டத்தின் கீழ் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 16 லட்சம் பேருக்கு குலுக்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. மொத்த பரிசுத் தொகை ரூ.258 கோடி. இத்திட்டத்தினால் டிஜிட்டல் பரிவர்த்தனை 23 மடங்கு அதிகரித்திருப்பதாக நிதி ஆயோக் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘கடந்தாண்டு நவம்பரில் கரன்சி வாபஸ் பிறகு, டிஜிட்டல் பரிவர்த்தனை 23 மடங்கு அதிகரித்து, 63 லட்சத்து 80 ஆயிரம் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2017 மார்ச் மாதம் வரை ரூ.2,425 கோடிக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை நடத்திருக்கிறது. அதற்கு முன், ஜனவரி முதல் நவம்பர் வரை 2 லட்சத்து 80 ஆயிரம் பரிவர்த்தனை மட்டுமே (ரூ.101 கோடிக்கு) நடந்திருக்கிறது’ என கூறப்பட்டுள்ளது.