August 12, 2022

ஆடை – விமர்சனம்

மனிதனின் உணவு முழுக்க முழுக்க அவனின் சுய விருப்பம் சார்ந்தது.ஆடை மட்டும் பிறர் விருப்பம் சார்ந்த தாகவே ஆதியில் இருந்து வந்திருக்கிறது.குறிப்பாக பெண்ணின் உடை. உடையின் தேவை உலகம் முழுக்க ஒன்றாகவே இருந்திருக்கிறது.தன்னைச் சுற்றி மாறிக் கொண்டேயிருந்த தட்ப வெட்ப நிலையில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளவே மனிதன் உடையைக் கண்டறிந்தான்.தன் சூழலில் கிடைத்த இயற்கைப் பொருட்களில் இருந்தே உடை உருவானது. தழையாடையும், தோலா டையும்,உற்பத்திப் பொருட்களால் பிற்காலத்தில் தயாரிக்கப் பட்ட பருத்திக் கம்பளி ஆடைகளாக இருக்கட்டும், எல்லாவற்றிற்கும் அடிப்படை நோக்கம் ஒன்றே.தசையால் மூடப்பட்ட உடம்பைக் காப்பது தான்.மனிதன் கண்டு பிடித்த கண்டுபிடிப்புகள் எல்லாவற்றிற்கும் நோக்கம் மாறிப் போனதைப் போல் உடையின் நோக்கமும் மாறிப் போனது. உடைக்குள்ளும் உயர்வு தாழ்வு வந்தது.அரசனுக்கு ஓர் உடை.ஆண்டிக்கு ஓர் உடை. உயர்சாதிக்கு ஓர் உடை.கீழோர்க்கு ஓர் உடை.பெண்ணுக்கு மட்டும் வயதிற்கு ஏற்ற உடை.சடங்கிற்கு ஓர் உடை. உடை அந்தஸ்தின் அடையாளமானது.

இன்னொரு சுவாரஸ்யமான செய்தியும் சொல்லலாம்.குழந்தைகளுக்கு என்று பிரத்தியேகமான ஆடைகள் எதுவும் சமீப நூற்றாண்டுகள் வரையும் இருந்ததில்லையாம்.அப்பாக்களின் கிழிந்த வேட்டிகள் துண்டுகளாகி பையன்கள் கட்டிக் கொண்டதும்,அம்மாக்களின் கிழிந்த புடவைகள் தாவணிகளாகி பெண்கள் கட்டிக் கொண்டதும் நம் தலை முறைக்கே நினைவில் இருக்கும் தான்.உடை மனிதனின் மானம் காக்கும் கருவி மட்டுமே. ஆனால் உடையின் வரலாற்றையும் உடை பற்றி மாறி வந்துள்ளப் போக்குகளையும் படித்தால் மனித மனம் குரங்குதான் என தீர்மான மாகச் சொல்லிவிடலாம் என்பதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஆடைக்கும் ஒரு பெண்ணுக் குமான மனக் குழப்பத்தை கொஞ்சம் கூட மெனக்கெடாமல் அமலாபாலை நிர்வாணமாக நடிக்க வைத்து ’ஆடை’ என்ற பெயரில் ஒரு முழு நீள சினிமாவை கொடுத்திருக்கிறார் டைரக்டர் ரத்னகுமார்.

இந்த ஆடை மேற்படி பாராவின் கடைசி வரியில் சொன்னது போல் மார்பகங்களை மறைக்க வரி கட்ட வற்புறுத்திய திருவாங்கூர் ராஜாவின் சட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்து மாண்ட நங்கெலியின் கதையை சொல்கிறார்கள்.. ஆனால் இதை அடுத்து கதை வேறொரு களத்தில் தொடர்கிறது. அதாவது பிரைவேட் சேனல் ஒன்றில் வேலை பார்ப்பவர் அமலா பால். அம்மா அன்பில் செல்லமாக வளர்ந்த அமலாபால் கொஞ்சம் அராத்து என்றே சொல்லலாம். பார்ட்டி, பீர்,பாய் ஃபரண்ட்டுடன் ரேஸர் பைக்கில் ஊரை சுற்றுவது, என்று வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார். இவர் தலைமையிலான டீம் தொப்பி எனும் பிராங்க் ஷோவை நடத்தி ஹிட் அடித்து வருகிறது. கூடவே அடிக்கடி என்ன பெட் என்று சவால் விடும் அமலா பால், ஆடை இல்லாமல் ஒரு நாள் அலுவலகத்தில் தனியாக இருக்கிறேன் என்று தனக்குத் தானே சவால் விடும் போது நடந்த சம்பவங்களிம் விளைவுகளும்தான் மிச்ச, சொச்சப் படம்

காமினி என்ற ரோலில் வரும் அமலா பால் பங்களிப்பு அபாரம். இந்தக் கதைக்கு என்னென்ன தேவையோ – அது நிர்வாணம் என்றாலும் அசரமல் அள்ளி அள்ளி வழங்கி பிரமிக்க வைக்கிறார். அதே சமயம் அமலா பாலின் அம்மணத்தை காட்டும் ஒரு காட்சியில் கூட ஆபாசம் துளியும் சிதற விடாமல் பதிவுச் செய்துள்ள ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக்கண்ணனின் ஒர்க் -க்கு தனி பாராட்டு விழா நடத்தலாம். பிரதீப் குமார் இசை படபடப்பை கூட்டிக்கொண்டே இருக்கிறது. ஏனையோரின் பங்களிப்பு ஓகே.

ஆனால் இப்படியோர் கதைக் களத்தை எடுத்த ரத்ன குமார் என்பவர் முன்னரே கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும் வகையில் மேயாத மான் என்றொரு படமெடுத்து அதையும் தலையில் வைத்து கொண்டாடிய  இயக்குநராக்கும்.  அப்படியாப்பட்டவர் இப்போது எடுத்து கொண்ட ஆடை யையும் உருப்படியாக வழங்க வில்லை என்பதே நிஜம். பிறக்கும் பொழுதும் நிர்வாணம் இறக்கும் பொழுதும் நிர்வாணம் நடுவில் இந்த ஆடை ,அலங்காரம் என்பதே மனித வாழ்க்கை என்பதை நெத்திப் பொட்டில் அறைவதைப் போல் சொல்ல வேண்டியதை மறந்து விட்டார். பெண்ணின் சுதந்திர, ஆடை என் நினைத்து அவர் பேசி இருப்பது, தடை செய்யப்பட்ட கோர்ட்டால் அண்மையில் தடை செய்யப்பட்ட prank video-களின் எல்லை மீறல்களையும், பிணத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு, அதைப் பெருமையாகச் சமூக ஊடகங்களில் போடும் மெண்டல்களின் போக்கைச் சாடுவதும்தான். ஆனால் பொழப்புக்காக இப்படி ஒரு நாயகியை நிர்வாணமாக்கி இரவு முழுக்க அநாவசியமாக ஓட, மிரள, பதற, கதற, புலம்ப விட்டு அதன் பின்னணியை விவரித்ததில் அமலா பாலின் உழைப்பை வீணாக்கி விட்டார். கூடவே வசனங்களில் எல்லை மீறி காதில் ரத்தம் வர வைத்தும் விட்டார்.

மொத்தத்தில் இந்த ஆடை-யில் கிழிசல்கள் அதிகம்!

மார்க் 3 / 5