ஒரு லட்சம் கோடி மரங்கள் நடுவதை இலக்காகக் கொண்ட இணைய தளம்!

ஒரு லட்சம் கோடி மரங்கள் நடுவதை இலக்காகக் கொண்ட இணைய தளம்!

தாய்வீடு என்பது போல ஒரு சில இணையதளங்களுக்கும் தாய் இணையதளம் இருக்கிறது. அத்தகைய தாய் இணையதளம் ஒன்றை தான் இப்போது அறிமுகம் செய்து கொள்ள இருக்கிறோம். ஒரு லட்சம் கோடி மரங்கள் நடுவதை இலக்காக கொண்ட அந்த இணையதளத்தை பார்ப்பதற்கு முன், அதன் சேய் தளத்தை பார்த்துவிடலாம். அதற்கும் முன், சுவாரஸ்யமான வினாடிவினாவுக்கு தயாராகலாம். ஆப்பிக்க நாடான ’சாட்’ மற்றும் ஐரோப்பிய நாடான அல்பேனியா ஆகிய இரண்டு நாடுகளில் எந்த நாட்டில் மரங்கள் அதிகம் ? இந்த கேள்விக்கான பதில், அல்பேனியாவில் 100 கோடிக்கும் அதிகமான மரங்கள் இருக்கின்றன என்றால், சாட் நாட்டில் 460 கோடிக்கும் அதிகமான மரங்கள் இருக்கின்றன.

அதே போல காம்பியா மற்றும் மரிடானியா ஆகிய நாடுகளில் எந்த நாடு அதிக மரங்களை கொண்டுள்ளது. காம்பியாவில் 51 மில்லியன் மரங்கள் என்றால், மரிடானியாவில் இரண்டு மடங்காக 114 மில்லியனுக்கு மேல் மரங்கள் உள்ளன. ஆப்பிரிக்க நாடான காமரூனுடன் (1900 கோடி ) ஒப்பிடும் போது தென்னமரிக்க நாடான பெரு (4600 கோடி ) அதிக மரங்களை கொண்டுள்ளது.

இத்தகைய விவரங்களை தெரிந்து கொள்வதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், ட்ரிகேம்.இயோ (https://treegame.io/) இணையதளம் சுவாரஸ்யமானதாக இருக்கும். இரண்டு நாடுகளின் பசுமை வளத்தை கணிப்பதை ஒரு ஒப்பீடு விளையாட்டாக வழங்கும் இந்த தளம், நம் கணிப்பு சரியா, தவறா என்பதை உணர்த்து, சரியான பதிலையும் அளிக்கிறது.

இந்த ஒப்பீடு விளையாட்டு முடிவில் மரங்கள் நடப்படுவதற்கு நன்கொடை அளிக்கலாமே என இந்த தளம் ஊக்குவிக்கிறது. இந்த சுவாரஸ்யமான விளையாட்டின் நோக்கமே, உலகில் மரக்கன்றுகள் நடப்படுவதற்கு நன்கொடை அளிக்க கோரிக்கை வைப்பது தான். அட, விளையாட்டு தளத்தின் பின் இப்படி ஒரு நோக்கமா எனும் வியப்புடன், நன்கொடைக்கான இணைப்பை கிளிக் செய்து சென்றால், பிலாண்ட் பார் தி பிலானட். ஆர்க் (plant-for-the-planet.org) இணையதளத்திற்கு அழைத்துச்செல்லப்படுகிறோம்.

இது தான் தாய் தளம். இந்த தளத்திற்கு வருகை தர வைப்பதற்காகவே துணை தளமாக மர விளையாட்டு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மூல தளத்தின் நோக்கத்தையும், செயல்பாட்டையும் தெரிந்து கொண்டால் இன்னும் வியப்பாக இருக்கிறது. மேலே சொன்னது போல, உலகில் மேலும் ஒரு லட்சம் கோடி மரங்களை வளர்ப்பதை இந்த தளம் நோக்கமாக கொண்டுள்ளது.

ஒரு லட்சம் கோடி மரங்களை வளர்ப்பதற்காக 200 க்கும் மேலான திட்டங்கள் மூலம் மரக்கன்றுகளை நடுவதற்காக நன்கொடை அளிக்க இந்த தளம் வழி செய்கிறது.

உலகில் ஒரு காலத்தில் 6 லட்சம் கோடி மரங்கள் இருந்த நிலை மாறி இப்போது, 3 லட்சம் கோடி மரங்கள் மட்டுமே உள்ளன. எனவே, கால நிலை மாற்றத்தின் பாதிப்பை எதிர்கொள்ள மேலும் ஒரு லட்சம் கோடி மரங்களை வளர்க்க வேண்டியிருக்கிறது என்கிறது இந்த தளம். இதை ஒரு இயக்கமாகவே மேற்கொண்டு வருகிறது.

இந்த இணையதளத்தையும், அதன் மூலமான மரம் நடு இயக்கத்தையும் பெலிக்ஸ் பிங்பைனர் எனுல் இளைஞர் நடத்தி வருகிறார். இவரது கதையை கேட்டால் இன்னும் வியப்பாக இருக்கிறது. பெலிக்ஸ் தனது 9 வது வயதில் மரம் நடுவதில் ஆர்வம் கொண்டிருக்கிறார். அப்போது நான்காவது படித்துக்கொண்டிருந்த பெலிக்சிடம் பள்ளி ஆசிரியை மரம் நடுவது பற்றிய கட்டுரை ஒன்றை எழுதச்சொல்லியிருக்கிறார்.

மரம் நடுவது பற்றிய கட்டுரைக்காக தகவல் சேகரித்த போது தான், கென்யா இயற்கை போராளி வாங்காரி மத்தாய் பற்றி தெரிந்து கொண்டிருக்கிறார். அவரால் ஈர்க்கப்பட்ட பெலிக்ஸ், மரம் நடுவதையே தனது வாழ்நாள் இலக்காக கொண்டு செயல்படத்துவங்கினார். ஒரு லட்சம் கோடி மரங்களை சக மாணவர்களுடன் சேர்ந்து நடலாம் எனும் எண்ணத்துடன் செயல்படத்துவங்கியவர் இதற்காக உருவாக்கிய இயக்கம் தான் இந்த இணையதளம்.

சிறார்களை மரம் நடும் இயகத்திற்கான தூதர்களாக்கி விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மரம் நடுவதற்கான நன்கொடை, அவற்றை பராமரிப்பதற்கான மென்பொருள் என பல சேவைகளை இந்த தளம் வழங்கி வருகிறது: https://www.plant-for-the-planet.org/

சைபர்சிம்மன்

error: Content is protected !!