October 7, 2022

’யார் நீங்க?’ – அரசியலுக்கு வர நினைக்கும் நடிகர்களுக்கு ஓர் எச்சரிக்கை !

சுமார் 30 வருஷங்களாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்ற கம்பீரத்தில் வலம் வருபவர் ரஜினிகாந்த். சினிமா மாயை கொடுத்த தைரியத்தில் நீண்ட காலமாக தமிழக அரசியலில் ரஜினிகாந்த் கால் பதிப்பார் என்று எதிர்பார்த்து வந்த நிலையில், போன வருஷ இறுதியில் தான் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார் ரஜினிகாந்த். கூடவே ஆன்மிக அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள இவர் சமீபத்தில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கப் போவதாகவும், என்னை நடிகனாப் பார்த்தால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்றும் கூறி இன்று மதியம் தூத்துக்குடி வந்தடைந்தார்.

இதனிடையே காலா திரைப்படத்தின் வெளியீட்டிற்கும் ரஜினிகாந்த் கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கும் எதிர்ப்பார்ப்பு உள்ளது என்று சிலர் ஆருடம் சொல்லி வரும்சூழ்நிலையில், இன்று தனது அரசியல் ஆரம்பத்தின் முதல் பயணமாக, ரஜினிகாந்த் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்றது மாஸ்டர் ஸ்ட்ரோக் என அரசியல் விமர்சகர்களால் கூறப்பட்டாலும், அவர் தூத்துக்குடி சென்றது முதல் திரும்ப வந்தது வரை சூழ்நிலை அவருக்கு எதிர்மறையாக அமைந்தது.

துக்கம் விசாரிக்க செல்பவர் தன்னைப் பார்த்தால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்று கூறிச் சென்ற வரை ரசிகர்கள் கூட்டம் ஆரவாரத்துடன் வரவேற்ற்ற காட்சியை கண்டு மனம் மகிழ்ந்தார் ரஜினி. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நலம் விசாரிக்கத் துவங்கினார். அங்கு பாதிக்கப் பட்ட ஒரு இளைஞன் யாருமே எதிர்பார்க்காத கேட்ட கேள்வி அவர் டோட்டல் இமேஜையே காலி செய்து விட்டதாக உணர்ந்திருக்கக் கூடும், ஆம்..சூப்பர் ஸ்டார் யாரென்று கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்று பாடச் செய்த ரஜினிகாந்தை பார்த்து “யார் நீங்கள்?” என்று ஒரு கேள்வி கேட்டான் அந்த இளைஞன்.

இந்த கேள்வியை கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்காத ரஜினி சிரித்தவாறே ‘நான்ம்பாரஜினிகாந்த், சென்னையிலிருந்து வருகிறேன் என்று பதில் கூற அடுத்த நொடியே “100 நாட்களாக நாங்கள் போராடியபோது ஏன் நீங்கள் வரவில்லை சென்னை வெகு தூரமோ?” என்ற மறுகேள்வி ரஜினியை சூழ்ந்திருந்த அவரது ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள் ளாக்கியது.

இதையடுத்து சற்று சுதாரித்த ரஜினி நன்றி வருகிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். ஆனாலும் அந்த இளைஞர் கேட்ட கேள்வியால் அவருக்கு ஒரு நிமிடம் தலை சுற்றியதோ என்னவோ, சென்னைக்குத் திரும்பிய போது பத்திரிக்கையாளர் சந்திப்பில் கடு கடுவென இருந்தார், பேச்சில் சற்று பதட்டம், கேள்வியை உள்வாங்குவதற்கு முன்னரே எதிர்மாறான பதிலை கூறியதிலிருந்து அந்த பதட்டம் மேலும் அதிகமானது.

இறுதியாக அவர் பேட்டியில் துப்பாக்கிச்சூட்டில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டார்கள் என அவர் கூறிய கருத்து அவர் யாருக்கு சாதகமாக யாருக்கு ஆதரவாக வந்துள்ளார் என்பதனை வெளிச்சம்போட்டு காண்பித்தது. உளவுத்துறை தவறிழைத்து விட்டது ஆனால் அரசாங்கத்தை முழுவதுமாக குறை கூறுவதும் முதல்வரை எதற்கெடுத்தாலும் ராஜினாமா செய்ய சொல்வதும் ஏற்புடையது அல்ல என்று கூற துவங்கியது தனி நபர் கமிஷன் மீது முதலில் நம்பிக்கை இல்லை எனக்கூறிவிட்டு பின்பு அதனைப்பற்றி ஆலோசனை செய்யவேண்டும் என்று கூறியதெல்லாம், அவர் குழப்பத்தின் உச்சத்தில் உள்ளார் என்பதை தெளிவுபடுத்தியது.

‘எதற்கெடுத்தாலும் போராடுவது தவறு, அதன் பின் யாரும் தொழில்தொடங்க வரமாட்டார்கள், இளைஞர்கள் வேலை இல்லாமல் இருப்பார்கள், எதற்கெடுத்தலும் போராடினால் தமிழ்நாடே சுடுகாடாகி விடும்’ இப்படியாக இன்று பத்திரிகையாளர்களிடம் பேட்டிளித்துள்ள ரஜினி சமீபமாக வெளியான காலா படத்தின் ட்ரெய்லரில் தான் பேசியிருந்த ‘நம் உடம்பு தான் நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம், இந்த உலகத்திற்கே நாம் யார் என்று காட்டுவோம் கூட்டுங்கடா மக்களை’ , ‘ நிலம் உனக்கு அதிகாரம், நிலம் எங்களுக்கு வாழ்க்கை’ வசனங்கள் அனைத்தும் படத்திற்கு மட்டும் தான் நிகழ்காலத்திற்கு உதவாது என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது போல பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதே ரஜினிகாந்த் சினிமாவில் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அடிக்கடி மாறுவேடம் அணிந்து நகர்வலம் சென்று மக்களின் நிலையை அறிந்துள்ளதாகவும், மாறுவேடமின்றி சென்றால் மக்கள் கூட்டம் சூழ்ந்து விடும் என்றும் கூறியுள்ளார். ஆனால் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்தைப் பார்த்து தூத்துக்குடி இளைஞர் நீங்கள் யார் என்று கேட்டிருப்பது இன்றைய ஹீரோக்களுக்கு -குறிப்பாக அரசியலுக்கு வர நினைக்கும் நடிகர்களுக்கு ஓர் எச்சரிக்கை என்பது மட்டும் நிச்சயம்!

அகஸ்தீஸ்வரன்