October 26, 2021

ஏ எம் ராஜா பர்த் டே டுடே!

சிலரது பாடலை காலை கண் விழிக்கும் போது கேட்கப் பிடிக்கும். சிலரது பாடலை பயணத்தின் போது கேட்கப் பிடிக்கும். நம்மில் பலர் வேலை சுமையின் அலுப்பு தெரியாமல் இருக்க, பாட்டு கேட்டுக் கொண்டே வேலை செய்வது வழக்கம். ஆனால், வாழ்க்கையின் அலுப்பு தெரியாமல் இருக்க, A.M.ராஜாவின் பாடல்களைக் கேட்டால் போதும், நம்மை உற்சாகம் தொற்றிக் கொள்ளும். இவரது தேன் குரலின் மகிமை அப்படி. சோகத்தின் சாயலும், சந்தோஷத்தின் மையலும் சேர்ந்து கலந்து செய்த கலவைதான் A.M.ராஜாவின் குரலமைப்பு. இரவின் மடியில் இனிமை சேர்க்கும் பாடல்கள் இவருடையது.

am raja

தென்னிந்திய இசை வானில் துருவ நட்சத்திரமாக விளங்கிய A.M.ராஜா, வட இந்தியத் திரையுலகிலும் தன் இசைத் திறமையை நிலைநாட்டியிருக்கிறார். ஹிந்தி சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவரான ராஜ்கபூரினால் பாராட்டுப் பத்திரம் பெற்றவர். மற்றவர்களது இசையில் இவர் பாடிய பாடல்களை விட இவரே இசையமைத்து பாடிய பாடல்கள் நிரம்ப பிரபலம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அத்தனை மொழிகளிலும் இவர் பிரபலம். நிறைய பாடகர்கள் பல மொழிகளில் பாடி இருந்தாலும், தான் பாடிய அத்தனை மொழிகளிலும் பிரபலமான சில பாடகர்களுள் இவரும் ஒருவர்.

*******

A.M.ராஜா  இசையமைத்து, தமிழ் திரையுலகை முற்றிலுமாக வேறு திசைக்கு இட்டுச் சென்ற பெருமை மிகு இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் இயக்கத்தில் உருவான தேன் நிலவு படத்தில் வரும் காலையும் நீயே, மாலையும் நீயே பாடல் கரும்புச் சாறு. பாடல் வரிகளை A.M.ராஜா பாட, இன்றும் இளமை கொஞ்சும் குரலழகி ஜானகி அவர்களின், ஹம்மிங், பாடல் நெடுக வந்து கேட்பவர்களை மயக்கும் தேனிசை.

*******

ஆடாத மனமும் ஆடுதே என்ற களத்தூர் கண்ணம்மா பாடல் இசையுலகில் A.M.ராஜா, P.சுசீலா சேர்ந்து பாடிய பாடல்களில் சிகரத்தை தொட்ட பாடல். இந்த பாடலில் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு உற்சாகம் கூட்டி இருப்பார்கள். A.M.ராஜாவை விட, P.சுசீலாவின் பங்களிப்பு சற்று கூடுதலாகவே இருக்கும் இப்பாடலில்.

*******

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் பாடல் மிஸியம்மா படப் பாடல். ஜெமினி, சாவித்திரியின் இளமையான தோற்றம், பழம்பெரும் நடிகர் ரெங்காராவ் அவர்களின் கைதேர்ந்த நடிப்பு, A.M.ராஜாவின் குரல், இனிமையான இசை அனைத்து சங்கதிகளும் ஒருங்கே மிளிரும், காலத்தால் அழியாத, இந்தத் தலைமுறை ரசிகர்களும் விரும்பிக் கேட்கும் பாடல்.

*******

ஆடிப்பெருக்கு படத்தில் தோன்றும் தனிமையிலே இனிமை காண முடியுமா என்ற பாடல் தத்துவ முத்து. டூயட் பாடலாக இருந்தாலும் அதிலே தத்துவதத்தை நுழைத்தது பாடல் ஆசிரியரின் திறமை. “மலர் இருந்தால் மணமிருக்கும் தனிமையில்லை, செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை” என்று நீளும் பாடல் வரிகள், உலக வாழ்க்கைச் சக்கரத் தத்துவத்தை ஒரு எளிய பாடலில் உணர்த்தியுள்ளது.

*******

இப்படி எத்தனையோ பாடல்கள். A.M.ராஜா குரல் இனிமையும், அவரது பாடல்களில் வரும் வார்த்தை ஜாலங்களும், இசை அமைப்பாளர்களின் மெட்டு விளையாட்டுக்களும் ஒன்று சேர்ந்து இவர் பாடிய பாடல்கள் உலக உருண்டை சுழலும் வரை எல்லோரது மனதையும் சுற்றி வரும் பாடல்கள்தான் என்பதில் ஐயமில்லை. ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற பாடல்களில் இருந்து சில பாடல்கள் இதோ:

சின்ன சின்ன கண்ணிலே.. (தேன் நிலவு)

கண்களின் வார்த்தைகள் புரியாதோ.. (களத்தூர் கண்ணம்மா)

மைனர் லைஃப் ரொம்ப ஜாலி.. (இல்லறமே நல்லறம்)

வாடிக்கை மறந்ததும் ஏனோ.. (கல்யாணப் பரிசு)

ஓஹோ எந்தன் பேபி.. (தேன் நிலவு)

வாராயோ வெண்ணிலாவே.. (மிஸியம்மா)

போதும் உந்தன் ஜாலமே.. (கடன் வாங்கி கல்யாணம்)

தேன் உண்ணும் வண்டு.. (அமர தீபம்)

தென்றல் உறங்கிய போதும்.. (பெற்ற பிள்ளையை விற்ற அன்னை)

துயிலாத பெண் ஒன்று கண்டேன்.. (மீண்ட சொர்க்கம்)

நிலவும் மலரும் பாடுது.. (தேன் நிலவு)

நினைக்கும்போதே ஆஹா.. (இல்லறமே நல்லறம்)

உன்னைக் கண்டு நான் வாட.. (கல்யாணப் பரிசு)

பாட்டு பாடவா.. (தேன் நிலவு)

காதலிலே தோல்வியுற்றாள்.. (கல்யாணப் பரிசு)

மனமென்னும் வானிலே.. (எல்லோரும் இந்நாட்டு மன்னர்)

எந்தன் கண்ணில் கலந்து.. (மல்லிகா)

துள்ளி துள்ளி அலைகள் எல்லாம்.. (தலை கொடுத்தான் தம்பி)

மயக்கும் மாலை பொழுதே நீ போ போ.. (குலேபகாவலி)

புவனேஷ்வரி ராமநாதன்