‘நீட்’ தேர்வு தொடர்பான ஏ.கே. ராஜன் கமிட்டி அறிக்கை வெளியானது!

‘நீட்’ தேர்வு தொடர்பான ஏ.கே. ராஜன் கமிட்டி அறிக்கை வெளியானது!

மிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிலையில்.நீட் தேர்வினால் தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி அமைத்து உத்தரவிட்டார்.. அதிலும் அரசுக்கு ஒரு மாதத்தில் அந்த அறிக்கை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. கூடவே நீட் தேர்வு தொடர்பாக பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தங்களின் கருத்தை தெரிவிக்கலாம் என்று அறிவித்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் இந்த குழுவிடம் 86 ஆயிரம் பேரின் கருத்துகளை பதிவு செய்தனர். பொதுமக்களின் கருத்துகளை ஆய்வு செய்து நீட் தேர்வு அறிக்கையை ஏ.கே.ராஜன் குழு தயார் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர். இந்நிலையில், நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு அரசிடம் சமர்ப்பித்த அறிக்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

165 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையில் நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் எதிர்கொண்டுள்ள சவால்கள், தாக்கம், பாதிப்புகள் குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவ கல்வி, நீட் வரலாறு, பொதுமக்கள் கருத்து, சமூக பொருளாதாரத்தில் நீட்டின் தாக்கம், பரிந்துரைகள் என்று மொத்தம் 12 பிரிவுகள் இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. இதில் வெளிநாடுகளில் நடைபெறும் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த பகுதியில் நீட் ஆதரவு தெரிவித்தவர்களின் 7 கருத்துகள் மற்றும் எதிர்ப்பு தெரிவித்தவர்களின் 20 கருத்துகள் பட்டியல் இடப்பட்டுள்ளது.

குறிப்பாக நீட் தேர்வில் தமிழக மருத்துவ துறையில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடக்க கல்வியில் மாணவர் சேர்க்கை, சதவீதம், ஆசிரியர் மாணவர்கள் விகிதம் உள்ளிட்ட தகவல்கள் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை கூறப்பட்டுள்ளது. தேசிய தரவரிசையில் தமிழகத்தின் நிலை தொடர்பாக தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 9 பிரிவுகளில் முதல் அல்லது 2வது இடத்தை தான் தமிழகம் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாநில கல்வி திட்டத்தில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை, பாலின வாரியாக எண்ணிக்கை, தேர்ச்சி சதவீதம் உள்ளிட்ட தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்தது தொடர்பான தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2016-17 வரை ஆண்டுக்கு 3 ஆயிரம் மாநில அரசு பாட திட்டத்தில் படித்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். நீட் அமல்படுத்திய பின்பு இந்த எண்ணிக்கை படிப்பு குறைந்துள்ளது. 2020-2021 வெறும் 336 மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கும் மாநில பாட திட்ட மாணவர்களின் சதவீதம் நீட் தேர்வுக்கு முன்பாக 60 முதல் 70 வரை இருந்தது. ஆனால் நீட் அமல்படுத்தப்பட்ட பின்பு இது 40 முதல் 50 ஆக குறைந்துள்ளது. ஆனால் சிபிஎஸ்இ பாட திட்ட மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.

நீட் தேர்வு அமல்படுத்தப்படுவதற்கு முன்பு 0.13 சதவீத சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பின்பு இந்த சதவீதம் 26 ஆக உயர்ந்துள்ளது. இதைபோன்று தமிழ்வழியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கையும் மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளது. மேலும் கிராமப்புறங்களில் இருந்து மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை, முதல் தலைமுறை மாணவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது.

இதைத்தவிர்த்து முதல் தேர்வு எழுதியவர்களில் மிகவும் குறைவானவர்கள் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. இதற்கு அடுத்த பகுதியில் நீட் தேர்வில் பயிற்சிக்கு வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்த கால பயிற்சிக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கட்டணமும், நீண்ட கால பயிற்சிக்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை வசூலிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு கருத்துகள் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பரிந்துரைகள்
* நீட் தேர்வில் விலக்கு பெற தனி சட்டம் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறலாம்.
* இதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ளலாம்.
* 2007ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டுள்ள நுழைவுத் தேர்வு தடை சட்டத்தினை அடிப்படையாக கொண்டு விலக்கு பெறலாம்.
* 12ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டே மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வினை நடத்தலாம்.

நீட் தேர்வால் என்ன பாதிப்பு?
* நீட் தொடர்ந்தால் சுகாதார கட்டமைப்பு, கல்வி பாதிக்கப்படும்.
* ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருத்துவர்கள் இல்லாத நிலை ஏற்படும்.
* அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் இருக்கமாட்டார்கள்.
* இந்தியாவில் எந்தவித பொது நுழைவு தேர்வும் நியாயமானது இல்லை.

* நீட் தேர்வு கற்றலை பிரபலப்படுத்தாமல் கோச்சிங் டெண்டர்களை தான் பிரபலப்படுத்துகிறது.

முதல் தலைமுறை மாணவர்களின் சதவீதம் ஆண்டு
2010-11 24.61
2011-12 25.09
2012-13 25.93
2013-14 27.49
2014-15 27.49
2015-16 29.45
2016-17 24.94
2017-18 13.59
2018-19 14.51
2019-20 17.19
2020-21 14.46

மருத்துவ மாணவர் சேர்க்கை (சராசரியாக)
ஆண்டு தமிழ்வழி ஆங்கிலவழி
நீட்டுக்கு முன்பு
2010 – 2017 500 2500
நீட்டுக்கு பின்பு
2017 – 21 79 3700

மருத்துவ மாணவர் சேர்க்கை (சராசரியாக)
ஆண்டு மாநிலகல்வி சிபிஎஸ்இ மற்றவர்கள்
நீட்டுக்கு முன்பு
2010 – 2017 3000 10 10
நீட்டுக்கு பின்பு
2017 – 21 2500 1264 80

மாநில பாட திட்ட மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம்
ஆண்டு விண்ணப்பித்தவர்கள் அரசு தனியார் மொத்தம்
2014-15 1798 26 12 38
2015-16 1641 33 3 36
2016-17 1173 31 3 34
2017-18 474 0 3 3
2018-19 415 4 1 5
2019-20 350 5 1 6
2020-21 (92.5%) 306 10 1 11
2020-21 (7.5%) 965 239 97 336 ” இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!