தமிழ் அகராதிகளை எல்லாம் ஓரிடத்தில் தொகுத்தளிக்கும் மாபெரும் ஒன் லுக் அகராதி!

தமிழ் அகராதிகளை எல்லாம் ஓரிடத்தில் தொகுத்தளிக்கும் மாபெரும் ஒன் லுக் அகராதி!

ங்கிலத்தில் ’ஒன்லுக்’ (https://www.onelook.com/ ) இணைய அகராதி இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இணையத்தில் எண்ணற்றை இணைய அகராதிகள் இருந்தாலும், ஒன்லுக் அகராதியின் சிறப்பு, பல்வேறு இணைய அகராதிகளில் தேடிப்பார்க்கும் வசதியை அளிப்பது தான். ஆயிரத்து அறுபத்தியோரு அகராதிகளில் இருந்து, ஒரு கோடியே தொன்னூரு லட்சம் சொற்களில் இருந்து தேடப்படும் சொல்லுக்கான பொருளை இந்த அகராதி அளிக்கிறது. ஒன்லுக் போலவே, தமிழ் அகராதிகளை எல்லாம் ஓரிடத்தில் தொகுத்தளிக்கும் மாபெரும் இணைய அகராதியாக தமிழ்பேழை (https://mydictionary.in/) அமைந்திருக்கிறது.

எளிய முகப்பு பக்கத்தை மீறி, இந்த தளம் அருமையானது என்பதை இதன் மூலம் சொற்களுக்கான பொருள் தேடிப்பார்க்கும் போது உணரலாம். ஆங்கிலம் அல்லது தமிழில் தட்டச்சு செய்து தேடும் வசதி கொண்ட இந்த தளத்தில், குறிப்பிட்ட சொல்லுக்கான பொருளை தேடினால், தொடர்புடைய அகராதிகளின் தேடல் முடிவுகளை வரிசையாக பட்டியலிடப்படுகிறது. ஒரே இடத்தில் இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட அகராதிகளின் தேடல் முடிவுகளில் தோன்றுவதன் பின்னே இருக்கு கூடிய தொழில்நுட்பம் வியக்க வைக்கிறது.

தேடல் பட்டியலில் உள்ள அகராதிகளில் தனியே தேடிப்பார்க்கும் வசதியும் இருக்கிறது. தமிழில் இத்தனை அகரமுதலிகளா என்ற வியப்பும் ஏற்படாமல் இல்லை. அதிலும் தொழில்நுட்பம் சார்ந்த அகலமுதலிகள் பல இருப்பதை பார்க்கும் போது தமிழ் சூழலில் சத்தம் இல்லாமல் நடைபெற்று வரும் பணிகளை உணர முடிகிறது.

இண்டெர்நெட் மற்றும் வெப் ஆகிய ஆங்கில சொற்களுக்கான பொருளை இந்த தளத்தில் தேடிப்பார்த்த போது, பட்டியலிடப்பட்ட முடிவுகள் பல விஷயங்களை சொல்வதாக இருக்கின்றன. வெப் என்பது இணைய வலை என்றும் வலை என்றும் சரியாக குறிப்பிடப்பட்டிருப்பதுடன், பொறியியல் உள்ளிட்ட துறைகளில் இந்த சொல் வேறு பொருளை கொண்டிருப்பதையும் உணர முடிகிறது.

தமிழ் இடைமுகம் தவிர ஆங்கில இடைமுகமும் உள்ளது.

இந்த தளத்தின் மூல திட்டம் பற்றிய விளக்கத்தில், ஆங்கில விக்கிஷனரியில் ஆறு கோடிக்கும் அதிகமான சொற்கள் இருக்கும் நிலையில் தமிழ் விக்கிஷனிரியில் பத்து மில்லியனுக்கும் மேலான சொற்கள் பதிவுகள் மட்டுமே இருப்பது சுட்டிக்காட்டப்பட்டு, இணையத்தில் தமிழ் சொற் களஞ்சியத்தை மேம்படுத்துவது நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூல அகராதிகள் தனிச்செயலியாக வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் அகராதியை பயன்படுத்துபவர்கள் நிச்சயம் தமிழ் பேழையை பயன்படுத்தி பார்க்க வேண்டும். பயன்படுத்தினால் மற்றவர்களுக்கும் பரிந்துரைக்கத்தோன்றும். அப்படியே இந்த மகத்தான திட்டத்தை மேற்கொண்டிருக்கும் டாக்டர்.தமிழ்பரிதி மாரிக்கு ஒரு பாராட்டு மின்னஞ்சலையும் அனுப்பி ஊக்குவிக்கலாம். – [email protected]

( ஒரு சின்ன வருத்தம் என்னவெனில், இந்த திட்டம் தொடர்பாக மேலதிக தகவல்களை கூகுளில் தேடிய போது, வேறு எந்த சுட்டியையும் காண முடியவில்லை. இத்தகைய மகத்தான இணைய முயற்சிகள் பற்றி நாம் இன்னமும் விரிவாகவும், பரவலாகவும் பேச வேண்டும்.)

சைபர்சிம்மன்

error: Content is protected !!