குழந்தைகளின் பாதுகாப்பில் பின்னடைந்து போனது இந்தியா! – ஷாக் ரிப்போர்ட்!

குழந்தைகளின் பாதுகாப்பில் பின்னடைந்து போனது இந்தியா! – ஷாக் ரிப்போர்ட்!

உலகக் குழந்தைகளுக்கு ஓர் எதிர்காலம்?’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, குழந்தை களுடைய வாழ்க்கைச் செழிப்பு, நிலைத்தன்மை (sustainability) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு 180 நாடுகளைத் தரவரிசைப்படுத்தி இருக்கிறது. இதில் இந்தியாவுக்கு கிடைத்திருப்பது 131-ம் இடம்!  அதாவது குழந்தைகளின் பாதுகாப்பான எதிர்காலத்திற்காக முயற்சிக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா, ஈராக்கை விட பின்னடைவு கண்டுள்ளது.

இயற்கையின் சீற்றங்களான, மழை, வெள்ளம், காட்டுத் தீ, வறட்சி, பொருளாதார நெருக்கடி, நாடுகளுக்கிடையே மோதல், மனிதத்தின் வீழ்ச்சி ஆகியவற்றை காலநிலை நெருக்கடியின் விளைவுகளாக நம் கண் முன்னே எதிர்கொண்டு வருகிறோம்.

காலநிலை நெருக்கடியால்,  குழந்தைகள் நலனில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து அச்சம் தரும் ஆய்வுகள் பல வெளியாகியிருக்கின்றன. இந்நிலையில், சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று, உலகிலுள்ள ஒவ்வொரு குழந்தையும் காலநிலை நெருக்கடியால் அச்சுறுத்தல்களை எதிர் கொள்வதாகவும், நேரடியாக அது அவர்களின் உடல்நலனில் பெரும் விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் அதிர்ச்சி தரும் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

ஆம்.. உலக சுகாதார அமைப்பு, UNICEF மற்றும் மருத்துவ இதழ் The Lance ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள உலக குழந்தைகளுக்கான எதிர்காலம் என்ற அறிக்கை இதை விளக்குகிறது. இந்த அறிக்கையில், உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளையும் பற்றிய பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில், குழந்தைகளின் பாதுகாப்பான எதிர்காலத்திற்காக முயற்சிக்கும் நாடுகள் வைக்கப்பட்டன, அதில் இந்தியா ஈராக்கை விட பின் தங்கி உள்ளது.

குழந்தைகளின் பாதுகாப்பான எதிர்காலம் குறித்து இந்தியாவின் அலட்சியத்தை விட தீவிரமான மற்றொரு விஷயம் இந்த அறிக்கையின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இன்றைய உலகில்  குழந்தைகளின் ஆரோக்கியம், அவர்களைச் சுற்றியுள்ள சூழல் மற்றும் அவர்களின் எதிர்காலம் ஆகியவற்றைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் எந்த நாடும் உலகில் இல்லை என்று இந்த அறிக்கை கூறியுள்ளது.

நியூசிலாந்தின் முன்னாள் பிரதமரும் இந்த அறிக்கையைத் தயாரித்த குழுவின் துணைத் தலைவருமான ஹெலன் கிளார்க், இன்று உலகெங்கிலும் உள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் வறுமை காரணமாக ஐந்து வயதுக்குட்பட்ட 250 மில்லியன் குழந்தைகளின் வளர்ச்சி அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக உலகில் ஒவ்வொரு குழந்தையின் இருப்பும் நெருக்கடியில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் அந்தோனி கோஸ்டெல்லோ (Anthony Costello), “தொழில் நிறுவனங்களில் சுய கட்டுப்பாடு என்பது தோல்வியடைந்து விட்டது. ஆஸ்திரேலியா, கனடா, மெக்ஸிகோ, நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பலவற்றில், சுய கட்டுப்பாடு என்பது குழந்தைகள் விளம்பரங்களால் பாதிக்கப்படுவதைத் தடுக்கவில்லை என்பதைக் காட்டுகிறது” என்கிறார்.

நொறுக்குத் திண்பண்டங்கள் மற்றும் இனிப்பு நிரம்பிய குளிர்பானங்களின் வணிக ரீதியான சந்தைப்படுத்துதல், குழந்தைகள் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்ளுதல், அதிக எடை மற்றும் உடல் பருமனுக்கு ஆளாவதோடு தொடர்புடையது. பருமனான குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் எண்ணிக்கை 1975-ல் 11 மில்லியனிலிருந்து 2016-ல் 124 மில்லியனாக அதிகரித்தது. இது முந்தையதை ஒப்பிடும் போது 11 மடங்கு அதிகமாகும்.

மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள்:

குழந்தைகள் இப்புவியில் வருங்காலத்தில் வாழ்வதற்கு கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வை வேகமாக மட்டுப்படுத்துதல்.

நிலையான வளர்ச்சியை அடைய மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரை மையப்புள்ளியில் வைத்தல்.

குழந்தைகள் ஆரோக்கியம் மற்றும் உரிமைகள் தொடர்பாக, புதிய கொள்கைத் திட்டங்கள், முதலீடுகளை உருவாக்குதல்.

கொள்கை முடிவுகளில் குழந்தைகளின் குரல்களை இணைத்தல்

தீங்கு விளைவிக்கும் வணிகச் சந்தையில் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

error: Content is protected !!