அ..தானி : என்ன செய்யப் போகிறது செபி? என்ன செய்யப் போகிறது மோடி அரசு?

அ..தானி :  என்ன செய்யப் போகிறது செபி? என்ன செய்யப் போகிறது மோடி அரசு?

ந்தேகங்கள், யூகங்களின் அடிப்படையில் சில ஆண்டுகளாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும், ஆம் அவை உண்மைகளே என்று தெளிவாக்கி இருக்கிறது ஹின்டன்பர்க் நிறுவனத்தின் 109 பக்க இரண்டாண்டு புலனாய்வு அறிக்கை. அதானி குழும பங்குகளின் மதிப்பும், அதன் அடிப்படையில் அமைந்த சொத்துக்களின் மதிப்பும், பன்மடங்கு ஊதிப் பெருக்கப்பட்டவை என்று ஐயம் திரிபற நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆவணங்கள் பேசுகின்றன. கையாண்ட தில்லுமுல்லு வழிமுறைகள் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன. பங்குச் சந்தையில் லிஸ்ட் ஆகி இருக்கும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் அதன் நிறுவனர் (குடும்பமும் சேர்த்து) 75% சதவிகிதத்திற்கு மேல் பங்குகளை வைத்திருக்கக் கூடாது என்பது செபி விதி. மீதி பங்குகள் FII எனும் அந்நிய முதலீட்டாளர்கள், DII எனும் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள், தனி நபர்கள் வைத்திருக்கலாம். இது கார்ப்பரேட் ஜனநாயகம் என்று சொல்லப்படுகிறது.

பெரும்பாலான அவரது நிறுவனங்களில் அதானி தொண்டைக்குழி வரைக்கும் 74.8% பங்குகளை வைத்திருக்கிறார். 15 – 18% முதலீடு செய்திருக்கும் அந்நிய முதலீட்டாளர்கள் யாரென்று பார்த்தால் மொரீசியஸ் தீவுகளில் கெளதம் அதானி குடும்பத்தினரால் தொடங்கப்பட்ட பினாமி நிறுவனங்கள். ஆதாரங்களைத் தோண்டி எடுத்திருக்கிறது ஹிட்டன்பர்க். உள்நாட்டு முதலீட்டாளர்கள் அற்ப சொற்பம். நீண்ட நாள் குடும்ப நண்பர்களாக இருக்கக்கூடும். சமீபத்தில் தான் 75 ஆயிரம் கோடியுடன் எல்ஐசி உள்ளே வருகிறது.

ஆக, 95% அதானி குடும்பத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்போது பங்குகளின் இயல்பு மதிப்பை (Intrinsic value) விட பத்து மடங்கு என்ன, கூடுதலாகவே பெருக்க வைக்க முடியும். இந்தக் கைங்கரியங்களை செய்த அதானியின் சகோதரர்கள், மைத்துனர் வேறு சில மோசடி வழக்குகளில் சிக்கியவர்கள். முன்னாள் பங்குச் சந்தை மோசடி மன்னன் கேத்தன் பரேக்கின் கையும் இருக்கிறது என்கிறது ஹின்டன்பர்க் ஆவணம். கௌதம் அதானி உலகின் மூன்றாவது பணக்காரரான கதைச் சுருக்கம் இது.

அதானி சப்ளை செய்யும் கேஸ் பைப்பை திறந்தால் தங்கம் கொட்டுகிறதா? அப்புறம் எதற்கு ஒரு ரூபாய் வருமானம் ஈட்டும் அதானி கேஸ் பங்கு ரூ 276 க்கு விற்கப்படுகிறது. அதே ஒரு ரூபாய் சம்பாதிக்கும் Gas authority of India ltd (GAIL) 9.5 ரூபாய்க்கு கிடைக்கிறது.
வருமானத்திற்கும் பங்குச் சந்தை விலைக்கும் உள்ள விகிதம் தான் P/E. 10-20 மடங்கு அதிகம் என்பது ஏற்புடையது. சில ப்ளூ சிப் நிறுவனங்கள் 30 கூட இருக்கும். அதற்கு மேல் என்றால் ஊதிப் பெருக்கப் பட்டது என்று பொருள். 276 மடங்கு அதிகம் என்பதை எப்படி புரிந்து கொள்வது. அதானி கிரீன் எனர்ஜி இன்னும் மோசம்.P/E 466 மடங்கு.

இப்படி விலையை ஏற்றிக் காண்பிப்பது எப்படி சாத்தியமாகிறது. அதானி தனது பெரும்பாலான நிறுவனங்களில் 74.8% பங்குகளை அவரே வைத்திருப்பார்.75% மேல் வைத்திருக்கக் கூடாது என்பது செபி கட்டுப்பாடு. சுமார் 20% FII என்கிற அன்னிய முதலீட்டு நிறுவனங்களின் கையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுவும் அதானியின் பினாமி என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் சில மாதங்களுக்கு முன் செபி நடவடிக்கை எடுத்ததால் அவர் பங்குகள் 30-50% சரிவை சந்தித்தன. 95% பங்குகள் ஒருவரின் கைகளில் இருந்தால் விலையை விருப்பம்போல் ஆட்டுவிக்க முடியும்.பெரிய மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் ஒரு பைசா கூட அதானி குழுமங்களில் முதலீடு செய்யவில்லை.

அதானி தினம் ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார், குடும்ப சொத்து மதிப்பு 5 லட்சம் கோடி, ஆசியாவின் இரண்டாவது பணக்காரர் என்பதெல்லாம் காகிதத்தில் மட்டுமே. எனது மதிப்பீட்டில் அதானியின் சொத்து மதிப்பு 1.5 லட்சம் கோடி இருக்கலாம். அதானி போர்ட்ஸ், அதானி என்டர்பிரைசஸ் நிறுவனங்களின் சொத்து மதிப்பில் நமக்கு சந்தேகம் இல்லை. அவர் குரோனி முதலாளித்துவத்துக்கு ஒரு படி மேலே.

மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் இருக்கிறது பெரும் வான வேடிக்கை

சரி, அவர் இதை ஏன் செய்ய வேண்டும்? விமான நிலையங்கள், துறைமுகங்கள் லைசென்ஸ் பெற, நிலக்கரி இறக்குமதி லைசன்ஸ், வங்கிக்கடன் ஆக எல்லாவற்றிற்கும் உலகப் பணக்காரர் என்கிற அந்தஸ்து தேவைப்படுகிறது. நாங்கள் என்ன தகுதி இல்லாதவருக்கா கொடுத்து விட்டோம்? உலகப் பணக்காரர் ஒருவரால்தானே இவற்றை எல்லாம் வெற்றிகரமாக நடத்த முடியும், வேலை வாய்ப்பை உருவாக்க முடியும் என்று ஆட்சியாளர்களும் சொல்லிக் கொள்ளலாமே!

சொத்து மதிப்பு 85% மிகை மதிப்பீடு என்றும், உண்மை மதிப்பு 1.5 லட்சம் கோடி தான் இருக்கும் என்றும் சொல்கிறது ஹின்டன்பர்க் அறிக்கை. 2021 அக்டோபர் மாதம் முதல் தேதி எனது பதிவில் 1.5 லட்சம் கோடிதான் உண்மை மதிப்பு என்று எனது மதிப்பீட்டைச் சொல்லி இருக்கிறேன். துல்லியமாக ஒத்துப் போகிறது. லிங்க் முதல் கமெண்டில். 1.5 லட்சம் கோடி மட்டுமே மதிப்புள்ள ஒரு நிறுவனத்தின் கடன் எவ்வளவு தெரியுமா? 2.30 லட்சம் கோடி. இதில் சுமார் 75 ஆயிரம் கோடி இந்திய வங்கிகளின் பணம். எல்ஐசி முதலீடு 75,000 கோடி. என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ? எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. வழக்குத் தொடுக்கப் போகிறாயா?

வா வெச்சு செய்யறோம் என்கிறது ஹின்டன்பர்க்

என்ன செய்யப் போகிறது செபி? என்ன செய்யப் போகிறது மோடி அரசு?

Arukkutti Periyasamy

error: Content is protected !!