March 26, 2023

மாறி வரும் காதலின் புரிதல்!

சின்னஞ்சிறிய வயதில், “அக்கா தனியா போறா.. துணைக்குப் போ” என்று பழக்கியது முதல், பெண்ணுக்கு ஆண் ஒரு பாதுகாவலன் என்ற மனதோடே வளர்கிறான்; பெண்ணைக் காப்பற்றுவதுதான் நாயகத்தனம் என்று அத்தனை ஊடகங்களும் கற்பிக்கின்றன. இங்கிருந்து அத்தனை ஆண்களும் கயவர்கள் என்ற முடிவின் வழி, கயவர்களிடம் இருந்து அவன் விரும்புகின்ற மற்றும் அவன் சார்ந்த பெண்களுக்கு அறிவுரை சொல்லிப் பாதுகாப்பது தன் தலையாய கடமையாக நினைத்துக் கொள்கிறான். / அவன் வாழ்வில் சில பெண்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு இடம் கொடுத்து வைத்திருக்கிறான். காமத்தின் வண்ணங்கள் இன்றி ஒரு அந்நியப் பெண்ணிடம் அவனால் இயல்பாகப் பேசிப் பழகிட முடியும்; அதே சமயம் முழுக்க முழுக்கக் காமத்தோடு ஒரு பெண்ணை ரசிக்கவும் அணுகவும் கூட முடியும். இரண்டு குணமுமே ஒருவனுக்குள் இருக்கிறது. இவன் என்ன செய்வான் என்றால் இரண்டாவது குணத்தை மட்டும் ஒட்டுமொத்த ஆண் சமூகப் பிரதிநிதித்துவமாகக் கொண்டு, அந்த இரண்டாவது குணத்திடம் இருந்து ஒருத்தியைப் பாதுகாப்பது முக்கியமெனக் கருதத் தொடங்கி விடுகிறான். இதிலிருந்து, எப்போதும் தன்னுடைய பாதுகாப்பில், தன்னுடைய கண்காணிப்பில் ஒருத்தி சௌகர்யமாக இருப்பதுதான் காதல் என்ற தவறான புரிதலுக்குள் சென்று விடுகிறான்.

தன்னை அண்டி நிற்கும் ஒரு பெண்ணிடமிருந்து அவன் பெறக்கூடிய கம்பீரம், போதை போல அவனை ஆக்கிரமித்துக் கொள்கிறது. இந்த போதை, காலம் முழுக்க மனைவி, மகள் என்று யாரையேனும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே ஆசைப்படுகிறது. அதன் மூலம் ஒரு ஆளுமையாகத் திகழ அவன் விரும்புகிறான். ஆனால், யதார்த்தம் தலைகீழாக இருக்கிறது. ‘இன்றைக்கு என்னை, என்னால் பார்த்துக்கொள்ள முடியவில்லை; அதனால் உன்னை வந்து அண்டினேன். ஆனால் அப்படியே காலம் முழுக்க இருந்து விட மாட்டேன் அல்லவா ? என்னை நானே பார்த்துக் கொள்ளக் கூடிய நிலையை நோக்கி நான் நகர்ந்து விடத்தானே செய்வேன்’ என்று ஒரு பெண் தன்னைத் தானே தகவமைத்துக் கொள்ளும்போது, ‘உனக்கு நான் வேறு எதற்குத்தான் தேவை? என் அன்பும் காதலும் வேறு எதற்குத்தான் பயன்படப் போகிறது’ எனப் பதற்றமாகி விடுகிறான். சுற்றிச் சுற்றி வந்து இவன் காலடியில் கிடக்கும் அடிமைப் பெண்ணைத்தான் காதலித்துப் பழகி இருக்கிறான்; அல்லது அதுதான் காதலென்று கேள்விப்பட்டிருக்கிறான். சுதந்திரமான ஒரு பெண்ணைக் காதலிப்பதில் இதுவரைக்கும் காதல் என்று கற்று வைத்திருந்த அனைத்தையும் அவன் துறந்தாக வேண்டி இருக்கிறது. அது அவனுக்கு அதிர்ச்சியளிக்கிறது.

பெண், என்னைப் பாதுகாக்காதே என்கிறாள். எல்லாவற்றையும் நானே எதிர்கொண்டு நல்லது எது ? கெட்டது எது எனத் தெரிந்துகொள்கிறேன். தீயைத் தொட்டு தீச்சுடும் என்று அறிந்து கொள்கிறேன். நீ எனக்குக் கற்பிக்காதே என்று முரண்டுகிறாள். நீயும் நானும் ஒரே போல கல்வி கற்றோம்; ஒரே போல வளர்ந்தோம்; ஒரே போல வேலைக்குப் போகிறோம்; ஒரே போல வாழ்பனுவங்களைப் பெற்றுக் கொள்வதில் மட்டும் ஏன் பாகுபாடு? உனக்கு மட்டும் எல்லாம் தெரியும்; எனக்கு எதுவும் தெரியாதென்ற மதிப்பீடுகள் எதற்கு ? என்று அவள் எதிர்க்கேள்வி கேட்கும்போது ஆணிடம் பதில்கள் இல்லை.

வன்புணர்வு, காதலித்து ஏமாற்றி, வேறு ஏதோ வகையில் நடந்துவிடப் போகும் காமமென உடலை மையப்படுத்தியே ஒரு எச்சரிக்கை உணர்வைச் செலுத்த எண்ணுகிறான். அங்கும் அவள் அப்படி ஏதேனும் நிகழ்ந்தால் அதனின் அனுபவங்களையும் பெற்றுக் கொள்கிறேன். யாரை எங்கு நிறுத்த வேண்டுமென்ற பாடம் எளிதில் கிடைத்து விடாதல்லவா என்று வாழ்வை அனுபவமாகப் பார்க்கும் நிலைக்கு நகர்ந்து விட்டாள். ஆண் இன்னும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் தத்தளிக்கிறான். பாதுகாக்கும் மனநிலைக்குள் இருந்து வெளியேறத் தெரியாமல் விழிக்கிறான்.

இன்றைய பெண்ணுக்கு அன்பு, கரிசனம், அக்கறை, காதல், காமம் எல்லாம் தேவைப்படுகிறது. எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் நேரத்திற்குத் தேவைப்படுகிறது. மற்ற நேரங்களில் தன் வாழ்க்கையை நோக்கி ஓய்வற்று ஓடிக் கொண்டே இருக்கிறாள் அவள். இளைப்பாறுவதற்குத்தான் இவை எல்லாம் தேவை. ஓட்டத்திற்கே இவை எல்லாம் தடையாக வருமென்றால், அதனைத் தகர்த்து எறிவதற்குத் தயங்காத ஒருத்தியாகவும் அவள் இப்போது இருக்கிறாள்.

மன விரிவின்றி ஒரு சுதந்திரமான பெண்ணைக் காதலிப்பது அத்தனை எளிதன்று. உனக்காக வாழ்வேன், உனக்காக மரிப்பேன் போன்ற வசனங்களை எல்லாம் இன்று தூக்கிக் கொண்டு போனால் பெண் விலகிப் போகவே செய்கிறாள். எனக்காக நீ வாழாதே உனக்காக நீ வாழ், உனக்காக நீ வாழும் வாழ்க்கைக்குள் நான் வந்து பொருந்துகிறேன் என்பதே முதிர்ச்சியான புரிதலாக இருக்கின்றது. இனி வரும் காலத்தின் காதலுக்கு இந்தப் புரிதலைக் கைக்கொள்ளுதல் மிக மிக அவசியம்.

Karthik (யாத்திரி)