January 29, 2022

நெக்ஸ்ட் இயர் நம்ம இந்தியாவிலே சைபர் கிரைம் ரேட்டிங்தான் எகிறும்!-

பணமில்லா பொருளாதாரம் என்ற கோஷத்துடம் மோடி அரசு தினம் சில பல அறிவிப்புகளை வெளியிட்டு மக்கள் பலரையும் குழப்பி வருகிறது. சமீபத்தில் இணையத் தொடர்புடன் ஒரு மடிக்கணினி இருந்தால் போதும் ஆறே நொடிகளில் ஹேக்கர்களால் உங்களது விஸா டெபிட், மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களைத் திருடமுடியுமாம். லண்டனில் நடைபெற்ற சமீபத்திய ஆய்வொன்று இதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்திருக்கிறது என்று தகவல் வெளியானதை எத்தனை பேர் பார்த்து  படித்து இருப்பீர்கள் என்று தெரியாது..

edit dec 13

‘IEEE பாதுகாப்பு மற்றும் தனியுரிமை’ ஆய்வு இதழிலில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில் ஹேக்கர்களுக்கு கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பற்றிய போதுமான தகவல்கள் எதுவும் தெரியாத நிலையிலும் கார்டின் கடைசி ஆறு இலக்க எண்கள், காலாவதி தேதி, பாதுகாப்பு எண்கள் இவை நான்கையும் உள்ளிட்டால் போதும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை எளிதாக முடிந்து விடும். இந்த முறையில் பிறரது கிரெடிட் அல்லது டெபிட் கார்டு விவரங்களை உள்ளிட்டு சம்மந்தப்பட்ட நபர்களுக்கே தெரியாமல் அவர்களது கணக்கில் உள்ள பணத்தை ஹேக்கர்களால் திருட முடியும்.

https://www.youtube.com/watch?v=mxltvA17y2Q

சமீபத்தில் நடைபெற்ற டெஸ்கோ சைபர் தாக்குதலில் கூட இந்த முறையில் தான் 2.5 மில்லியன் பவுண்டுகள் பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.இந்த முறை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பெருவாரியான மக்கள் ஆன்லைன் மூலமாகவே தங்களது பலதரப்பட்ட ஷாப்பிங் உள்ளிட்ட கொள்முதல்களைச் செய்வதால் ஹேக்கர்களால் ஆபத்து இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் இந்த ஆய்வு எச்சரித்து இருந்தது.

இதனிடையே கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் சார்ந்த பயன்பாடுகள் அதிகரித்து வருவதால் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கும் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்து வருவதால் கிட்டத்தட்ட 40 முதல் 45 சதவிகிதம் வரையிலான பண பரிமாற்றங்கள் மொபைல் சாதனங்களில் மேற்கொள்ளப்படுகிறது என்றும் இந்த மொபைல் சார்ந்த குற்றங்களின் எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டில் சுமார் 60 முதல் 85 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கிட்டத்தட்ட 40 முதல் 45 சதவிகித பணப்பரிமாற்றங்கள் மொபைல் சாதனங்களில் மேற்கொள்ளப்படுவதால் இத்துறை சார்ந்த நிறுவனங்கள் அதிக கவனமுடன் இருப்பது அவசியம் ஆகும். சைபர் குற்றங்கள் சார்ந்த எண்ணிக்கையில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் சார்ந்து அதிகளவிலான குற்றங்கள் முன்னிலை வகிப்பதாக இந்த ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது. இத்துடன் இந்த எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் ஆறு மடங்கு அதிகரித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வில் தெரியவந்திருக்கும் தகவல்களின் படி 46 சதவிகித குற்றச்சாட்டுகள் ஆன்லைன் பேங்கிங் சார்ந்த கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலமாகவும், ஃபேஸ்புக் சார்ந்த குற்றச்சாட்டுகள் 39 சதவிகிதமும், 21 சதவிகித குற்றச்சாட்டுகள் மொபைல் போன் மூலமாகவும், மின்னஞ்சல் ஹேக்கிங் மூலம் 18 சதவிகிதமும், போலி அழைப்புகள், மற்றும் எஸ்எம்எஸ் மூலமாக 12 சதவிகிதமாகவும் இருக்கிறது.

வளர்ந்து வரும் சைபர் குற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் வங்கி சார்ந்த சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் தங்களது பண இருப்பு மற்றும் வாடிக்கையாளர்களின் தரவுகள் உள்ளிட்டவற்றிற்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சைபர் குற்றங்கள் சார்ந்த பிரச்சனைகளில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் இந்த ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா முழுக்க சுமார் 100 கோடிகளுக்கும் அதிகமானோர் ஸ்மார்ட் சிட்டி, இணைக்கப்பட்ட கருவிகள் மற்றும் இயந்திரங்களை தினமும் பயன்படுத்த இருப்பதோடு இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கண நேரத்தில் அதிகப்படியான தகவல்கள் இணையத்தில் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. இந்தியாவில் அமல்படுத்தப்பட்டிருக்கும் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் அதிகப்படியான சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும் மாநிலங்களில் ஆந்திர பிரதேசம், கர்நாடகா மற்றும் மகாராஷ்ட்ரா உள்ளிட்டவை முதல் மூன்று இடங்களை பிடித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.