September 21, 2021

ஆடம்பர கல்யாணம் செய்றவங்களுக்கு 10% அடிசினல் செலவு? -தனி நபர் மசோதா தாக்கல்

இப்போதெல்லாம் காதல் கல்யாணமோ அல்லது அரேஞ்டு மேரேஜோ அதை செய்து கொள்வதே படு பந்தாவான விஷயமாக ஆகிவிட்டன. எக்கச்சக்க செலவில் பெரிய அளவில் திருமணங்களை நடத்தி ‘கெத்து’ காட்டுவது கட்டாயமாகி விட்டது. ஒரு மேரேஜ் இன்விடேஷனுக்கு மினிமம் முந்நூறு ரூபாய் செலவு செயவது இ கூட சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலும் பெரிய மண்டபங்களை பிடிக்க வேண்டுமானால் கிட்டத்தட்ட ஏழெட்டு மாதங்களுக்கு முன்பே கர்சீப் போட்டு வைக்கிறார்கள். ஒவ்வொரு மண்டபத்துக்கும் வாடகை மட்டுமே பல ஆயிரங்களைத் தாண்டுகிறது. ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து பிடிக்கும் மண்டபம் ‘சுமாராக’ இருக்கும் என்கிறார்கள். ‘நல்ல’ மண்டபம் என்பது பெரிய டைனிங் ஹால், நிறைய பார்க்கிங் வசதி உடைய மண்டபங்கள். பெரிய மண்டபத்தை பிடித்தால் மட்டும் போதுமா? அதற்கு ஏற்ற அளவுக்கு கூட்டத்தை திரட்ட வேண்டுமே! கண்ணில்பட்டவர்கள், எதிரே வந்தவன், குறுக்கே போனவனுக்கெல்லாம் அழைப்பிதழை கொடுக்கிறார்கள்.வந்தவன் வெளியே சென்று ‘அந்தக் கல்யாணம் பயங்கரமா இருந்துச்சு’ என்று வாயை பிளக்க வேண்டுமல்லவா?அதற்காக எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் காசை வாரி இறைக்க வேண்டியிருக்கிறது.

edit feb 16a

இப்படியாக இந்தக் காலத்தின் திருமணத்தில் குத்திக் காட்ட வேண்டுமானால் ஒவ்வொன்றையும் குத்திக் காட்டலாம். சமையல்காரனுக்கு கொடுக்கும் பணத்திலிருந்து பஃபே சிஸ்டம் வரைக்கும் எல்லாவற்றிலுமே அழிச்சாட்டியம் செய்கிறார்கள். மணவறை அமைப்பிலிருந்து தாம்பூலப்பை வரைக்கும் எல்லாவற்றிலுமே எக்கச்சக்க செலவு. ஒரு மத்தியதர குடும்பத்தின் திருமணத்தில் இரு இல்ல வரவு செலவைக் கணக்குப் பார்த்தால் மிக எளிதாக ஏழெட்டு லட்சங்களைத் தொடக் கூடும்.

அந்தக் காலத்தில் இப்படியான செலவுகள் இல்லை. அதிகபட்சம் முந்நூறு பேர்கள் வருவார்கள். வீட்டிலேயே பெரியதாக சட்டி பானை வைத்து சொந்தக்காரப் பெண்களே பருப்பு ரசம் செய்து சோறு போடுவார்கள். சமையல்காரனுக்கான செலவு இல்லை; மண்டபத்துக்கான வாடகை இல்ல- இப்படி நிறைய ‘இல்லை; இல்லை’தான். நெருங்கிய சுற்றமும் பந்தமும் மட்டுமே கலந்து கொள்ளும் என்பதால் இரண்டு மூன்று நாட்கள் திருமண வீட்டிலேயே டேரா கட்டிவிடுவார்கள். சொந்தக்காரர்களிடையே நெருக்கமும் அதிகமாகும். ஒரு மனிதன் வருடத்திற்கு ஐந்து திருமணங்களுக்குச் சென்று வந்தாலே பெரிய விஷயம். இப்பொழுது பாருங்கள்- வாரத்திற்கு ஐந்து திருமணங்களுக்கு போய் வருவது கூட சாதாரணமாகிவிட்டது. அப்படியே சென்றாலும் எந்தத் திருமணத்திலாவது யாரிடமாவது ஐந்து நிமிடங்களைத் தாண்டி பேச முடிகிறதா? அப்படி வந்தவர்களும் குனிந்த தலை நிமிராமல் கையில் மொபைலை வைத்துக் கொண்டு நோண்டுவதுதான் நடக்கிறது. இந்நிலையில்தான் திருமண செலவு 5 லட்சத்தைத் தாண்டும் ஆடம்பர திருமணங்களை நடத்தும் குடும்பங்கள், திருமண மொத்த செலவில் 10% தொகையை ஏழைப் பெண்கள் திருமண நிதி உதவி திட்டத்துக்கு வழங்க வேண்டும் என்ற தனி நபர் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் பப்பு யாத்வ்வின் மனைவியும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜ்னீத் ரஞ்சனால் இந்த தனி நபர் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து ராஜ்னீத் ரஞ்சன் கூறும்போது, “திருமணம் என்பது இரண்டு நபர்களை சார்ந்த நம்பிக்கை. ஆனால் இந்தக் காலத்தில் துரதிஷ்டவசமாக திருமணம் என்பது ஆடம்பரமாகவும், தங்களது செல்வ வளத்தை காட்டும் ஆடம்பர பொழுதுபோக்காக நாட்டில் வளர்ந்து வருகிறது. இதனால் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு மிகப் பெரிய சமூக அழுத்தம் உருவாகியிருக்கிறது. இது முக்கியமாக பரிசீலிக்கப்பட வேண்டியது. மேலும் இது சமூகத்துக்கு நல்லதல்ல” என்றார்.

இந்த தனிநபர் மசோதாபடி – “ஐந்து லட்சத்துக்கும் அதிகமாக செலவழித்து திருமணம் செய்வோர், திருமணத்துக்கு திட்டமிட்டுள்ள தொகை குறித்து முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும்.திருமணத்துக்கான மொத்த தொகையில், 10% வறுமை கோட்டுக்கு கீழ்வுள்ள குடும்ப பெண்களின் திருமண உதவி திட்டத்துக்கு நிதியாக வழங்க வேண்டும். மேலும் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு அனைத்து திருமணங்களும் 60 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.