தமிழ்நாட்டில் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் திறப்பு!

தமிழ்நாட்டில் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் திறப்பு!

மிழ்நாட்டில் 10-–ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட உள்ளன. முதல் ஒரு வாரத்துக்கு மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்களில் பாடங்களை நடத்தாமல் புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து வருகிற 20-–ந் தேதி பிளஸ்-2 வகுப்புகளும் 27–-ந் தேதி பிளஸ் -1 வகுப்புகளும் தொடங்குகின்றன. இதற்காக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களுக்கும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்து பாட நோட்டு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கூடங்கள் நாளை (திங்கட்கிழமை) தொடங்கியதும் இலவச பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகளை வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வகுப்புகள் தொடங்கப்பட்டு முதல் ஒரு வாரத்துக்கு பாடங்களை நடத்தாமல் புத்துணர்வு பயிற்சியும், நல்லொழுக்கம் மற்றும் உளவியல் ரீதியான வகுப்புகளும் நடத்துமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த 2020-–ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இருந்து வருகிறது. ஆரம்பத்தில் நோய்த்தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால், பள்ளிகள் மூடப்பட்டன. தொடர்ந்து நோய்த்தொற்றின் தாக்கம் குறைவதும், ஏறுவதுமான நிலை நீடித்தது.

இதன் காரணமாக கடந்த 2020–-21, 2021–-22 ஆகிய கல்வியாண்டுகளில் வழக்கமாக ஜூன் மாதத்தில் திறக்கப்படும் பள்ளிகள், குறிப்பிட்ட காலத்துக்கு திறக்க முடியாமல், மூடப்பட்டு, பெரும்பாலான நாட்கள் ஆன்லைன் வகுப்புகளிலேயே கல்வியாண்டு கடந்தது.

கடந்த 2021–-22–-ம் கல்வியாண்டின் இறுதியில் மட்டும் நேரடி வகுப்புகள் முறையாக நடத்தப்பட்டு ஆண்டு இறுதி தேர்வு மற்றும் பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த 2 கல்வியாண்டுகளுக்கு பிறகு, இந்த ஆண்டு வழக்கமாக தொடங்கப்படும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

கொரோனா தொற்று முற்றிலுமாக இல்லை என்று சொல்லும் அளவுக்கு இல்லையென்றாலும், பள்ளிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி இந்த கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளன.

இதற்காக அனைத்து பள்ளிகளும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசும், அதன் கீழ் வரும் கல்வித்துறையும் பள்ளிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தி இருக்கிறது. அதன்படி, பள்ளி வளாகங்களை சுத்தமாக வைத்திருப்பது, நீர்த்தேக்க தொட்டிகளை தூய்மைப்படுத்துவது, மின் இணைப்புகள் சரியாக உள்ளதா? என கண்காணிப்பது, கழிவறைகளை தூய்மையாக வைத்திருப்பது, பள்ளி வாகனங்களை பரிசோதிக்கப்படுவது, சத்துணவு கூடங்களை சுத்தப்படுத்தி தூய்மையாக பராமரிப்பது போன்ற முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

அந்த வகையில் பள்ளிகளும் தூய்மைப்பணியில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றன. வரும் கல்வியாண்டுக்கான நேரடி வகுப்புகளை நடத்துவதற்கு அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் இருக்கின்றன. மாணவ- மாணவிகளும் நேரடி வகுப்புகளுக்கு வர ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் ஆகியவற்றை வழங்க கல்வித்துறை அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக பாடப்புத்தகங்கள், நோட்டுகள் ஆகியவற்றை அனைத்து பள்ளிகளிலும் கொண்டு சேர்க்கும் பணிகள் பெருமளவில் முடிந்து இருக்கின்றன.

Related Posts

error: Content is protected !!