December 9, 2022

மே 21: ராஜீவ் காந்தியின் நினைவலையும்…பேரறிவாளன் விடுதலையும்…!

பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தாலும் செய்தது, பலரும் பலவிதமாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள் உச்சநீதி மன்றத் தீர்ப்பை யாரும் விமர்சிக்கவில்லையாம். எதிர்க்கவுமில்லையாம். ஆனாலும் ராஜீவ் கொலையாளியான பேரறிவாளனை விடுதலை செய்ததில் சம்மதமில்லையாம். ‘விடுதலை’ என்பதுதான் தீர்ப்பு. விடுதலையில் சம்மதமில்லை என்றால் தீர்ப்பிலும் சம்மதமில்லை என்றுதானே அர்த்தமாகும்? நமக்கு ஒன்றுமே புரியவில்லை.

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது உண்மை. பின்னாட்களில் அது பற்றி சர்வதேசப் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ‘அது ஒரு துன்பியல் சம்பவம்’ என்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சர்வசாதாரணமாகப் பதில் சொன்னதன் மூலம், கொன்றது அவர்கள்தான் என்பதும் சந்தேகத்திற்கு இடமின்றித் தெரிந்து போனது. ஆனாலும் ஒரு சந்தேகம். விடுதலைப் புலிகள் சர்வதேசத் தொடர்புடையவர்கள். அதனால், வேறு யாராவது விடுதலைப் புலிகளைப் பயன்படுத்திக் கொண்டார்களா என்கிற சந்தேகத்தையும் புறந்தள்ளிவிட முடியாது. இருந்தாலும் அது பற்றியெல்லாம் நமது புலனாய்வு அமைப்பு தீவிரமாக விசாரிக்காமல், விடுதலைப் புலிகளோடு நிறுத்திக் கொண்டது ஆச்சரியமான விஷயம்தான்.

ஒருவேளை, மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ் கொல்லப்பட்ட இடத்தில், புகைப்படக்காரர் ஹரிபாபுவின் கேமரா சேதமின்றிக் கிடைத்திருக்காவிட்டால், கொலையாளிகளைக் கண்டு பிடித்திருக்க முடியுமா என்பதும் சந்தேகமே.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்…

ராஜீவ் காந்தி கொலைக்கு முன், தமிழ்நாட்டிலுள்ள அனைவருமே (’சோ’ தவிர) விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாகத்தான் இருந்தார்கள். இலங்கையில் அவர்கள் சிங்கள இராணுவத்தினரைக் கொன்றபோதெல்லாம், தமிழ்நாட்டில் புலிகளின் வீரத்தைக் கொண்டாடினார்கள் என்பதும் உண்மை. காரணம், இன உணர்வு மட்டுமே. மக்கள் மட்டுமல்ல; அன்றைய மத்திய – மாநில அரசுகளும் புலிகளை ஆதரித்தன. உதவிகளும் செய்தன. அரசுகளே உதவியபோது, தனிமனிதர்கள் எப்படி உதவாமல் இருந்திருப்பார்கள்?

இதுவும் ஒருபுறம் கிடக்கட்டும்.

ஒரு தலைவரைக் கொல்லப்போகும் ஓர் இயக்கம், அந்த இயக்கத்திலுள்ள அனைவருக்கும் அது பற்றி ‘சர்க்குலர்’ அனுப்பிவிட்டுச் செய்யாது. மிகமிக இரகசியமாகச் செயல்படுத்தப்பட வேண்டிய ஒரு திட்டம் என்பதால், விரல்விட்டு எண்ணக்கூடிய வெகுவெகு சிலருக்கு மட்டுமே அது பற்றித் தெரிந்திருக்க முடியும். அப்படிப் பார்த்தால் ராஜீவ் கொலைத்திட்டம் பற்றி, அதில் சம்பந்தப் பட்டதாகச் சொல்லப்படும் அனைவருக்குமே தெரிந்திருக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி!

குண்டு வெடித்தவுடன், ராஜீவின் உடலைத் தேடிக் கண்டுபிடித்தது மூப்பனார்தான். அவருக்கு உதவியாக ஜெயந்தி நடராஜன் இருந்தார் என்றும் நினைவு. மற்ற காங்கிரஸ் தலைவர்களெல்லாம் எங்கே போனார்கள்? உடனடியாகக் கொலைப் பழியைத் திமுகவின் மேல் சுமத்தத் துடித்த ஒரு தலைவர், குண்டு வெடித்த இடத்திலேயே காணப்படாதது ஏன்?

இப்படி ஏராளமான கேள்விகள் எழத்தான் செய்கின்றன. திருச்சி வேலுச்சாமியைக் கேட்டால் இன்னும் எக்கச்சக்கமான கேள்விகளை எழுப்புவார்.

இவை எல்லாவற்றையுமே ஒருபுறம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, பேரறிவாளன் விஷயத்தைப் பார்ப்போம்…

பேரறிவாளன் செய்தது குற்றமா, இல்லையா என்றெல்லாம் இந்தத் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் ஆராயவில்லை. அவர் நிரபராதியென்றும் சொல்லவில்லை. நீண்டகாலச் சிறைவாசம், அவரது நன்னடத்தை பற்றி மட்டுமே கருத்தில் கொண்டு விடுதலை வழங்கியிருக்கிறது. அவ்வளவுதான்.

சிறைத் தண்டனை என்பதே ஒரு மனிதனை நல்வழிப்படுத்துவதற்குத்தானே தவிர, ஆண்டுக் கணக்காக சிறையிலேயே வைத்திருந்து சித்திரவதை செய்வதற்கு அல்ல. உண்மையில் பார்த்தால், தூக்குத் தண்டனையைவிட, சித்திரவதைதான் இரக்கமற்றது; கொடூரமானது. தூக்குத் தண்டனையை எதிர்க்கிற நாம் சித்திரவதையை ஆதரிக்கிறோமா?

இந்தக் கொடூரத்தைத்தான் உச்சநீதிமன்றம் நீக்கியிருக்கிறது. அவ்வளவே.

இளங்கோவன்