கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3–ந் தேதி, இனி அரசு விழா!- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

ருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3–ந் தேதி, இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். மேலும்  சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதி சிலை அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர்  அறிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன்கீழ் வெளியிட்ட அறிவிப்பில் கூறியது இதுதான்–

”தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னைக் கடலில் தூக்கி எறிந்தாலும், கட்டுமரமாகத்தான் மிதப்பேன். அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம்; கவிழ்ந்து விடமாட்டேன். தமிழர்களே! தமிழர்களே! என்னை நீங்கள் நெருப்பில் தூக்கிப் போட்டாலும், அதிலே நான் விறகாகத்தான் வீழ்வேன்; அடுப்பெரித்து நீங்கள் சமைத்துச் சாப்பிடலாம்.

தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னைப் பாறையில் மோதினாலும், சிதறுத் தேங்காயாகத்தான் உடைவேன்! நீங்கள் என்னை எடுத்துத் தின்று மகிழலாம்!” என்ற வைர வரிகளுக்குச் சொந்தக்காரர் மட்டுமல்ல; தன்னுடைய வாழ்க்கையை அப்படியே வாழ்ந்து காட்டியவர்தான் முத்தமிழறிஞர், தமிழினத் தலைவர், அஞ்சுகச் செல்வர்; நம்மையெல்லாம் ஆளாக்கி விட்டு விட்டு, வங்கக் கடலோரம், தன் அன்பு அண்ணன் அருகே வாஞ்சைமிகு தென்றலின் தாலாட்டில் இருந்தபடி தமிழ்ச் சமுதாயத்தின் மகிழ்ச்சியைக் கண்ணுற்று வரும் கலைஞர்.

நின்ற தேர்தலில் எல்லாம் வென்றவர்

நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் உண்டென்றால், அவர் ஒருவர்தான். 1957 முதல் 2016 வரை நடந்த தேர்தல்களில் எல்லாம் வென்றவர் அவர் மட்டும்தான். 1957–-ல் குளித்தலை; 1962–-ல் தஞ்சாவூர்; 1967, 1971 ஆகிய ஆண்டுகளில் சைதாப்பேட்டை; 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் அண்ணா நகர்; 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் துறைமுகம்; 1996, 2001, 2006 ஆகிய ஆண்டுகளில் சேப்பாக்கம்; 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் திருவாரூர் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றார்.

13 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து, 60 ஆண்டுகள் இந்த மாமன்றத்தின் உறுப்பினராக இருந்தவர் கலைஞர்.

1984–ம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார். தமிழ்நாட்டை ஐந்து முறை ஆண்டவர் தலைவர் கலைஞர். 10.-2.-1969 அன்று முதன்முறையாக; 15-.3.-1971 அன்று இரண்டாவது முறையாக; 27-.1.-1989 அன்று மூன்றாவது முறையாக; 13-.5-.1996 அன்று நான்காவது முறையாக; 13-.5-.2006 அன்று ஐந்தாவது முறையாக என ஐந்து முறை இந்த நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, 19 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தவர் கலைஞர்.

சாதனைகள்

ஐந்து முறை ஆட்சியில் இருந்த காலத்தில் முதலமைச்சர் கலைஞர் உருவாக்கியதுதான் இன்று நாம் கண்ணுக்கு முன்னால் பார்க்கக்கூடிய நவீன தமிழகம். அன்னைத் தமிழ் மொழிக்கு செம்மொழித் தகுதி, ஒன்றிய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு உயர்வு, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம், மகளிருக்கும் சொத்திலே பங்குண்டு என்ற சட்டம், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்களுக்கான சமூகநீதி உரிமைகள், உழவர்களுக்கு இலவச மின்சாரம், கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி, சென்னை தரமணியில் டைடல் பார்க், சென்னைக்கு மெட்ரோ ரெயில் திட்டம், சிப்காட், சிட்கோ தொழில் வளாகங்கள் உருவாக்கம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கியது, நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டங்கள்,

அவசர ஆம்புலன்ஸ் 108 சேவை அறிமுகம், இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மினி பஸ்களைக் கொண்டு வந்தது, உழவர் சந்தைகள் அமைத்தது, கைம்பெண் மறுமண நிதி உதவி, கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவி ஆகிய திட்டங்கள், அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு, பெண்களுக்காக 33 விழுக்காடு இடஒதுக்கீடு, இலவச எரிவாயு இணைப்புடன்கூடிய எரிவாயு அடுப்புகள் வழங்குதல், மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்தல்,

அனைவரும் இணைந்து வாழ தந்தைப் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள், இஸ்லாமிய சமூகத்தினருக்கு 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியது, உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலே இணைத்தது, நுழைவுத் தேர்வு ரத்து, மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கியது, சேலம் உருக்காலை, சேலம் புதிய ரெயில்வே மண்டலம், நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கக்கூடிய திட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம், ஆசியாவிலேயே பெரிய அண்ணா நூலகம் ஆகியவை உருவாக்கம், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோருக்கு மறுவாழ்வு வழங்குதல், ஏராளமான பல்கலைக்கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள், கலை-அறிவியல் கல்லூரிகள் உருவாக்கியது,

தமிழகத்தின் அடையாளங்கள்

இப்படி நான் சொல்லத் தொடங்கினால் இன்று முழுவதும் என்னால் சொல்லிக் கொண்டேயிருக்க முடியும். இவைதான் தமிழகத்தின் அடையாளங்கள் என்றால், அந்த அடையாளங்களை எல்லாம் உருவாக்கியவர் தலைவர் கலைஞர்.

தலைவர்களோடு தலைவர்களாக வாழ்ந்த தலைவர்தான் கலைஞர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத், பாவேந்தர் பாரதிதாசன், பெரியவர் பக்தவத்சலம், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., கவியரசு கண்ணதாசன், திருமுருக கிருபானந்த வாரியார், தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

தமிழகத்தில் மட்டுமல்ல; பரந்து விரிந்த இந்த இந்திய அரசியலுக்கே வழிகாட்டியாக இருந்தவர் தலைவர் கலைஞர். இந்தியாவின் குடியரசுத் தலைவர்களாக இருந்த நீலம் சஞ்சீவிரெட்டி, கியானி ஜெயில்சிங், வி.வி.கிரி, சங்கர் தயாள் சர்மா, ஆர். வெங்கட்ராமன், கே.ஆர். நாராயணன், ஏ.பி.ஜெ. அப்துல்கலாம், பிரதிபா பாட்டீல் ஆகியோரால் பாராட்டப்பட்டவர் தலைவர் கலைஞர். இந்தியாவின் தலைமை அமைச்சர்களாக இருந்த அம்மையார் இந்திராகாந்தி, சரண்சிங், வி.பி.சிங், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோரால் போற்றப்பட்டவர் தலைவர் கலைஞர்.

எல்லாவற்றிலும் முதல்வர்

நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத தலைவர் கலைஞருடைய மறைவிற்குத்தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டன. இப்படி எல்லைகளைத் தாண்டி எல்லோரையும் வசப்படுத்தியவர் தலைவர் கலைஞர்.

படைப்பாளிகளோடு போட்டியிடும் படைப்பாளி; கவிஞர்களில் தலைசிறந்த கவிச்சக்கரவர்த்தி; திரையுலகத்தினரில் மூத்த கலையுலகவாதி; அரசியல் உலகில் தலைசிறந்த அரசியல் ஆளுமை; நிருவாகத் திறனில் நுணுக்கமான திறமைசாலி; மேடை ஏறினால் வெல்லும் சொல்லுக்கு அவர்தான் சொந்தக்காரர்; அவையில் ஏறினால் அவர்தான் வெற்றிச் சூத்திரம் அறிந்தவர் என எல்லாவற்றிலும் முதல்வராக வாழ்ந்த முதல்வர் அவர்.

‘என்னிடம் இருந்து செங்கோலைப் பறிக்கலாம்; எழுதுகோலைப் பறிக்க முடியாது’ என்று அவர் சொல்லிக் கொண்டார். செங்கோல் பறிக்கப்பட்டாலும், செங்கோலை வழிநடத்தும் எழுதுகோலை அவர்தான் வைத்திருந்தார். அரசு என்பது பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக்கொள்ள முடியாமல் போனாலும், அவரிடம்தான் இருந்தது. அரசும் அரசியலும் அவரை இயக்கின. அரசையும், அரசியலையும் அவரே இயக்கினார். இத்தகைய அரசு இயலின், அரசியலின் மாபெரும் தலைவருக்கு இந்த அரசு தனது வரலாற்றுக் கடமையைச் செய்ய நினைக்கிறது.

பிறந்த நாள் அரசு விழா; சிலை அமைப்பு

திருவாரூரில் முத்துவேலர்- – அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாக கலைஞர் பிறந்துதித்த நாளான ஜூன் 3–ம் நாள், அரசு விழாவாக இனி கொண்டாடப்படும் என்பதை இம்மாமன்றத்தில் நெஞ்சில் விம்மக்கூடிய மகிழ்ச்சியால், இதயத்தில் துடிக்கக்கூடிய எழுச்சியால், சிந்தை அணுக்களில் வெளிப்படும் நன்றி உணர்வால் நான் இதை இந்த அவைக்கு அறிவிக்கிறேன்.

வரும் ஜூன் 3 அன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கம்பீரக் கலைஞரின் கலைமிகு சிலை நிறுவப்படும் என்பதையும் அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன்.

‘நீண்ட தூரம் ஓடினால்தான் அதிக உயரம் தாண்ட முடியும்” என்று அடிக்கடிச் சொல்வார் கலைஞர். நீண்ட தூரம் இந்த தமிழினத்துக்காக ஓடியவர் கலைஞர். அவரை அதிக அதிக உயரத்தில் உயர்த்திப் பார்ப்பதைத் தனது கடமையாகக் கருதுகிறது தமிழ்நாடு அரசு.”இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.