“மக்கள் காட்டும் கோபம் நியாயமானது”- கோத்தபய ராஜபக்சே பேச்சு!

“மக்கள் காட்டும் கோபம் நியாயமானது”- கோத்தபய ராஜபக்சே பேச்சு!

முன்னொரு காலத்தில் பலருக்கு பிடித்த நாடாக இருந்த இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு, தான் எடுத்த சில நடவடிக்கைகள் காரணமாக அமைந்துவிட்டதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒப்புக் கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இலங்கையின் பொருளாதாரம் இந்த அளவுக்கு சீர்கேடு அடைந்ததற்கு தான் எடுத்த மோசமான நடவடிக்கைகள் காரணமாக அமைந்துவிட்டதாகவும், இதனை சரி செய்ய உறுதியேற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அதிகப்படியான வெளிநாட்டு வங்கிக் கடன் மற்றும் வெளிநாட்டுப் பணக் கையிருப்பு குறைந்ததால், இறக்குமதி செய்ய போதிய பணமில்லாமல் போனது போன்றவை ஒரு சுழற்சி போல பொருளாதாரத்தை பெரிய அளவில் முடக்கிப்போட்டுள்ளது. உணவுப் பொருள்கள், எரிபொருள், மருந்து போன்ற அடிப்படை விஷயங்கள் கூட கிடைக்காமல், இலங்கை மக்கள் மாதக் கணக்கில் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவி விலகக் கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்திருக்கும் நிலையில், 17 புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றுக் கொண்டது.

அப்போது அவர்கள் மத்தியில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பேசிய போது, “கடந்த இரண்டரை ஆண்டுகளாக நாம் பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம். கொரோனா பேரிடர் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் மற்றும் நமது தரப்பில் மேற்கொள்ளப்பட்ட சில தவறுகளும் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்று ஒப்புக் கொண்டுள்ளார். அவைகள் உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும். பிரச்சினைகள் சரி செய்து, முன்னேற்றப்பாதையில் பயணிக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்.

கடன் சுமையை சமாளிப்பதற்காக முன்னரே, சர்வதேச நிதியத்தை நாடியிருக்க வேண்டும். இலங்கையில், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக, ரசாயன உரங்களை முற்றிலும் தடை விதித்திருக்கக்கூடாது. இன்றைய பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் பெரிதும் அவதியடைந்துள்ளனர். அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். அதிக விலை கொடுத்து அத்தியாவசிய பொருட்களை பெற நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்ட மக்கள் காட்டும் கோபம் நியாயமானது” என்று கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.

இதற்கிடையே, அதிபர் அலுவலகம் முன் பொதுமக்கள் நடத்திவரும் போராட்டம் நீடித்து வருகிறது.

error: Content is protected !!