இலங்கை : ராஜபக்சே உறவினர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுவது ஏன்?

இலங்கை :  ராஜபக்சே உறவினர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுவது ஏன்?

பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவர்களது உறவினர்களுக்கு எதிராக போராட்டம் வலுத்து வருகிறது. இச்சூழ்நிலையில், அவர்களின் உறவினர்கள் ஒவ்வொருவராக வெளிநாடுகளுக்கு தப்பி செல்கின்றனர். கடந்த 9ம் தேதி துவங்கிய போராட்டம், மூன்றாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. போராட்டம் தீவிரமடைவதை அடுத்து, இலங்கை அரசு பொது விடுமுறை அறிவித்தது. இதனிடையே, அதிபர் மற்றும் பிரதமர் தவிர்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஒவ்வொருவராக வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையில் துணை அமைச்சராக இருந்த நிருபமா ராஜபக்சே, திருக்குமார் நடேசன் ஆகியோர் கடந்த வாரம் துபாய்க்கு கிளம்பி சென்றதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காட்டுநாயகே சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அவர்கள் எமிரேட்ஸ் விமானம் மூலம் கிளம்பி சென்றதாக கூறப்படுகிறது. உலக தலைவர்களின் சொத்து விவரங்களை அம்பலப்படுத்திய ‘பண்டோரா பேப்பர்ஸ்’ எனும் ஆவணத்தில் நிருபமாவின் பெயர் இடம் பெற்றுள்ளது. இவரும், திருக்குமார் நடேசனும் இணைந்து, போலி நிறுவனத்தின் மூலம் லண்டன் மற்றும் சிட்னியில் சொகுசு பங்களாக்களை வாங்கியதாகவும், பல முதலீடுகளை செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சேவின் மனைவி லிமினி மற்றும் இவரது பெற்றோரும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து கிளம்பி சென்றுள்ளதாக தெரிகிறது. மகிந்த ராஜபக்சே அமைச்சரவையில் நமல் இடம் பெற்றுள்ளார்.

கோத்தபயவின் நெருங்கிய நண்பரும், அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவருமான நிசங்க சேனாதிபதியும் இரவோடு இரவாக இலங்கையில் இருந்து தப்பி சென்றுள்ளார். இவர் மீது இருந்த முறைகேடு மற்றும் லஞ்ச வழக்குகளை கோத்தபய அரசு ரத்து செய்திருந்த நிலையில் மக்கள் போராட்டம் வெடிக்க துவங்கியதும், அவர் குடும்பத்தினரோடு இலங்கையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். விமான நிலையத்தில் இருந்து இவர் செல்லும் போது, கண்காணிப்பு கேமராக்கள், மேலிட உத்தரவின் பேரில் செயலிழக்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இலங்கையின் சென்ட்ரல் வங்கி தலைவர் அஜித் நிவாட் கப்ரால், வரும் 18 ம் தேதி வரை வெளிநாட்டிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ள அமைச்சர்கள், தங்களின் குடும்பத்தினரோடு, சொகுசு ஓட்டல்களில் தங்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போராட்டம் தீவிரம்

இந்த நிலையில் இலங்கை அதிபர் மாளிகை அருகே உள்ள காலி திடலில் திரண்ட மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ராஜபக்சேக்களை வீட்டுக்கு அனுப்பும் வரை திடலை விட்டு வெளியேற மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த திடலில் கூடாரங்களை அமைத்து அதில் போராட்டக்காரர்கள் தங்கி இருந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

‘கோ ஹோம்சோட்டா கிராமம்‘ என்று பெயரிட்டுள்ள இப்போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் கூடி இருக்கிறார்கள். சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு உள்ளனர். மேலும் இளைஞர்கள் போராட்டத்தில் பங்கேற்க வந்த வண்ணம் உள்ளனர். இன, மத, மொழி பேதமின்றி திடலில் குவிந்துள்ள மக்கள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

அதிபர் மாளிகை அருகே காலி திடலில் மக்களின் போராட்டம் இன்று 4-வது நாளாக நீடித்து வருகிறது. போராட்ட களத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு உள்ள நிலையில் தொடர்ந்து இளைஞர்கள் வருவதால் அங்குள்ள சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கொட்டும் மழையில்…

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் திடலில் உள்ள மக்கள் தங்களது போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். அதேபோல் நாடு முழுவதும் மக்களின் ஆர்ப்பாட்டம் நீடித்தபடி இருக்கிறது. இப்போராட்டங்களால் இலங்கையில் மக்கள் புரட்சி ஏற்பட்டு இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறும்போது, அதிபர் மாளிகை அருகே போராட்டத்தில் தினமும் அதிகளவில் அதிகாரிகளை பணியில் அமர்த்துமாறு உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்துள்ளது. அரசு புலனாய்வு பிரிவினர் போலீஸ் சிறப்புப் படை அதிகாரிகள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிபர் பாதுகாப்பு தொடர்பாக தகவல்களை திரட்ட புலனாய்வு பிரிவின் 150-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள். மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பல்வேறு பிரிவுகளில் இருந்தும் போலீஸ் படைகளும் வரவழைக்கப்பட்டுள்ளன என்றனர். மேலும் சிங்கள புத்தாண்டு காலத்தை முன்னிட்டு அனைத்து முக்கிய நகரங்களிலும் விசே‌ஷ பாதுகாப்பு ஏற்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மகிந்த ராஜபக்சே வேண்டுகோள்

இதற்கிடையே, போராட்டத்தை மக்கள் கைவிடவேண்டும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்சே வேண்டுகோள் விடுத்தார். நாட்டு மக்களுக்கு உரையாற்றி மகிந்த ராஜபக்சே பேசியதாவது:-

இலங்கை அரசுக்கு எதிராக போராட்டத்தை மக்கள் கைவிடவேண்டும். மக்கள் வீதிகளில் போராடும் ஒவ்வொரு நிமிடமும் பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசு 24 மணி நேரமும் உழைத்து வருகிறது.

நாட்டின் பொருளாதாரம் பலப்படுத்தப்பட வேண்டும். அதற்கு இலங்கை அரசு பொறுப்பேற்று கொள்ளும்.

போராடுபவர்கள், ஒட்டுமொத்தமாக 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். அவ்வாறு பாராளுமன்றத்தை முழுமையாக ரத்து செய்வது ஆபத்தானது என்றார்.

error: Content is protected !!