சென்னை மாநகராட்சி பட்ஜெட்டின் விவரம் -முழு விபரம்!

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டின் விவரம் -முழு விபரம்!

சென்னை பெருநகர மாநகராட்சியில் 200 வார்டுகளுக்கும் ரூ.70 கோடி மாமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இன்று தாக்கல் செய்யப்பட்ட மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டின் விவரம் வருமாறு:–

பெருநகர சென்னை மாநகராட்சியில்‌ உள்ள அனைத்து சாலைகளும்‌, பொது மக்கள்‌ அனைவரும்‌ சிரமமின்றி தங்களது வாகனங்களில்‌ பயணிக்க ஏதுவாக சீரமைக்கப்பட்டு வருகிறது.

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்‌ கீழ்‌ 39.87 கி.மீ நீளமுடைய 59 சாலைகள்‌ ரூ.37.58 கோடி மதிப்பீட்டில்‌ மேம்படுத்தும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகின்றன. மேற்படி பணிகள்‌ 2 மாத காலத்திற்குள்‌ முடிக்கப்படும்‌.

தமிழ்நாடு நகர்புற சாலைகள்‌ மேம்பாட்டுத்‌ திட்டத்தின் கீழ் (பேருந்து சாலைகள்‌) 161.94 கி.மீ நீளமுடைய 951 சாலைகள்‌ ரூ.109.61 கோடி மதிப்பீட்டில்‌ அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகின்றன. இப்பணிகள்‌ 3 மாத காலத்திற்குள்‌ முடிக்கப்படும்‌.

மாநில பேரிடர்‌ மேலாண்மை திட்டத்தின் கீழ்‌ 110.90 கி.மீ நீளத்திற்கு 646 உட்புற சாலைகள்‌ ரூ.65.97 கோடி மதிப்பீட்டில்‌ புனரமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகின்றன. இப்பணிகள்‌ 3 மாத காலத்திற்குள்‌ முடிக்கப்படும்‌.

கொடுங்கையூர்‌ குப்பை கொட்டும்‌ வளாகத்தில்‌ 4 இடங்களில்‌ புதியதாக 1440 கான்கிரீட்‌ மூலமாக சாலை அமைக்கும்‌ பணிகள்‌ மூலதன மான்ய நிதியின்‌ கீழ்‌ ரூ.11.08 கோடி மதிப்பீட்டில்‌ துவங்கப்பட்டுள்ளன. இப்பணிகள்‌ 4 மாத காலத்திற்குள்‌ முடிக்கப்படும்‌.

சென்னை மாநகரை அழகுபடுத்தும்‌ நோக்கில்‌ பல்வேறு மண்டலங்களில்‌ தமிழக அரசால்‌ 26 எண்ணிக்கையிலான நீருற்றுக்கள்‌ அமைக்கும்‌ பணிக்கு ரூ.1.29 கோடி நிதி சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்‌ கீழ்‌ வழங்கப்பட்டுள்ளது.

இரு மாத காலத்திற்குள்‌ மொத்த பணிகளும்‌ முடிக்கப்படும்‌ :-

1. எண்ணார்‌ விரைவு சாலை, சைக்லோன்‌ வெல்டர்‌ அருகில்‌,

2. மஞ்சம்பாக்கம்‌, மணலி, 200 அடி சாலை சந்திப்பு,

3. ஜி.என்‌.டி சாலை, மூலக்கடை சந்திப்பு,

4. 200 அடி சாலை எம்‌.ஆர்‌.எச்‌ சாலை ரவுண்டானா (டிராபிக்‌ ஐலேன்ட்‌),

5. பாந்தியன்‌ சாலை,

6. மான்டியத்‌ சாலை மற்றும்‌ ஆர்‌.கே லட்சுமிபதி சாலை சந்திப்பு,

7. ராஜாஜி சாலை – என்‌.எஸ்‌.சி போஸ்‌ சாலை சந்திப்பு,

8. பெரம்பூர்‌ நெடுஞ்சாலை (வடக்கு) முரசொலி மாறன்‌ பூங்கா,

9. பெரம்பூர்‌ பாலம்‌ தெற்கு,

10. ஸ்ட்ராஹன்ஸ்‌ சாலை புதிய மண்டலம்‌ அருகில்‌,

11. சூளை நெடுஞ்சாலை,

12. சி.டி.எச்‌. சாலை சிங்கப்பூர்‌ காம்ப்ளக்ஸ்‌ எதிரில்‌ அம்பத்தூர்‌ ராக்கி தியேட்டர்‌,

13. முதல்‌ நிழற்சாலை, புல்லா அவென்யூ சந்திப்பு,

14. ஹடோஸ்‌ சாலை, கல்லூரி சாலை சந்திப்பு,

15. டாக்டர்‌.பெசன்ட்‌ சாலை, விவேகானந்தர்‌ இல்லம்‌ அருகில்‌,

16. கோயம்பேடு 100 அடி சாலை,

17. ஆர்காடு சாலை, அல்சா டவர்‌ அருகில்‌,

18. ஆர்காடு சாலை, மண்டல அலுவலகம்‌,

19. உள்வட்ட சாலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்‌, எதிரில்‌,

20. ஜி.எஸ்‌.டி. சாலை, சாந்தி பெட்ரோல்‌ பங்க்‌ எதிரில்‌,

21. மலர்‌ மருத்துவமனை, எல்‌.பி. சாலை ஆவின்‌ பூங்கா முன்பு

22. தாலுகா அலுவலகம்‌ சாலை, ராஜ்பவன்‌ முன்பு

23. எம்‌.ஜி.ஆர்‌ சாலை மற்றும்‌ தரமணி சாலை சந்திப்பு (தரமணி ரயில்‌ நிலையம்‌, எஸ்‌.ஆர்‌.பி டூல்ஸ்‌ அருகில்‌)

24. வி.ஜி.பி பூங்கா, பாலவாக்கம்‌

25. வேளச்சேரி விஜயநகர்‌ பேருந்து நிலையம்‌ எதிரில்‌ பாலத்தின்‌ கீழ்‌,

26. ஓ.எம்‌.ஆர்‌ கே.கே சாலை சந்திப்பு.

டிஜிட்டல்‌ முறையில்‌

சாலை பெயர்‌ பலகை

பல்வேறு மண்டலங்களில்‌ உள்ள 4,681 எண்ணிக்கையிலான பழைய சாலை பெயர்‌ பலகைகளை அகற்றி புதிதாக டிஜிட்டல்‌ பெயர்‌ பலகைகளாக மாற்றி அதில்‌ புதிய எழுத்துக்கள்‌ பொறிக்கப்‌ படுவதுடன்‌, அஞ்சல்‌ குறியீடு, மண்டலம்‌ மற்றும்‌ புதிய வார்டு எண்களும்‌ இடம்‌ பெறும்‌ வகையில்‌ தமிழக அரசால்‌ சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.8.43 கோடி மதிப்பீட்டில்‌ மேம்படுத்தப்படும்‌. மெரினா கடற்கரையில்‌ (காந்தி சிலைக்கு பின்புறம்‌) மாற்று திறனாளிகள்‌ கடல்‌ அலை அருகில்‌ சென்று பார்வையிட, நிரந்தர பாதை அமைக்கும்‌ பணிக்கு சிங்கார சென்னை திட்டம்‌ 2.0ல்‌ ரூ.1.14 கோடி பெறப்பட்டுள்ளது. பணிகள்‌ துவங்கப்பட்டு 2 மாத காலத்திற்குள்‌ முடிக்கப்படும்‌.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுதோறும்‌ தோராயமாக ரூ.52.26 கோடிக்கு வருவாய்‌ ஈட்டும்‌ வகையில்‌ நிழற்குடைகளை தனியார்‌ பங்களிப்புடன்‌ கட்டுதல்‌, மேம்படுத்தல்‌, பராமரித்தல்‌ மற்றும்‌ குறிப்பிட்ட காலத்திற்கு பின்‌ ஒப்படைத்தல்‌ என்ற முறையில்‌ பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ 1,000 எண்ணிக்கையிலான பேருந்து நிழற்குடைகளை நவீனப்படுத்தி உயர்தரத்தில்‌ அமைக்கும்‌ பணி செயல்படுத்தப்படும்‌.

சென்னை மாநகரை அழகுபடுத்தும்‌ விதமாகவும்‌, பசுமை பரப்பை அதிகரிக்கும்‌ விதமாகவும்‌, பெருநகர சென்னை மாநகராட்சியால்‌ 722 பூங்காக்கள்‌ மற்றும்‌ 220 விளையாட்டு திடல்கள்‌ அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில்‌ 111 பூங்காக்கள்‌ தன்னார்வலர்கள்‌ மற்றும்‌ ஆர்வமுள்ள தனியார்‌ நிறுவனங்கள்‌ மூலம்‌ தத்தெடுப்பு முறையில்‌ பராமரிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள பூங்காக்கள்‌ மற்றும்‌ விளையாட்டு திடல்களை பராமரிக்கும்‌ பணிகளுக்கு இந்த நிதியாண்டில்‌ ரூ.16.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தனியார்‌ ஒப்பந்ததாரர்‌ மூலமாக பணிகள்‌ மேற்கொள்ளப்படும்‌.

2½ லட்சம்

மரக்கன்றுகள்‌ நடும்‌ பணி

கடந்த நிதியாண்டில்‌ சென்னை ஆறுகள்‌ மறுசீரமைப்பு அறக்கட்டளை நிதி, தன்னார்வலர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ பங்களிப்புடன்‌ கூவம்‌ ஆற்றின்‌ ஓரமாகவும்‌, சாலையோரங்கள்‌, திறந்தவெளி இடங்கள்‌, பூங்காக்கள்‌ மற்றும் விளையாட்டு திடல்கள்‌ ஆகியவற்றில்‌ 1 லட்சத்து 79 ஆயிரத்து 674 எண்ணிக்கையில்‌ மரக்கன்றுகள்‌ நடப்பட்டு சொட்டு நீர்‌ பாசனம்‌ மூலம்‌ பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிதியாண்டில்‌ அனைத்து மண்டலங்களிலும்‌ 2 லட்சத்து 50 ஆயிரம் எண்ணிக்கையில்‌ நாட்டு மரக்கன்றுகள்‌ நடப்படவுள்ளது. சென்னை மாநகரை அழகுபடுத்தும்‌ பொருட்டும்‌, பெருநகர சென்னை மாநகராட்சியின்‌ பேருந்து சாலைகளில்‌ போக்குவரத்து நெரிசல்‌ மற்றும்‌ வாகனங்களால்‌ ஏற்படும்‌ மாசுக்களை தவிர்க்கும்‌ பொருட்டும்‌, சாலை மையத்‌ தடுப்புகள்‌ 102 எண்ணிக்கையிலும்‌, போக்குவரத்து தீவுத்திட்டுகள்‌ 112 எண்ணிக்கையிலும்‌ அமைக்கப்பட்டு, அழகு மிளிரும்‌ பூச்செடிகள்‌ நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில்‌, 32 எண்ணிக்கையிலான சாலை மையத்‌ தடுப்புகள்‌ மற்றும்‌ 44 எண்ணிக்கையிலான போக்குவரத்து தீவுத்திட்டுகள்‌ ஆர்வமுள்ள தனியார்‌ நிறுவனங்கள்‌ மூலம்‌ தத்தெடுக்கப்பட்டு செடிகள்‌ வளர்த்து பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும்‌, மீதமுள்ள சாலை மையத்‌ தடுப்புகள்‌ மற்றும்‌ போக்குவரத்து தீவுத்திட்டுகள்‌ ஆர்வமுள்ள தனியார்‌ நிறுவனங்கள்‌ மூலம்‌ தத்தெடுப்பு முறையில்‌ பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்‌.

பெருநகர சென்னை மாநகராட்சியில்‌ 63 எண்ணிக்கையில்‌ சமுதாய நலக்கூடங்கள்‌ பொதுமக்களின்‌ பயன்பாட்டில்‌ உள்ளது. இந்த சமுதாய நலக்கூடங்களை சிறந்த முறையில்‌ பராமரிக்க இந்த நிதியாண்டில்‌ ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள்‌ மேற்கொள்ளப்படும்‌.

தூய்மை இந்தியா திட்டம்‌ மற்றும்‌ நிர்பயா திட்ட நிதிகளை ஒருங்கிணைத்து சென்னை மாநகரில்‌ 366 இடங்களில்‌ உள்ள பொதுக்கழிப்பிடம்‌ மற்றும்‌ சமுதாய கழிப்பிடங்களில்‌ ரூ.36.34 கோடி மதிப்பீட்டில்‌ 918 எண்ணிக்கையிலான கழிப்பிட இருக்கைகளும்‌ மற்றும்‌ 671 எண்ணிக்கையிலான சீறுநீர்‌ கழிப்பான்களும்‌ மறு சீரமைக்கப்படும்‌.

மென்பொருள்‌ செயலி மூலம்

நிலங்களின் தகவல்கள்

முதலமைச்சர்‌, நகர்ப்புற ஏழைகளின்‌ வாழ்வாதாரத்தை உயர்த்தும்‌ நோக்கில்‌ “நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம்‌” என்ற திட்டத்தினை அறிவித்தார். பெருநகர சென்னை மாநகராட்சியில்‌ பொருளாதாரத்தில்‌ பின்தங்கிய மக்களைக்‌ கொண்ட தண்டையார்பேட்டை மற்றும்‌ திரு.வி.க.நகர் ஆகிய இரண்டு மண்டலங்கள்‌ தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில்‌ கீழ்‌ பணியாற்ற நபர்‌ ஒருவருக்கு நாள்‌ ஒன்றுக்கு ரூ.382 – ஊதியமாக நிர்ணயம்‌ செய்யப்பட்டுள்ளது. இதுவரை 42,328 நபர்களுக்கு வேலைக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டு, மழைநீர்‌ வடிகால்‌ தூர்வாரும்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது சாலையோரங்களில்‌ மரம்‌ நடும்‌ பணி, பூங்காக்களில்‌ மரம்‌ நடும்‌ பணி மற்றும்‌ இதர பணிகள்‌ மேற்கொள்ளப்படும்‌

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான அனைத்து நிலம்‌ மற்றும்‌ உடைமைகளையும்‌ பாதுகாக்கும்‌ பொருட்டு அதன்‌ விவரங்களை கணினி மயமாக்கி, புவியியல்‌ தகவல்‌ அமைப்பு குறியீடு செய்ய வேண்டிய அவசியம்‌ ஏற்பட்டு உள்ளது. எனவே, மாநகராட்சியின்‌ அனைத்து நிலங்கள்‌ மற்றும்‌ உடைமைகளை நிலஅளவை, எல்லை வரையறை, புவியியல்‌ தகவல்‌ குறியீடு செய்து, அனைத்து விவரங்களும்‌ தொகுக்கப்பட்ட மென்பொருள்‌ செயலி ஒன்று உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்‌.

புராதன கட்டிடமான ரிப்பன்‌ மாளிகையை நிறம்‌ மாறும்‌ வண்ண விளக்குகளால்‌ அலங்கரிக்க ரூ.1.81 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி 10 மண்டலங்களில் தெருவிளக்கு பராமரிப்பு பணிகள்‌ ஒப்பந்த அடிப்படையில்‌ ரூ.22 கோடி மதிப்பீட்டில்‌ மேற்கொள்ளப்படும்‌.

க்யூஆர் குறியீட்டில்

சொத்து வரி செலுத்தலாம்

பொதுமக்கள்‌ எளிமையான முறையில்‌ சொத்து வரியினை செலுத்துவதற்கு பெருநகர சென்னை மாநகராட்சியால்‌ பல்வேறு திட்டங்கள்‌ செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்‌ தொடர்ச்சியாக இந்த நிதியாண்டில்‌ க்யூஆர் குறியீட்டினை செயல்படுத்தி பொதுமக்கள்‌ சொத்து வரியினை செலுத்துவதற்கு வழிவகை செய்யப்படும்‌.

ரிப்பன்‌ கட்டிடம்‌ மற்றும்‌ அனைத்து வட்டார அலுவலகங்களிலும்‌ தானியங்கி கருவி மூலம்‌ சொத்து வரியினை செலுத்துவதற்கு வழிவகை செய்யப்படும்‌. இதன்‌ வாயிலாக பொதுமக்கள்‌ தங்கள்‌ சொத்து வரிக்கான காசோலைகளை மாநகராட்சி அலுவலர்‌ உதவியின்றி தாங்களாகவே செலுத்தி கணினி ரசீதினை பெற்றுக்கொள்ளலாம்‌.வணிக வாட்ஸ்‌–அப்‌ கணக்கு வாயிலாக வர்த்தக உரிமம்‌ புதுப்பித்தல்‌, நிறுவன வரி செலுத்துதல்‌, கட்டட திட்ட விண்ணப்பத்தின்‌ நிலையை நிகழ்நிலை மூலம்‌ அறிதல்‌ ஆகிய சேவைகள் கூடுதலாக வழங்கப்படும். வர்த்தகர்கள்‌ டிஜி லாக்கர்‌ அமைப்பிலிருந்து வர்த்தக உரிமங்களை பதிவிறக்கும்‌ செய்யும்‌ வசதி அறிமுகப்படுத்தப்படும்‌.

நம்ம சென்னை செயலி வழியாக தொழில்‌ வரி செலுத்துதல்‌, வர்த்தக உரிமம்‌ புதுப்பித்தல்‌, ஆன்லைனில் கட்டட திட்ட விண்ணப்பத்தின்‌ நிலை அறிதல்‌ ஆகிய கூடுதல் சேவைகள் அறிமுகப்படுத்தப்படும். அரசு செயல்பாட்டில்‌ செயல்திறன்‌, நிலைத்தன்மை மேம்படுத்தவும்‌ மற்றும்‌ கோப்புகள்‌ கையாள்வதற்கான நேரத்தை குறைக்கும்‌ வகையிலும்‌ பெருநகர சென்னை மாநகராட்சியில்‌ மின்‌ அலுவல்‌ அமைப்பு அறிமுகப்படுத்தப்படும்‌. இதன்‌ வாயிலாக வரும்‌ காலங்களில்‌ பொதுமக்களுக்கான சேவைகள்‌ காலதாமதமின்றி விரைவாக செய்து முடிக்க இயலும்‌.

அதிகாரிகளுக்கு டேஷ்போர்டு

அனைத்து பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்களும்‌ மக்களின்‌ குறைகளை உரிய நேரத்தில்‌ நிவர்த்தி செய்யவும்‌, அலுவலர்களின்‌ தினசரி வருகையைக்‌ குறிக்கவும்‌, பல்வேறு துறைகளின்‌ செயல்பாடுகளை கண்காணிக்க அதிகாரிகளுக்கு தெரிவு பலகை (டேஷ்போர்டு) ஒருங்கிணைந்த கட்டளை மற்றும்‌ கட்டுப்பாட்டு மையம்‌ வாயிலாக ஒரு புதிய பணியாளர்‌ செயலி உருவாக்கப்‌பட்டு வெளியிடப்படும்‌. இச்செயலி வாயிலாக அதிகாரிகள்‌ பொதுமக்களுக்கான சேவைகள்‌ குறித்த காலத்தில்‌ முடிக்கப்படுகின்றனவா என்பதை திறமையான முறையில்‌ கண்காணிக்க இயலும்‌.

ரூ.2 கோடி மேயர்‌

சிறப்பு மேம்பாட்டு நிதி

கடந்த 7 ஆண்டுகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்றம்‌ செயல்படாத காரணத்தினால்‌ மேயர்‌ மற்றும்‌ மாமன்ற உறுப்பினர்களுக்கான நிதியிலிருந்து எவ்வித பணிகளும்‌ மேற்கொள்ளப்படவில்லை. இத்திட்டம்‌ தொடர்ந்து நடைபெற ஏதுவாக 2022–2023 நிதியாண்டில்‌ ரூ.2 கோடி மேயர்‌ சிறப்பு மேம்பாட்டு திட்டத்திற்காகவும்‌ மற்றும்‌ ஒவ்வொரு மாமன்ற உறுப்பினருக்கு ரூ.35 லட்சம்‌ வீதம்‌ 200 வார்டுகளுக்கும்‌ மொத்தம்‌ ரூ.70 கோடி மாமன்ற உறுப்பினர்‌ வார்டு மேம்பாட்டு திட்டத்திற்காகவும்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாமன்ற உறுப்பினர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியின்‌ நடைமுறைப்‌ பணிகள்‌ மற்றும்‌ நிர்வாக விவரங்கள்‌ குறித்து உரிய துறையின்‌ அலுவலர்களால்‌ பயிற்சி அளிக்கப்படும்‌.

error: Content is protected !!