December 9, 2022

இது அடுத்த டிஜிட்டல் புரட்சியாமே?- ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

நாம் இனி அடுத்தத் தெருவிலுள்ள மளிகைக் கடைக்கு நேரில் சென்று பொருட்களை வாங்கத் தேவையில்லை. அப்புறம்? அவர்களே கொண்டு வந்துக் கொடுப்பார்களாம். எப்படியா? ஃபோனில் கூப்பிட்டால்தானே என்று கேட்காதீர்கள்? ஆன்லைனிலும் ஆர்டர் போட்டாலும் வருமாம்! விளையாடுகிறீர்களா என்று கேட்கும் உங்களது மைண்ட் வாய்ஸ் கேட்கிறது; அதற்குத்தான் இக்கட்டுரையே!

இந்தியாவில் ஆன்லைனில் பொருட்களை வாங்குவது என்பது அஸ்திவாரம் இடப்பட்ட வணிகங்களில் ஒன்று. கடந்த இரண்டாண்டுகளில் மக்களின் ஒருமித்த ஆதரவுடன் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு முன்னர் இவ்வளவு வேகத்துடன் இந்த வணிகம் வளரவில்லை. கடந்த இரண்டு பொதுமுடக்கங்களில் இந்தியாவில் டிஜிட்டல் வணிகங்களின் வளர்ச்சி பொதுவாகவே அதிகரித்தது. இதில் ஆன்லைன் வர்த்தகம் அதிகமாகவே வளர்ந்துள்ளது. இதுநாள் வரை ஏன் இந்த வர்த்தகம் இப்படி அதிரடியாக வளரவில்லை என்பதற்கு ஒரு முக்கியக் காரணம் சில்லறை விற்பனையாளர்களுக்கு அமேசான் அல்லது ஃபிளிப்கார்ட் போன்ற இணையதள வர்த்தக நிறுவனங்களுக்கு பணம் செலுத்தி தங்களது வர்த்தகத்தை விரிவு படுத்தும் அளவிற்கு பண வசதி, இட வசதி, ஆள் பலம் மற்றும் வாடிக்கையாளர் எண்ணிக்கை ஆகியவை அமையவில்லை.

இருப்பினும் இரண்டு அமெரிக்க நிறுவனங்களும் தங்களது வணிகத்தை விரிவுபடுத்தியே வந்தனர். ஒரு கணக்கின்படி 10 இலட்சம் சில்லறை விற்பனை நிலையங்கள் தங்களது சேவையை இணையதள வர்த்தகத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். கடந்த இரண்டாண்டுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வு இது. இத் தொழிலின் விரிவாக்கம் 2025 ஆம் ஆண்டில் 5.5 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என்று ஒரு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தற்போது சுமார் 700 மில்லியன் டாலர்களாக உள்ள இந்த வர்த்தகம் அடுத்த மூன்றாண்டுகளில் பெரும் பாய்ச்சலில் வளரப் போகிறது என்பதையே ஆய்வு முடிவு எடுத்துரைக்கிறது. சரி எப்படி இது நிகழப்போகிறது? அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் தவிர வேறு சில இணைய தள நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. கூடவே யூ பி ஐ டிஜிட்டல் பேமண்ட் சேவைகளும் விரிவுபடுகின்ற சூழலில் இணையதள வர்த்தகமும் விரிவுபடும் என்பது தெளிவு,

இந்த வர்த்தகத்தில் சிறிய அளவிலான சில்லறை வர்த்தக நிறுவனங்களும் பங்கேற்க வசதியாக இந்திய அரசு ஓபன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் காமர்ஸ் எனும் இணையதள வசதியை இந்த வர்த்தகத்தில் சிறிய அளவிலான வர்த்தக நிறுவனங்களும் பங்கேற்கும் விதமாக ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதன் மூலம் பெரு நிறுவனங்களான அமேசான், ஃபிளிப்கார்ட் போன்றவற்றின் தயவை நம்பியிருக்காமல் சிறிய வர்த்தக நிறுவனங்கள் தங்களது இணைய தள வர்த்தகத்தை அமைத்துக் கொள்ளலாம். அரசு இதை வெளிப்படையான வசதியாக அளித்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு புதிய நிறுவனங்கள் (ஏஜென்சிகள்) தங்களது இணையதள வர்த்தகத்தை துவங்கலாம். இதில் சில்லறை விறபனை நிறுவனங்கள் இணையலாம். இதன் மூலம் அடுத்தத் தெருவிலுள்ள மளிகைக்கடைக்கு நீங்கள் நேரில் செல்லாமலே பொருட்களை வாங்க இயலும். அரசு ஏற்படுத்தும் தளமானது யூ பி ஐ டிஜிட்டல் பேமண்ட் சேவைகள் போல பொருளாதார பலம் குறைவாகவுள்ள நிறுவனங்களுக்கு உதவி புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய இந்திய சந்தையில் ஏராளமான நிறுவனங்கள் தங்களது விற்பனையை தங்களது சொந்த இணையதளங்களின் மூலமாகவே செய்து கொள்ளும் வசதியை ஏற்படுத்தி விடுகின்றன. இதற்கென்று அவை செயலி ஒன்றையும் ஏற்படுத்திக் கொள்கின்றன. ஏராளமான செயலிகளை தங்களது மொபைல் ஃபோன்களில் சுமக்க வேண்டிய பொறுப்பு நுகர்வோருக்கு ஏற்படுகிறது. இதற்காகவே மேம்பட்ட ஃபோன்களுக்கு அவர்கள் செலவு செய்ய வேண்டியதும் உள்ளது. ஆனால் அரசு ஏற்படுத்தித் தரும் இணையதள வர்த்தக வசதியைப் பயன்படுத்தும் போது தனித்தனியாக செயலிகளிலிருந்து விடுதலை கிடைக்க வாய்ப்பு ஏற்படுகிறது. உங்களது மொபைல் ஃபோன்களின் ஆரோக்கியத்திற்கும் கேடில்லை. இந்தியாவின் சில்லறை விற்பனை சந்தையின் மதிப்பு கடந்த ஆண்டின்படி $883 பில்லியன்களாகும். இந்த எண்ணிக்கையானது 2024 ஆம் ஆண்டில் $ 1.3 பில்லியன்களாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நுகர்வோருக்கு குறைந்த விலையில் நிறைந்த சேவையை அளிக்கும் நிறுவனங்களே நிலைக்கும். இந்தியாவின் சில்லறை விற்பனை நிலையங்களையே இன்றும் பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள். பிரம்மாண்ட மால்களின் வர்த்தகம் பெருநகரங்களிலும் மாநகராட்சிப் பகுதிகளிலும் மட்டுமே உள்ளது. மினி சூப்பர் மார்க்கெட்டுகளும் இந்தியா முழுதும் பெருகி வருகின்றன. இந்நிலையில் இணையதள வசதியோடு அவை இயங்கும் எனில் மக்களுக்கு அதிக வசதி கிடைக்கும் என்பதில் ஐயமில்லையே?

ரமேஷ்பாபு