November 29, 2022

‘வெண்கலக்குரலோன்’ சீர்காழி கோவிந்தராஜனின் நினைவுநாள்!

மிழுக்கு ஒரு குரல் என்றால் அது சீர்காழியின் குரலைப் போல கணீர் என்று இருக்கும் என்று சொன்னால் அது மிகையில்லை. சீர்காழி என்பது ஊரின் பெயர்தான். ஆனால் அந்தப் பெயரைக் கேட்டதும் முதலில் அது ஊர் என்று நம் நினைவுக்கு வருவதில்லை. அங்கு பிறந்து வளர்ந்து இசை பயின்று தன் காந்தக் குரலாலே தமிழ் உள்ளங்களையெல்லாம் கட்டிப் போட்ட சீர்காழி எஸ். கோவிந்தராஜன் முகமே நம் நினைவுக்கு வரும். அந்த அளவுக்குத் தன் இசையால் தமிழகத்தை ஆண்ட ஆள்கின்ற இசைக்கும் குரலுக்கும் சொந்தக்காரர் கோவிந்தராஜன். அது எத்தனை தனித்துவமானது என்றால் எந்த நடிகருக்காக அவர் பாடினாலும் அந்த நடிகரின் முகத்தைத் தாண்டியும் தனது முகத்தை மேலோங்கச் செய்யும் கவித்துவமானது.

சீர்காழியின் பாடல்களுக்காகவே ஹிட்டான படங்களும் உண்டு. சீர்காழியின் பாடல் இடம்பெறுவதும் படத்திற்கான சந்தை மதிப்பின் அடையாளமாக மாறியது. சீர்காழியின் குரலில் தமிழ் அவ்வளவு இனிமையாக இருக்கும். ழ,ல,ள வேறுபாடும் ந,ண,ன வேறுபாடும் அத்தனைச் சிறப்பாய் இருக்கும். மொழியை பிறழாமல் உச்சரிப்பதும் கூட தெய்வாம்சம் தான். அதைவிடவும், ஒரு பெரிய கூட்டத்தில் ஒலிப்பெருக்கி இல்லாமலும் கூட அவரால் பாடி அசத்த முடியும். தத்துவப் பாடல்களும், தெய்வீக ராகங்களும் சீர்காழியின் குரலில் இன்றும் இனிக்கிறது.

தமிழ் சினிமாவின் ஆளுமைக்கெல்லாம் ஆஸ்தானக் குரல் என்றால் அது டி.எம்.எஸ். ஸின் சாக்லெட் குரல்தான். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, முத்துராமன், எஸ்.எஸ்.ஆர்., ஜெய்சங்கர் என்று ரவுண்டுகட்டு பாடியவர், பின்னாளில் கமல், ரஜினிக்கும் கூட பாடியிருக்கிறார். அப்பேர்ப்பட்ட டி.எம்.எஸ்.ஸுடன் சீர்காழி சேர்ந்து பாடிய பாடல்கள் ஏராளம். அந்தப் பாடல்களில், சீர்காழியாரின் குரல் மட்டும் தனித்தோங்கி ஒலிக்கும். அதனால்தான் சீர்காழி கோவிந்தராஜனை வெண்கலக்குரலோன் என்று கொண்டாடிக்கொண்டிருக்கிறது தமிழ் உலகம். குறிப்பாக தோல்வியில் துவண்டுகிடப்பவர்களை எதிர்நீச்சல் போடு என்போம். அதையே சீர்காழி பாட்டாகப் பாடும்போது நமக்குப் பல்மடங்கு நம்பிக்கை வந்துவிடுகிறது. நாள் நட்சத்திரம் பார்த்து மகிழ்வோ சோர்வோ அடைபவர்களுக்காகவே ‘சுபதினம்’ பாடல் ஒலிக்கும். வீர உணர்ச்சியை வெளிப்படுத்த ‘நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்’ பாடல். இப்படி மனித வாழ்வில் ஆதார உணர்வுகள் அனைத்துக்குமான பாடல் சீர்காழியின் குரலில் உண்டு.

திரை இசை மட்டுமல்ல ஆன்மிக இசையிலும் இவருக்கென்று தனித்த முத்திரை உண்டு. டி.எம்.எஸ் என்றதும் நம் மனதில் முருகன் பாடல்கள் ஒலிப்பதைப்போல சீர்காழி என்றதும் விநாயகர் பாடல்கள் ஒலிக்கும்.’விநாயகனே… வினை தீர்ப்பவனே…’ என்று இவர் பாடலைக் கேட்டதுமே, அந்த பிள்ளையாரே வினை தீர்க்கக் கிளம்பிவிடுவார் என்பார்கள். அந்த அளவுக்கு தெய்வாம்சக் குரலுக்குச் சொந்தக்காரராகத் திகழ்ந்தார் சீர்காழி கோவிந்தராஜன்.

அண்ணன் பிள்ளையாருக்கு மட்டுமா? தம்பி முருகனுக்கு ‘திருச்செந்தூரின் கடலோரத்தில்’ என்ற பாடலைக் கேட்க, அந்த செந்தூர் அலைகள் கரைக்கு வந்து காது கொடுத்துவிட்டுப் போகும். ’ஆறுபடை வீடுகொண்ட திருமுருகா’வுக்கு உருகாதார் எவருமில்லை. முருகனை கூப்பிட்டு  என்றாலே முருகபெருமான் நம் மனக்கண்ணில் வந்து விடுவார்..உள்ளம் உருகுதையா, கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்,ஓராறு முகமும் ஈராறு கரமும்,மண்ணாணாலும் திருச்செந்துரில் மண்ணாவேன்…என்ற பாடல்கள் காலையில் ஓலிக்காத இடங்கள் இல்லை…

ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் மட்டுமில்லாமல், எழுபதுகளில் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் இவர் பாடிய பாடல், எம்ஜிஆர் கட்சிக்காரர்களின் திருப்பள்ளியெழுச்சி, காலர் டியூன், வைட்டமின் பூஸ்ட். தமிழகத்தில் எந்த ஊரில் இந்தக் கட்சியின் எந்த மாதிரியான விழா நடந்தாலும், ’நம் வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்’ என்ற பாடல், அந்தக் கால ‘சங்கே முழங்கு’ என்ற பாடலுக்கு இணையான புத்துணர்ச்சிப் பாடல்.

முன்னரே சொன்னது போல் ’எதிர்நீச்சல்’ படத்தின் ‘வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல்’ பாடலும் ‘ஆண்டுக்கு ஆண்டு சுபதினம்’ பாடலும் நமக்குள் தன்னம்பிக்கையைத் தூண்டி சுடர் விடச் செய்யும். சோர்வான தினத்தையும் சுபதினமாக்கிவிடும். அந்தக் காந்தக் குரல், கரையாத இரும்பையும் உருக்கியெடுத்துவிடும்.

‘அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையில் எனக்கு’ என்கிற சீர்காழியாரின் குரலைக் கேட்டால், அமுதும் வேண்டாம் தேனும் வேண்டாம் என்று சொல்லிவிடுவோம். ’படிக்காத மேதை’ படத்தில், எஸ்.வி.ரங்காராவும் சிவாஜியும் தங்களின் நடிப்பால் நம்மை மிரளவைத்து கதறடித்துவிடுவார்கள். போதாக்குறைக்கு, சீர்காழியும் சேர்ந்து கொண்டு, ‘எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நானென்றான்’ என்று பாடி அழவைத்துவிடுவார்.

’தட்டு தடுமாறி நெஞ்சம் கை தொட்டு விளையாட கெஞ்சும்’ என்ற பாடலில் கொஞ்சும் குரலால் நம் நெஞ்சம் தொடுவார். ஹைடெக் சாலையில் இருந்தாலும் கூட, ‘ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே’ என்ற இவரின் பாடலைக் கேட்டால், நம்மையெல்லாம் ஓடத்தில் ஏற்றிக்கொண்டு ஒரு ரவுண்டு அழைத்துச் செல்வார். அப்படியொரு மேஜிக் குரல் சீர்காழி கோவிந்தராஜனுடையது!

‘கர்ணன்’ படத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் கர்ணன் சிவாஜிக்காக நாம் அழுதுகொண்டிருப்போம். அப்போது கவியரசரின் குரல் நம்மை இன்னும் அழவைக்கும். நடிப்பையும் வரிகளையும் நமக்குள் கனெக்ட் செய்யும் குரலுக்கு உரியவராக, ‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது…’ என்று பாடியிருப்பார். நாம் கைத்தட்டி அழுது கேட்டு மெய்ம்மறப்போம்.

‘நீர்க்குமிழி’ படத்தில், ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா’ என்கிற பாடல், மனிதர் உள்ளவரை, உள்ளம் தொட்டு உசுப்பும் பாடல். அவர் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் இன்னும் கனப்படுத்தி, நம்மை ரணப்படுத்தவல்லவை!

‘காதலிக்க நேரமில்லை, காதலிப்பார் யாருமில்லை’ என்றும் ‘காசிக்குப் போகும் சந்நியாசி’ என்றும் குஷியாகவும் குறும்பாகவும் பாடியிருக்கும் சீர்காழியின் குரல் தொட்ட உச்சத்துக்கு எல்லையே இல்லை.

சீர்காழியில் 1933ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி பிறந்த கோவிந்தராஜன், 1988ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி தனது 55வது வயதில் இயற்கை எய்தினார். இறக்கும்போது `உலகம் வாழ்க’ என்று முருகன் கோயிலைப் பார்த்து கூறியபடியே உயிர்விட்டார். வழக்கமாக 3 மணி நேரம் நடக்கும் தனது இசைக் கச்சேரியை மூன்று பகுப்புகளாகப் பிரித்து வைத்துக் கொள்வார் இசைமணி சீர்காழி கோவிந்தராஜன். முதல் ஒரு மணி சாஸ்த்ரீய சங்கீதம், இதை சாம்பார் சாதம் என்பார். அடுத்த ஒரு மணி நேரம் தமிழிசை பக்திப் பாடல்கள், இதை ரசம் சாதம் என்று சொல்லும் அவர், திரையிசைப் பாடல்கள் வரும் மூன்றாவது மணி நேரத்தை மோர் சாதம் என்று பகுத்து வைத்திருந்தார்.

அப்பேர்பட்ட சீர்காழி கோவிந்தராஜன் நினைவு நாள் இன்று (24.03.2020). இந்தநாளில் அவர் நினைவைப் போற்றுவோம்.