இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சியை தவிர்க்க இயலாது – ரமேஷ்பாபு

இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சியை தவிர்க்க இயலாது – ரமேஷ்பாபு

ந்து மாநிலத் தேர்தல் முடிவுகளால் அதிகம் சோர்ந்து போயிருப்பவர்கள் காங்கிரஸ் தொண்டர்களாகத்தான் இருப்பார்கள். ஆட்சியில் இருந்த பஞ்சாப் கையை விட்டுப் போய்விட்டது. தலைமையின் சொந்த மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் வெறும் இரண்டே இடங்களில் வெற்றி. கோவாவில்தான் கொஞ்சம் ஆறுதல். மணிப்பூரில் அடிமட்ட வீழ்ச்சி. உத்தரகாண்டில் ஆட்சியைப் பிடித்துவிடுவோம் என்று சொல்லி வந்தவர்களால் 19 இடங்களில் வென்று முதன்மை எதிர்க்கட்சித் தகுதியை மட்டுமே பெற முடிந்தது. மேலும் ஒரு ஆறுதல் மம்தாவின் அறைகூவல். இப்படி சோக கீதம் வாசிக்கும் நிலைக்கு ஏன் இந்திய தேசிய காங்கிரஸ் போனது?

மத்தியில் ஆளும் பாஜகவின் ஆர்.எஸ்.எஸ் பின்னணியையும், அதன் மதவாத அரசியலையும், பொருளாதார சாகசங்களையும் மக்களவையிலும், பொதுவெளியிலும் தலைவர் ராகுல் காந்தி காட்டமாகவே பேசி வருகிறார். அவரது பேச்சிற்கு தமிழகம் உட்பட பல மாநில முதல்வர்கள், ஊடகங்கள் பெரும் முக்கியத்துவம் தருகின்றன. அப்படியிருந்தும் ஏன் இந்தத் தோல்வி முகம்? கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை பத்தாண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் பேர் சொல்லிக்கொள்ளும்படியான சாதனைகள் எதையும் செய்யவில்லை. இன்று பாஜக அரசு நிறைவேற்றும் எந்தவொரு திட்டத்தையும் தாங்கள்தான் முதலில் வடிவமைத்தோம்; ஆனால் தேசிய நலன் கருதி அவற்றை நிறைவேற்றவில்லை என்று அடித்து வாதிடும். அது பணமதிப்பிழப்பு, குடியுரிமைச் சட்டம், ஆதார் அட்டை மற்றும் தமிழக ஆளுங்கட்சியின் முதன்மை இலக்கான நீட் தேர்வு எனப் பட்டியில் நீண்டு போவதில் காங்கிரஸ்சின் பங்கு, அதாவது அவற்றை உருவாக்கிய பங்கு மிக முக்கியமானது. நீட் தேர்வு உச்ச நீதிமன்றமே தலையிட்டு தீர்ப்பு வழங்கி நடைமுறைக்கு வந்த திட்டம்.

ஆதார் அட்டைக்கு சட்டத் தகுதி இல்லையென்று வாதிட்டாலும் அது தனி நபர் உரிமையில் தலையிடுவதால் அதைக் கட்டாயமாக்கக் கூடாது எனும் வாதத்தை ஏற்றுக்கொண்டது உச்ச நீதிமன்றம். ஆயினும் அரசு தனிச்சட்டம் இயற்றி அதைக் கட்டாயமாக்கியுள்ளது. அதே போல நீட் தேர்வை தமிழ் நாடு அரசு கடுமையாக எதிர்த்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி இதை வரவேற்கிறது. ஆனாலும் நீட் குறித்த கருத்து வேறுபாடுகள் அக்கட்சியின் மத்திய தலைமைக்கும் மாநிலத் தலைமைக்கும் இடையே அமைதியாக நீடிக்கிறது. இப்படி ஒருமித்த கருத்தில்லாத வகையில் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி இயங்கி வருகிறது.

இரண்டாவது முறையாக மக்களவையில் முதன்மை எதிர்க்கட்சி தகுதியை இழந்த போது (வெறும் இரண்டு இடங்கள் வேறுபாட்டில்) காங்கிரஸ் தலைவர்கள் குமைந்தனர். பின்னர் 23 தலைவர்கள் இணைந்து தற்காலிகத் தலைவர் சோனியாவிற்கு கடிதம் எழுதினர். விரைவில் புதிய தலைமையை அறிவிக்க வேண்டும் என்று கோரினர். ஆனால் சோனியாவோ புதிய தலைவரை தேர்வு செய்வதை இரண்டு ஆண்டு காலத்திற்கு ஒத்திப்போட்டார். அதுவரை தானே தற்காலிகத் தலைவராக நீடிக்கப்போவதாகவும் தெரிவித்தார். தற்போது நடைபெற்றத் தேர்தல்களில் 23 காங்கிரஸ் தலைவர்களுக்கு எவ்விதமான பொறுப்பும் வழங்கப்படவில்லை. பிரியங்கா காந்தி நேரடியாக களத்தில் இறங்கினார். ஆனாலும் சொந்த தொகுதியான அமேதியில் (பேரவைத் தொகுதி) காங்கிரஸ் வேட்பாளர் பெற்றது வெறும் 14,080 வாக்குகள் மட்டுமே.

பிரியங்கா அமேதி தொகுதி அடங்கியுள்ள உ.பி கிழக்கின் பொதுச் செயலாளர் என்ற வகையிலேயே களம் இறங்கினார். ராகுலும் பிரச்சாரம் செய்தார். சோனியா காணொலி மூலம் பரப்புரை ஆற்றினார். சொந்த மாநிலத்தில் செல்வாக்கு இழந்தத் தலைவர்களை எப்படி தலைமையில் நீடிக்கச் செய்வது என்பதில் காங்கிரஸ் தலைவர்களுக்கு குழப்பம் இருக்கலாம். அப்படியென்றால் அடுத்தத் தலைவர் யார்? இந்தியா முழுதும் அறிமுகமான, வயதில் இளையத் தலைவர் யார்? கடிதம் எழுதிய 23 பேரில் ஒருவரையே தேர்வு செய்யலாமா? அதில் ஒருவரான குலாம் நபி ஆசாத்திற்கு பத்ம விருது வேறு வழங்கப்பட்டுள்ளது. தங்களுக்கு விசுவாசமான தலைவர் யார் என்பதில் தலைமைக்கு சந்தேகம் இருப்பதால்தான் யாரையும் ‘டம்மி’ தலைவராகக் கூட தேர்வு செய்ய இயலாமல் இருக்கிறார்களா?

பிரபல வரலாற்று ஆய்வாளரும், கிரிக்கெட் குறித்த நிபுணருமான ராமச்சந்திர குஹா நேரு-இந்திரா வாரிசுகளான சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா என மூவரும் கட்சியை விட்டு விலகிவிட வேண்டும் என்று கடுமையாக பேசியுள்ளார். மூவரின் தலைமையின் கீழ் அகில இந்தியக் கூட்டணி ஒன்றை அமைப்பதில் மம்தா பானர்ஜிக்கும் தயக்கமுள்ளது. தெலுங்கானா முதல்வரும், தெலுங்கான ராஷ்டிரிய சமிதியின் தலைவருமான சந்திரசேகர் ராவ் காங்கிரஸ் இடம் பெறாத கூட்டணி வேண்டும் என்கிறார். இதை ஆந்திராவின் முதல்வரும், ஒய் எஸ் ஆர் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியும் ஆதரிக்கிறார். போதாக்குறைக்கு சரத் பவார் தன் மகள் சுப்ரியா சுலேவை பிரதமர் வேட்பாளர் ஆக்கும் ஆசையில் கூட்டணியை ஆதரிக்கிறார். ஆம் ஆத்மி கட்சியைப் பொறுத்தவரை பஞ்சாப்பை காங்கிரஸ்சிடமிருந்து கைப்பற்றியுள்ளதால் நேரடியாக அதனுடன் கூட்டணி சேர இயலாத நிலை. டெல்லியிலும் காங்கிரஸ்சிடமிருந்துதான் ஆட்சியை கைப்பற்றினார் அரவிந்த் கெஜ்ரிவால். ஒடிஷாவின் நவீன் பட்நாயக்கும், இடதுசாரி கட்சிகளும், இன்ன பிற சாத்தியமுள்ள சிறு கட்சிகளும் கூட இக்கூட்டணியில் இணையலாம். திமுக நிச்சயம் இடம் பெறும். எனவே அக்கூட்டணிக்கு கிழக்கு மற்றும் தென் இந்தியாவில் பெரும் செல்வாக்கும், பெரியளவில் வெற்றிகளும் கிடைக்கலாம்.

ஆயினும் வடக்கு, மேற்கு திசைகளில், குறிப்பாக ஹிந்தி பெல்ட் பகுதியில் காங்கிரஸ்சும், பாஜகவும் நேரடியாக மோதும் இடங்களில் காங்கிரஸ்சால் ஆளுங்கட்சியை தோற்கடிக்க முடியுமா எனும் பிரம்மாண்டக் கேள்வி எழுகிறது,. அப்படி மோதிய இடங்களில் காங்கிரஸ்சின் வெற்றி விழுக்காடு 8% மட்டுமே என ஒரு புள்ளி விவரமும் கொடுக்கப்படுகிறது. எனவே காங்கிரஸ்சை நம்பி களத்தில் இறங்காமல், நெருக்கடி நிலைக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய ஜனதா கட்சியைப் போல ஒருக் கூட்டணியை உருவாக்கி அது பொதுவான சின்னத்தில் நாடு முழுதும் போட்டியிட்டால் ஒருவேளை வெற்றி கிடைக்கலாம். ஆனாலும் பிரதமர் யார் என்பதை தெளிவாக முன் கூட்டியே சொல்ல வேண்டும். ஏனெனில் மோடிக்கு பதிலாக யார் என்பதை பாஜக அறிவித்து விட்டு தேர்தலைச் சந்தித்தால் மக்கள் பாஜகவை பெருமளவில் ஆதரிப்பதை தடுக்க முடியாது.

பெரும்பாலும் ஆர் எஸ் எஸ்சின் நம்பிக்கைக்குரிய, முன்னாள் பாஜக தலைவரும் இன்னாள் அமைச்சருமான நிதின் கட்கரியே பிரதமர் வேட்பாளராக இருப்பார் என்று கருதப்படுகிறது. கட்கரிக்கு ம.பி, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் நல்ல செல்வாக்குண்டு. ஹிந்தி பெல்ட்டில் ஹிந்தி பேசத் தெரிந்த ஒருவரையே வாக்காளர்கள் விரும்புவர். அந்த வகையில் அவர் தேர்வடைகிறார். எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கும் அப்படியொரு வேட்பாளர் தேவை. யார் அவர் என்பதுதான் இப்போதைய கேள்வி. எப்படியிருந்தாலும் காங்கிரஸ் இன்றி மகத் பந்தன் (பிரம்மாண்டக் கூட்டணி) சாத்தியமில்லை. அதற்கு தடையாக இருப்பது காங்கிரஸ் தலைவர் யார் எனும் கேள்வி. இதைக் காங்கிரஸ் சொல்லாவிட்டால் நஷ்டம் அதற்கு மட்டுமல்ல; நாட்டில் உறுதியான ஒற்றை எதிர்க்கட்சி இல்லை எனும் போதாமையை ஏற்படுத்திய பழியும் அக்கட்சியையே சேரும்.

மாநிலம் வென்றது/மொத்தம் வாக்குகள் வாக்குகள் % குறிப்பு
கோவா                 11/40           2,22,948 23.50           முதன்மை எதிர்க்கட்சி
மணிப்பூர்           5/60              3,12,659 16.80          மூன்றாம் இடம்
பஞ்சாப்             18/117         35,76,684 23.00         முதன்மை எதிர்க்கட்சி
உ.பி.                   02/403          21,51,234 02.33         ஆறாவது இடம்
உத்தரகாண்ட்19/70         20,38,509 38.00        முதன்மை எதிர்க்கட்சி

ஐந்து மாநிலத் தேர்தல்களில் தோற்றாலும் மிக முக்கிய விஷயம் ஒன்றையும் காங்கிரஸ் அடைந்துள்ளது. அது வாக்குகளின் விழுக்காடு. மூன்று மாநிலங்களில் முதன்மை எதிர்க்கட்சித் தகுதியையும் காங்கிரஸ் பெற்றுள்ளது. எனவே எதிர்காலத்தில் மீண்டும் எழுச்சி பெறும் சூழலும் வரலாம். இல்லையென்றால் மக்களவைத் தேர்தலில் மக்களின் பேராதரவையும் பெறலாம். எனவே முற்றிலும் பொருந்தாத அல்லாத செல்வாக்கு இழந்த அரசியல் கட்சியல்ல காங்கிரஸ். இதன் காரணமாக எதிர்க்கட்சிக் கூட்டணியில் கட்டாயம் தவிர்க்க இயலாததாக ஆகிறது. இந்நிலையில் அடுத்து வரும் மாதங்களில் எடுக்கப்படும் அரசியல் முடிவுகளில்தான் அக்கட்சியின் எதிர்காலம் அடங்கியுள்ளது என்றால் மிகையில்லை.

ரமேஷ்பாபு

Related Posts

error: Content is protected !!