August 15, 2022

நான்கு திசைகளிலும் பாஜகவுக்கு ஆசிர்வாதம்- மோடி ஹேப்பி!

அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில், உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக கூட்டணி வெற்றி முகத்தில் உள்ளதால், நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாட்டத்தில் குதூகலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி முதல், மார்ச் 7-ம் தேதி வரை தேர்தல் நடைபெற்றது. 5 மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு பெரிதும் எழுந்தது. இதில், குறிப்பாக உத்தரபிரதேசம், பஞ்சாப் மாநில தேர்தல் முடிவுகள் மீது பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்தன. நாட்டின் மிகப் பெரிய தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசத்தில், மீண்டும் ஆட்சியை தக்கவைக்க யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக முனைப்பு காட்டியது. இந்நிலையில், 5 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. தொடக்கத்திலிருந்தே உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலை வகிக்க துவங்கியது.

தற்போது இரவு 8 மணி நிலவரப்படி 403 உறுப்பினர்களை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் பாஜக கூட்டணி 262 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம் கிட்டத்தட்ட பாஜகவின் வெற்றி அங்கு உறுதியாகியுள்ளது. சமாஜ்வாதி கட்சி 136 இடங்களிலும், பகுஜன் 2 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் பாஜக கூட்டணி உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதியாகியுள்ளது.

117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில், ஆம் ஆத்மி 90 இடங்களிலும், ஆளும் காங்கிரஸ் 17 இடங்களிலும், பாஜக கூட்டணி 2 இடங்களிலும், அகாலிதளம் 7 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிப்பது உறுதியாகியுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 59 இடங்களை தாண்டி, ஆம் ஆத்மி தனி பெரும் கட்சியாக அங்கு உருவெடுத்துள்ளது.

இதேபோல், 60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூரில் பாஜக 28 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 9 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. தேசிய மக்கள் கட்சி 9 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், 5-ல் 4 மாநில தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து டெல்லி பாஜக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியது இதுதான்:-

4 மாநில தேர்தல் வெற்றி மூலம் மக்கள் மனதில் நாம் இடம் பிடித்திருக்கிறோம். பாஜக அரசு மீதுள்ள மக்களின் நம்பிக்கையே இந்த வெற்றி காண்பிக்கிறது. ஹோலி மார்ச் 10-லிருந்து தொடங்கும் என தொண்டர்கள் உறுதி அளித்தனர். ஆனால் ஹோலி பண்டிகை இப்போதே தொடங்கி விட்டது. வெற்றிக்காக பணியாற்றிய பாஜக தொண்டர்களுக்கு நன்றி. பாஜக அரசு ஏழைகளுக்கு ஆதரவான அரசு. பாஜக மீது ஏழை மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை 4 மாநிலங்களின் தீர்ப்பு காட்டுகிறது. 4 மாநில தேர்தல் பாஜகவின் வெற்றி, ஒரு வரலாற்று சாதனை ஆகும்.

“இந்த ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்று, பாஜகவை வெற்றி பெறச் செய்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி. மக்களின் நம்பிக்கையைப் பெறுவதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். ஹோலி பண்டிகை வாக்கு எண்ணிக்கை அன்று தொடங்கும் என்று நாங்கள் முன்பே கூறியிருந்தோம்.

எல்லையை ஒட்டிய மாநிலம், கடலோர மாநிலம், கங்கையின் சிறப்பு பெற்ற மாநிலம், வடகிழக்கு எல்லையில் உள்ள மாநிலம் என நான்கு திசைகளிலும் பாஜகவுக்கு ஆசிர்வாதம் கிடைத்துள்ளது. இந்த மாநிலங்களின் சவால்கள் வேறு, வளர்ச்சிப் பாதையும் வேறு. ஆனால் அனைவரையும் ஒரே எண்ணத்தில் கட்டிப்போடுவது பாஜக மீதான நம்பிக்கை, பாஜகவின் கொள்கை, பாஜகவின் எண்ணம். உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர் ஆகிய மூன்று மாநிலங்களில் ஆட்சியில் இருந்தாலும் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. கருத்துக் கணிப்புகள் தவறானவை என கோவா தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன.

உத்தரப் பிரதேசம் இந்த நாட்டிற்கு நிறைய பிரதமர்களை கொடுத்துள்ளது. ஆனால், ஒரு முதல்வரை இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுத்திருப்பது இதுவே முதல் முறை. உ.பி.யில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆளுங்கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.

குறிப்பாக உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக புதிய வரலாற்றை எழுதியுள்ளது. முதல் முறையாக ஒரு கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக மாநிலத்தில் ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த முடிவுகள் பாஜகவின் ஏழைகளுக்கு ஆதரவான ஆட்சியை வலுவாக நிரூபிக்கின்றன. இதற்கு முன்னால் இருந்த அரசாங்கத்தை, மக்கள் மின்சாரம், எரிவாயு, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளுக்கு எளிதாக அணுகமுடியவில்லை. ஆனால், எங்கள் அரசு அனைத்து ஏழைகளையும் சென்றடையும். ஏழைகளின் பெயரில் ஏராளமான திட்டங்கள், அறிவிப்புகள் வெளியிடப்பட்டன, ஆனால் ஏழைகள் உரிமைகளைப் பெறுவதை உறுதிசெய்வது அவர்களுக்கு நல்லாட்சி வழங்குவது மிகவும் முக்கியமானது. இதை பாஜக புரிந்துகொண்டுள்ளது.

இந்தத் தேர்தலில் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் நாங்கள் அமோக வெற்றி பெற்றுள்ளோம். 2019-ம் ஆண்டு மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்ததற்கு 2017 உத்தரப் பிரதேச தேர்தல் வெற்றியே காரணம் என நிபுணர்கள் கூறினர். தற்போதைய தேர்தல் முடிவுகள் 2024 தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் என கூறுவார்கள் என்று நம்புகிறேன். மேலும் உ.பி. தேர்தலில் சாதி பிரதானமாக இருக்கிறது என்று சிலர் அவதூறு செய்தார்கள். இப்படி சொல்லுபவர்கள் 2014, 2017, 2019, 2022-ம் ஆண்டு தேர்தல் முடிவுகளைப் பார்க்கவும். ஒவ்வொரு முறையும் உ.பி மக்கள் சாதியை ஓரம்கட்டி வளர்ச்சிக்கான அரசியலைத் தேர்ந்தெடுத்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் அன்பும், ஆசிகளும் என்னை உபி-வாலா ஆக்கியுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, “ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கும் போரில் இந்தியா அமைதியின் பக்கம் உள்ளது மற்றும் அனைத்து பிரச்சனைகளும் விவாதத்தின் மூலம் தீர்க்கப்படும் என்று நம்புகிறது. போரில் ஈடுபட்ட நாடுகளுடன் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது – பொருளாதாரம், பாதுகாப்பு, கல்வி மற்றும் அரசியல் ரீதியாகவும். இந்தியாவின் பல தேவைகள் இந்த நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன” என்றும் பிரதமர் மோடி பேசினார்.