August 15, 2022

கொரோனா காரணமாக கவலை & மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்குது!

லக நாடுகளை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மிரட்டிக் கொண்டிருந்த கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்தார்கள். இதன் தாக்கம் ஏற்படாத நபரே இல்லை என்கிற அளவுக்கு ஒரு சுற்று சுற்றி வந்து விட்டது கொரோனா. இந்த பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களுக்கு கூட ஏதோ ஒரு பக்க விளைவு அதன் பிறகும் தொடர்கிறது என்று சொல்லி வரும் சூழலில் அந்த கொரோனா தொற்று நோயின் காரணமாக, கவலை மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தொற்று நோய் உலக மக்களை ஆட்டி படைத்து வருகிறது. தற்போது கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் குறைந்து காணப்பட்டாலும், அடுத்த அலை உருவாகிவிடுமோ என்ற அச்சத்தில்தான் மக்கள் இருக்கின்றனர். கொரோனா வைரஸ் மனநலம் சார்ந்த பிரச்சினைகளையும் ஏற்படுத்துகின்றன. கொரோனா தொற்று காரணமாக மக்கள் பலவிதமான மனநல பாதிப்புகளுக்கு ஆளாவதை நாம் பார்த்து வருகிறோம்.

நமக்கும் கொரோனா வந்துவிடுமோ, கொரோனா வந்தால் பிழைப்போமா, ஊரடங்கினால் வேலை போய்விட்டதே, சம்பளம் குறைந்துவிட்டதே, ஒருவாரம் தனிமையில் இருக்க வேண்டுமே, நம்மை ஒதுக்கி விடுவார்களோ போன்றவற்றை சிந்தித்து, அதன் காரணமாக மக்களுக்கு அதிக அளவில் மன அழுத்தம் ஏற்படுகிறது.

இந்த நிலையில், கொரோனா தொற்று நோயின் காரணமாக கவலை மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 25 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதனால், மக்களின் மனநல ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அனைத்து நாடுகளுக்கும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.