June 30, 2022

இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு குவியும் வாழ்த்துகள்!

உலக சதுரங்க சாம்பியனை தோற்கடித்த பிரக்ஞானந்தாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் சதுரங்க[ போட்டி இணையம் வழியாக நடைபெற்று வருகிறது. இதில் 16 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன் 8-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான 16 வயதான சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 39-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக பிரக்ஞானந்தா வெற்றி பெறுவது இதுவே முதன்முறையாகும்.

சென்னையில் ஆகஸ்ட் 10, 2005 அன்று பிறந்த பிரக்ஞானந்தாவுக்கு செஸ் விளையாட்டு என்றால் கொள்ளை பிரியம். இதனால் தான் என்னவோ அவர் தனது பயிற்சியை சிறுவயது முதலே தொடங்கி இருக்கிறார். 5 வயதில் போட்டிகளில் களமிறங்கி, தனது ஏழாவது வயதிலேயே உலக சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வசப்படுத்தியுள்ளார். அபிமன்யு மிஸ்ரா, செர்ஜி கர்ஜாகின், குகேஷ் டி, ஜாவோகிர் சிந்தாரோவ் ஆகிய இளம் செஸ் வீரர்கள் கொண்ட பட்டியலில் தனது பெயரையும் 5வது நபராக பதிவு செய்துள்ளார்.

2013-ம் ஆண்டு நடந்த 8 வயதுக்குட்பட்டோருக்கான உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில்தான் பிரக்ஞானந்தா தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றார். அவருக்கு 10 வயது (10 மாதங்கள் மற்றும் 19 நாட்களில்) இருந்தபோது 2016ம் ஆண்டு இளைய சர்வதேச மாஸ்டர் பட்டத்தை வென்றெடுத்தார். அவருக்கு 12 வயது (10 மாதங்கள் மற்றும் 13 நாட்களில்) இருந்த போது, அவர் ரஷ்யாவின் செஸ் நட்சத்திரம் செர்ஜி கர்ஜாகினுக்குப் பிறகு இளைய கிராண்ட்மாஸ்டர் என்ற பட்டத்தை வென்றார்.

சதுரங்க ஆட்டத்தில் இப்படி கட்டம் கட்டி ஆடிவந்த பிரக்ஞானந்தாவின் ‘குரு’ வேறும் யாரும் இல்லை. ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரும், இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டருமான விஸ்வநாதன் ஆனந்த் தான். பிரக்ஞானந்தா இளைய கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்ற பிறகு விஸ்வநாதன் ஆனந்த், அந்த இளம் வீரருக்கு தனது வாழ்த்துக்களை ட்வீட் மூலம் தெரிவித்து இருந்தார்.

இந்தத் தொடரில் இன்னும் 7 சுற்றுகள் உள்ளன. இந்த நிலையில், உலக செஸ் சாம்பியனை வெற்றிக் கொண்ட பிரக்ஞானந்தாவுக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்கள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரக்ஞானந்தா, தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “சூப்பர் கம்ப்யூட்டரையே தோற்கடித்த – தான் பார்த்து வியந்த உலகின் சிறந்த #Chess ஆட்டக்காரரான கார்ல்சனை வீழ்த்தி ஒட்டுமொத்த உலகையே திகைப்பில் ஆழ்த்தியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது #GrandMaster பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மென்மேலும் வெற்றிகள் குவியட்டும்” என்று பாராட்டி பதிவிட்டுள்ளார்.