சென்னை புத்தகக் கண்காட்சியில் ‘நான் எழுதிய உங்களில் ஒருவன்’!- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை புத்தகக் கண்காட்சியில்  ‘நான் எழுதிய உங்களில் ஒருவன்’!- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் 45-வது புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்தப் புத்தகக் காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் புத்தகக் காட்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் ஜனவரி 6ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை புத்தகக் காட்சி நடைபெறுவதாக இருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக அனைத்து விதமான கண்காட்சி மற்றும் பொருட்காட்சிக்குத் தமிழ்நாடு அரசு தடை விதித்தது. இதனால் புத்தகக் கண்காட்சியும் ரத்து செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் சூழலில், தற்போது கொரோனா ஊரடங்கில் தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்தச் சூழலில் சென்னை புத்தகக் காட்சியை நடத்தத் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி நாளை முதல் மார்ச் 6ஆம் தேதி வரை 45 வது புத்தகக் காட்சி, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதை முதல்வரே திறந்து வைத்தார்.

புத்தகக் காட்சியைத் தொடங்கிவைத்த பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியது இதுதான்:

“சென்னையில் நடப்பது போன்றே மதுரையில் 14 ஆண்டுகள், கோவையில் 4 ஆண்டுகளாகவும் இந்தப் புத்தகக் காட்சியை பபாசி நடத்தி வருகிறது. இதுபோல் மற்ற மாவட்டங்களில் நடத்த, அந்தந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய மாவட்ட நிர்வாகம் உரிய உதவி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். 2007-ல் இந்தப் புத்தகக் காட்சியைத் தொடங்கி வைத்த அன்றைய முதல்வர் கருணாநிதி, சென்னையில் மிக பிரமாண்டமான நூலகம் அமையப்போகிறது என்ற அறிவிப்பை அப்போதுதான் வெளியிட்டார். அதுதான் இன்று எல்லோரும் வியக்கக்கூடிய அளவில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம். அதேபோல் தலைவர் கருணாநிதியின் பேரில் மதுரையில் 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு மாபொரும் நூலகம் அமைக்க தமிழக அரசு பணிகளைத் தொடங்கியுள்ளது. அந்த நூலகம் மிக பிரமாண்டமான வகையில் விரைவில் எழ இருக்கிறது.

இதுபோன்ற அறிவுக் கோயில்களைக் கட்டுவதில் ஆர்வமாக உள்ள அரசுதான் இந்த அரசு. இந்த அரசு எனக் கூறுவதை விட நம்ம அரசு. திராவிட இயக்கம் என்பதே அறிவு இயக்கம்தான். நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்த தமிழ் சமூகத்துக்கு சுயமரியாதையையும், பகுத்தறிவையும் ஊட்டியது திராவிட இயக்கம்தான். திமுகவின் தலைமைக் கழகத்தின் பெயரே அண்ணா அறிவாலயம். அந்த அறிவாலயம் தொடங்கப்படுவதற்கு முன்பு திமுகவின் முதல் தலைமையகம் எதுவென்று கேட்டால், ராயபுரத்தில் இருக்கக்கூடிய அறிவகம். ஆண்டாண்டு காலமாக அடக்கி, ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்களுக்கு புத்தகம் அச்சடித்து சுயமரியாதை பரப்புரையில் ஈடுபட்டு அறிவுப் புரட்சியை ஏற்படுத்திய இயக்கம்தான் திராவிட இயக்கம்.

தமிழ்நாட்டு அரசுப் பணியில் நுழையக் கூடியவர்களுக்கு தமிழ்மொழி அறிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தேர்வுப் பணி முகமைகள் அரசுப் பணிக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் அனைத்திலும், நியமன அலுவலர்களுக்காக நடத்தப்படும் எழுத்துத் தேர்விலும் தமிழ்மொழித் தேர்வினை தகுதி தேர்வாக்கியுள்ளது தமிழக அரசு. ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள அனைத்து தேர்வு வாரியங்களிலும் கட்டாய தமிழ் மொழி தகுதி தேர்வு நிச்சயமாக நடத்தப்படும்.

ஆலயங்களில் அன்னைத் தமிழ் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. அன்னைத் தமிழில் அர்ச்சனைத் திட்டத்துக்கான குறிக்கோள், ஆலயங்களில் தமிழ் வழிபாடு தொடர்பான நூல்களையும் நான் வெளியிட்டிருக்கிறேன். மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் தமிழ் மொழியிலே கையெழுத்திடுவது, கோப்புகள் முழுவதையும் தமிழிலே தயாரித்து நிறைவேற்றுவது ஆகிய செயல்பாடுகளை அரசு ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.

கரிசல் இயக்கத்தின் பிதாமகன் கி.ராஜநாராயணன், செந்தமிழ் அந்தணர் மதுரை இரா.இளங்குமரனார் ஆகியோர் மறைவுக்கு அரசு மரியாதை தரப்பட்டது. கடந்த 37 ஆண்டுகளாக தமிழர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. இதில் 148 பேரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டது திமுக ஆட்சியில்தான். ஆட்சிக்கு வந்த இந்த 8 மாத காலத்தில் 7 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது. அவர்களது குடும்பத்திற்கு, ரூ.80 லட்சம் பிரித்து தரப்பட்டிருக்கிறது.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய நூல்களை இரண்டு பெரும் தொகுதிகளாக, தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் வெளியிட்டுள்ளோம். தமிழறிஞர்களின் பிறந்தநாளன்று இலக்கியக் கூட்டங்கள் நடத்த அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. சங்க இலக்கிய நூல்களை குறைந்த விலையிலே அச்சிட்டு வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்.

திராவிட இயக்கத்தின் வரலாறு, கொள்கைகள், கோட்பாடுகள் ஆராய்ச்சிக் கட்டுரைகளாக கொண்ட திராவிட களஞ்சியம் வெளியாக இருக்கிறது. மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் மாநிலப் பாடமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதழியல் துறையில் மிக சிறந்து விளங்குவோருக்கு கலைஞர் எழுதுகோல் விருது ரூ.5 லட்சம் பரிசுத் தொகையோடு வழங்கப்படும்.

பாரதியாரின் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அவரை சிறப்பிக்க 13 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளேன். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைந்துள்ள மேடவாக்கம் சோழிங்கநல்லூர் இணைப்புச்சாலை செம்மொழி சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. தெற்காசிய நாடுகளில் உள்ள 5 பல்கலைக்கழகங்களில் செம்மொழி இருக்கைகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது ..

மேலும் பொது நிகழ்ச்சிகளில் எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 1.5 லட்சம் புத்தகங்கள் இலங்கை யாழ்பாணம் நூலகம் மற்றும் தமிழகத்தில் உள்ள சிறு நூலகங்களுக்கு அனுப்பபட்டுள்ளது. உங்களின் ஒருவன் எனும் புத்தகத்தை நான் எழுதியிருக்கிறேன். அதை இம்மாத இறுதியில் வெளியிடுகிறேன். என்னுடைய வாழ்கையில் நான் சந்தித்த மிக முக்கிய நிகழ்வுகள் தொடங்கி மிசா போராட்டம் வரை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. விரைவில் 45வது சென்னை புத்தகக்க காட்சியில் புத்தகம் விற்பனைக்கு வைக்கப்படும். புத்தகக் காட்சியில் நல்ல திட்டம் குறித்து அறிவிப்பை வெளியிட வேண்டும் என விரும்பினேன். ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக அறிவிக்க முடியவில்லை. இரண்டு நாட்களில் மக்களுக்கான நல்ல செய்தியை வெளியிடுவேன்” என்று தெரிவித்தார்.

 

முன்னதாக, பத்திரிக்கையாளர் சமஸ் (உரைநடை), பிரசன்னா ராமசாமி (நாடகம்), கவிஞர் ஆசைதம்பி (கவிதை), எழுத்தாளர் வெண்ணிலா (புதினம்), பால் சக்கரியா (பிறமொழி) , மீனா கந்தசாமி (ஆங்கிலம்) ஆகிய 6 பேருக்கு கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதினை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

எங்கு நடக்கிறது?

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் 45-வது ஆண்டாக நடத்தப்படும் இந்தப் புத்தகக்காட்சி, இம்முறையும் நந்தனத்தி லுள்ள ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் மைதானத்தில் நடத்தப்படுகிறது. 800 அரங்குகள், கோடிக்கணக்கான புத்தகங்கள், லட்சக்கணக்கான வாசகர்களின் பங்கேற்பு எனப் பிரம்மாண்டமான புத்தகத் திருவிழா வாசகர்களை வரவேற்கத் தயாராகியிருக்கிறது.

எதுவரை நடக்கிறது?

பிப்ரவரி 16 முதல் மார்ச் 6 வரை என இந்த ஆண்டு 19 நாட்கள் புத்தகக்காட்சி நடைபெறுகிறது. விடுமுறை தினங்கள் மட்டுமல்லாமல், இம்முறை எல்லா நாட்களிலுமே காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். அனைத்துப் புத்தகங்களையும் 10% கழிவு விலையில் வாங்கிக்கொள்ளலாம்.

error: Content is protected !!