January 31, 2023

நேதாஜி உயிருடன் இருந்திருந்தால்?… -ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

நேதாஜி என்று மரியாதையுடனும், நேசமுடனும் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸின் ஒளியுருவச் சிலையை பிரதமர் மோடி நேற்று டெல்லி இந்தியா கேட் பகுதியில் துவக்கி வைத்தார். நேற்று நேதாஜியின் 125 ஆவது பிறந்தநாள். அவருடைய சிறு வயது முதலே தீரராக விளங்கிய அவர், பிரிட்டிஷ் குடிமைப் பணியில் தேறியும், பிரிட்டிஷ் அதிகாரியை கை நீட்டி அடித்ததால் அப்பணியில் சேர இயலாமல் திரும்பியவர். நாட்டின் விடுதலையில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர் விரைவில் காங்கிரஸ்சின் தலைமைப்பொறுப்பிற்கு தேர்வு செய்யப்பட்டார். ஆனாலும் காந்தியாருடன் கடுமையாக கருத்து வேறுபாடு கொண்டிருந்தார். குறிப்பாக இரண்டாம் உலகப் போர் சமயத்தில் வீட்டுச் சிறையில் இருந்து ஜெர்மனிக்கு தப்பிச் சென்று, அங்கு ஹிடலரைச் சந்தித்து இந்திய விடுதலைக்கு உதவி கேட்டார். ஹிட்லர் அவரை ஜப்பானியரிடம் அனுப்பி வைத்தார். கிழக்காசிய நாடுகளில் பயணம் செய்து இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கிய அவர் இந்திய விடுதலைப் போரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு ஆங்காங்கே புரட்சிகள் ஏற்பட்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி தந்துக் கொண்டிருந்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு போர்க் குற்றவாளியாக பிரிட்டிஷ்ஷாரால் அறிவிக்கவும்பட்டிருந்தார். பிரிட்டானிய ஆட்சி இந்தியாவை விட்டுப் போக முக்கியக் காரணங்களில் ஒன்றாக இந்திய தேசிய இராணுவத்தின் வருகையும் இருந்தது என்பதை பல வரலாற்று ஆசிரியர்கள் உறுதியாகக் கூறிவிட்டனர்.

அப்படிப்பட்ட தலைவர் ஏன் திடீரென்று மறைந்ததாக செய்திகள் வந்ததும், இன்றுவரை அவரது மரணம் மர்மமாகவே இருந்து வருவதும், ஜப்பானும், ரஷ்யாவும் போஸ் தொடர்பான ஆவணங்களை முழுமையாக வெளியிடாமல் இருப்பதும் ஏன் என்ற கேள்விக்கு விடை கிடைத்தப்பாடில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு அனுஜ் தர் எனும் பத்திரிகையாளர் நேதாஜி உயிருடந்தான் இருந்தார். உ.பியில் கும்னாமி பாபா எனும் துறவியாக உயிர் நீத்தார் என்று பல ஆதாரங்களைத் திரட்டி நிரூபிக்க முயன்றார். மேலும் 1999 ஆம் ஆண்டில் பிரதமர் வாஜ்பாய் எம். கே. முகர்ஜி எனும் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் ஓர் ஆணையம் அமைத்து நேதாஜி தொடர்பான மர்மத்தை வெளிக்கொண்டுவர முயற்சி எடுத்தார். ஏற்கனவே இருந்த ஐயப்பாடுகளை அதிகரிக்கும் நோக்கிலேயே அந்த ஆணையத்தின் அறிக்கையும் அமைந்தது. நேதாஜி இறந்ததாக சொல்லப்பட்ட விமான விபத்து நிகழாத ஒன்று என்று ஆணையம் உறுதிப்படுத்தியதுதான் அனைத்தையும் விட முக்கியமானது. அப்படியானால் அவர் எங்கு போனார்? ஏன் போனார்? பிரிட்டிஷ் அரசின் பார்வையிலிருந்து தப்பி ஓடும் நிலையிலா இருந்தார்? இந்திய மக்கள் அவரை அப்படியெல்லாம் விட்டுக்கொடுத்திருப்பார்களா? எனவே ஏதோ ஒரு நீண்ட கால அரசியல் சிந்தனைகளின் தாக்கம் காரணமாகவே அவர் தன்னை முழுவதும் மறைத்துக் கொண்டிருக்கலாம். அவை என்ன? ஏன் அவ்வளவு முக்கியம்? இதனை அறிய அன்றையக் காலகட்டத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

இரண்டாம் உலகப்போரின் முடிவில் எதிர்பாராத விதமாக இரண்டு துருவ வல்லரசுகள் உருவாயின. ஒன்று சோவியத் ஒன்றியத்தின் தலைமையிலான இடதுசாரி முகாம்; மற்றொன்று அமெரிக்கா தலைமையிலான வலதுசாரி முகாம். புதிதாக விடுதலை அடைந்த இந்தியா உட்பட பல காலனிய நாடுகள் இரண்டு முகாம்களில் ஏதேனும் ஒன்றை அனுசரித்தே வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இரண்டு முகாம்களுமே நெருக்கடி கொடுத்தன. இதில் அமெரிக்க, இங்கிலாந்து நாடுகள் இந்தியா மீது தனிக்கவனம் செலுத்தினாலும் தங்களுக்கு ஆதரவான அரசியல் கருத்துக்களை கொண்டிருக்கும் கட்சிகளை, இயக்கங்களை மறைமுகமாக ஊக்குவித்து வந்தன. இந்தியா, பாகிஸ்தான், சீனா என இரண்டு அண்டை நாடுகளிடமும் போர் செய்ய வேண்டிய சூழல் எழுந்தது. இதில் பாகிஸ்தானை வென்றாலும், இன்று வரை சீனாவிடம் தற்காப்பு எனும் நிலையிலேயே சண்டையிட்டு வருகிறோம். நேதாஜி இது போன்ற அரசியல் சூழ்நிலைகள் எதிர்காலத்தில் ஏற்படலாம் எனக் கருதி இந்தியா சோவியத் ஒன்றியத்தின்பக்கம் நிற்க வேண்டும் என நினைத்திருக்கலாம். எனவே அவர் ரஷ்யா சென்று வாழ்ந்திருக்கலாம். அங்கு இந்தியா ஆதரவான கொள்கைகளை வகுக்க ஸ்டாலின், குருசேவ் போன்ற தலைவர்களை வலியுறுத்தியிருக்கலாம். இந்தியா பாகிஸ்தான் போர் 1971 ஆம் ஆண்டு ஏற்பட்டு பங்களாதேஷ் தனி நாடு பிறக்க இந்தியா காரணம் என்றால் அதனை சாத்தியமாக்கியது சோவியத் ஒன்றியத்தின் ஆதரவு என்பதில் ஐயமில்லை. ஏனெனில் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவாக கப்பல் படையை அனுப்பியதும், சோவியத் எச்சரிக்கையின் பொருட்டே அமெரிக்கா தாக்குதலை மேற்கொள்ளவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர் வரலாற்று ஆசிரியர்கள். இதற்கு சில ஆண்டுகள் முன்பு தாஷ்கெண்ட் உடன்படிக்கைக்காக பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு சென்ற போது அங்கு நேதாஜியை சந்தித்ததாகவும், அதுவே சாஸ்திரியை இந்தியா திரும்பும் போது ‘ஓர் ஆச்சரியத்தையும்’ கொண்டு வருவதாகவும் அறிவிக்கச் செய்தது என்றும் ஒரு தகவல் உலா வந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் சாஸ்திரி உயிருடன் திரும்பவில்லை. அந்த மர்மமும் இன்னும் விலகவில்லை.

இவை அனைத்தையும் மீறி சில காரணங்களும் உண்டு. நேதாஜி திரும்பியிருந்தால் என்ன நடந்திருக்கும்? அரசியல் பதவிப் போட்டி ஏற்பட்டு அரசியல் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். ஏனெனில் நேருவைக் கேள்வி கேட்கும் வலுவான தலைமை அன்று காங்கிரஸ்சில் இல்லை. படேல் இறந்து விட்டார்; ராஜாஜி சில காலம் அரசியலிலேயே இல்லை. எனவே நேதாஜி வந்திருந்தால் போட்டி வந்திருக்கலாம். அதை அவர் விரும்பியிருக்க மாட்டார். இரண்டாவது காந்தியாரின் மரணமும் அது நிகழ்ந்த இந்தியப் பிரிவினை பின்னணியும் நேதாஜியை அரசியல் போட்டி ஏற்படுத்தும் எண்ணத்தை மாற்றியிருக்கும். மேலும் தான் காங்கிரஸ் தலைவராக இருந்த போது கொண்டு வந்த ஐந்தாண்டு திட்டக் கொள்கைகளை நேருவும் பின்பற்றி ஆட்சி செய்ததாலும், நேரு மதச்சார்பற்ற இந்தியாவையே முன் வைத்து செயல்பட்டதாலும் நேதாஜிக்கு அரசியலில் அதிகம் வேலை இருந்திருக்காது. எனவே இங்கு வந்து இந்திய அரசிற்கும், நேருவிற்கும் சிக்கலை ஏற்படுத்த அவர் விரும்பிருயிருக்க மாட்டார்.

அவர் துறவியாக வாழ்ந்த காலத்தில் பல அரசியல் கட்சித் தலைவர்கள், ஏன் பிரதமர் இந்திராவை அவரை ரகசியமாக சந்தித்தாகவும், அது இந்திரா கொல்லப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்ததாகவும் கூட கூறப்படுகிறது. ஆனால் உறுதியான செய்தியில்லை. இப்படி ரகசியமாக வாழ்ந்து மறைந்திருக்க ஓர் அதிசய தியாக குணம் அவரிடம் நிறைந்திருக்கலாம். அவரது இயல்பே ரகசியங்களை காப்பாற்றும் சாகச குணம் என்கிறார் அவரது புத்தகத்தை எழுதிய அனுஜ் தர். அவர் தான் உயிருடன் இருப்பதை வெளியே சொல்லக்கூடாது என எத்தனை பேரிடம் சத்தியம் செய்யச் சொன்னாரோ தெரியாது. ஆனால் அப்படி சத்தியம் செய்ததாக பலரும் கூறியுள்ளனர். இதையெல்லாம் கடந்து போஸ் தனது ஜெர்மன் மனைவியையும், மகளையும் 1942 ஆண்டிற்கு பிறகு சந்திக்கவேயில்லை எனும் செய்திதான் வியப்பு! அவரது மகள் அனிதா போஸ் இன்றும் வாழ்கிறார்; எழுபது வயதைக் கடந்த அவர், தன் தந்தையின் ஒளியுருவ சிலையை திறந்ததில் மகிழ்ச்சியடைவதாகவும், இந்தியா பல மதங்கள் ஒன்றுபட்டு வாழும் பூமியாக இருக்கவே தனது தந்தை விரும்பியதாகவும் சொல்லியிருக்கிறார்.

உலக வரலாற்றில் எத்தனையோ தலைவர்களும், அவர்களது ஈகையும் தனித்துக் காணப்பட்டாலும், சுபாஷ் சந்திர போஸின் தியாகம் இணையற்றது என்பதில் ஐயமில்லை.

ரமேஷ் பாபு