வான் வரையில் அதிர வைக்கும் தேவாஸ் இழப்பு! -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

றக்குறைய 14 ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்காவையும் ஏன் உலகையும் கூட மிரட்டி எடுத்த வீட்டுக்கடன் சந்தை வீழ்ச்சியில் நாம் கண்டது, திவாலான நிதி நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்கு அமெரிக்க அரசு அளித்த மீட்புப் பணத்தில் போனஸ் வழங்கியது. நிறுவனம் திவால்; ஆனால் உயர் அதிகாரிகளுக்கு போனஸ். இது என்ன நியாயம் என்று கேள்விக்கு பதிலை யாரும் தரவில்லை. அமெரிக்க நடைமுறைகள் அப்படித்தான். அதே போல ஒரேயொரு ஒப்பந்தம் இந்திய அரசின் சொத்துக்களுக்கு ஆபத்தைக் கொண்டு வந்துள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டில், அதாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி பதவியேற்ற மறு ஆண்டில், இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் பிரிவான ஆண்டிரிக்ஸ், தேவாஸ் எனும் அந்நிய நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டது. அந்த ஒப்பந்தத்தின்படி தேவாஸ் இரண்டு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும். அத்துடன் அதன் டிரான்ஸ்பாண்டர் வசதியில் 90% தை குத்தகைக்கும் வழங்கும். இந்த செயற்கைக்கோள்களுக்கு இயக்கு ஆதாரமாக அதுவரையில் பாதுகாப்புத் துறையினர் மட்டுமே பயன்படுத்தி வந்த உயர் மதிப்பிலான எஸ் வகை அலைக்கற்றையையும் ரூ 1000 கோடிக்கு வழங்கியது. அதன் பிறகு 2ஜி அலைக்கற்றை ஊழல் வெளி வந்தப் போது இந்த ஒப்பந்தமும் வெளியே தெரிய வந்தது. அன்றைய மத்திய தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கையை ஒட்டியே 2 ஜி அலைக்கற்றை முறைகேடு வெளியே தெரிய வந்தது. அதே காலகட்டத்தில் தேவாஸ் ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது. ஆயினும் இதனால் பின் விளைவுகள் ஏற்படாமல் இல்லை. தேவாஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோர் இந்திய அரசை உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்துள்ளனர். சில இடங்களில் இந்திய அரசின் சொத்துக்கள் ஒப்பந்தத்தை தன்னிச்சையாக ரத்து செய்ததாக கூறி இழப்பீடாக பெற்றும் விட்டனர். ஏர் இந்தியாவின் 50% சொத்துக்களை இப்படி கனடா நாட்டு நீதிமன்றம் பறிமுதல் செய்து விட்டது. இது போன்றே இதர இடங்களிலும் பத்தாயிரம் கோடிகளுக்கும் அதிகமான இழப்பீடுகளை தர வேண்டிய நிலையில் இருக்கிறது என்பதே உண்மை.

சில நாட்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றம் இந்திய அரசிற்கு ஆதரவாக ஒரு தீர்ப்பினை வழங்கியுள்ளது. இந்திய அரசைப் பொறுத்தவரை இத்தீர்ப்பானது பல்வேறு சர்வதேச நீதிமன்றங்களில் அரசு சந்தித்து வரும் வழக்குகளில் தனக்கு சாதகமாகப் போராடக் கிடைத்தக் கருவியாக கருதுகிறது. சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஒப்பந்தம் குறித்து அன்றைய மத்திய அமைச்சரவைக்கு கூட தெரியாத வகையில் படு ரகசியமாக ஏற்படுத்தப்பட்டது என்று கூறியுள்ளார். இதனால் ஏற்படவுள்ள இழப்புக்களை, மக்களின் வரிப்பணம் வீணாவதைத் தடுக்க மத்திய அரசு தொடர்ந்து போராடுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த ஒப்பந்தம் ஏன் தேவைப்பட்டது, ஏன் மிகவும் இரகசியமாக நிறைவேற்றப்பட்டது என்பது குறித்து இதுவரை முந்தைய காங்கிரஸ் அரசின் அமைச்சர்கள் எவரும் எந்த விளக்கமும் தரவில்லை. மேலும் எப்போதுமே இந்திய விண்வெளி, அணுசக்தி, அறிவியல் & தொழில்நுட்பம் போன்ற மிகவும் சென்சிடிவ்வான துறைகள் பிரதமர்களின் துறைகளாகவே இருந்து வருகின்றன. இதற்கு இப்போதைய பிரதமர் மோடியும் விதிவிலக்கில்லை. எனவே இப்படியொரு ஒப்பந்தத்தை ஏன் மன் மோகன் சிங் ஏற்படுத்தினார் எனும் கேள்விக்கு விடை கிடைத்தால்தான் இதுவரை இந்தியா வழக்குகளில் இழப்பீடாக இழந்த பணத்திற்கு சிறிய நியாயமாவது கிடைக்கும்.

ரமேஷ்கிருஷ்ணன் பாபு