விராட் கோலி : இந்திய டெஸ்ட் அணி கேப்டன்சியிலிருந்தும் விலகல்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் ஸ்டம்ப் மைக்கில் கோலி பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியதோடு, கோலி மீது கடும் விமர்சனங்களையும் எழுப்பியது. இந்நிலையில், டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகுவதாக கோலி திடீரென அறிவித்துள்ளார். கோலியின் அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக டி20 கேப்டன்ஷிப்பில் இருந்து விலகினார் விராட். அதன்பின்னர், ஒருநாள் கேப்டன்சியில் இருந்து பிசிசிஐ அவரை விலக்கியது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின்னர், இதுகுறித்து விராட் மற்றும் கங்குலி வெளியிட்ட மாறுபட்ட கருத்துக்களால் இந்த விவகாரம் பூதாகாரமானது.
இந்நிலையில், இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதில் முதல் போட்டியில் விராட் தலைமையிலான இந்திய அணி வென்றது. 2-வது போட்டியில் காயம் காரணமாக விராட் விளையாடவில்லை. அப்போட்டியில் கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்பட்டார். அந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி வென்றது. இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் இருந்ததால் 3-வது மற்றும் இறுதி போட்டி முக்கியமானதாக பார்க்கப்பட்டது.
அந்தப் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற 212 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டத்தில் 212 ரன்கள் இலக்கை எதிர்த்து தென்னாப்பிரிக்கா அணி ஆடி வந்த போது டீன் எல்கர் அஸ்வின் வீசிய பந்து lbw என்று கள நடுவர் தீர்ப்பு அளித்தார். ஆனால், எல்கர் ரிவ்யூ செய்த போது பந்து மேலே சென்றது தெரிய வந்ததால் நாட் அவுட் ஆன தீர்ப்பானது. இதில் கடுப்பான அஸ்வின் மற்றும் கேப்டன் விராட் கோலி ஸ்டம்ப் மைக் முன்னால் வெறுப்பில் சில வார்த்தைகளை பேசினர்.
அதில் கோலி, “பந்தை தேய்த்து பளபளப்பேற்றும் போது உங்கள் அணியினர் மீது கவனம் செலுத்து. எதிரணியினரை அல்ல. எப்போதும் யாரையாவது எதிலாவது மாட்டி விடுவது” என்று கூறினார். மேலும் அஸ்வின், “வெற்றி பெற இதை விட சிறந்த வழிகள் உள்ளன. சூப்பர் ஸ்போர்ட்ஸ்” என கூறினார். அதையடுத்து கே.எல் ராகுல் “ஒரு நாடே 11 வீரர்களுக்கு எதிராக செயல்படுகிறது” என பேசினார்.
இந்த விவகாரத்தில் ஐசிசி அதிகாரிகள் இந்திய அணி நிர்வாகத்திடம் கோலி, அஸ்வின், ராகுல் நடத்தை குறித்து எச்சரித்துள்ளதாக espn cric info செய்தி வெளியிட்டது. இந்த சம்பவம் குறித்து போட்டி முடிந்தபின் கோலி கூறுகையில், “அது பற்றி சர்ச்சை செய்ய விரும்பவில்லை” என கூறினார்.
விராட், அஸ்வின் மற்றும் ராகுலின் இந்த செய்கைக்கு பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கிரிக்கெட் ரசிகர்களும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்த அறிக்கையில் விராட், “எல்லாவற்றிற்கும் ஒரு தருணத்தில் முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய சூழல் உண்டாகும். அந்தவகையில் நான் எனது டெஸ்ட் கேப்டன் பதவிக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும், அதில் பிசிசிஐ-க்கும், தோனிக்கும், ரவி சாஸ்திரிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.