October 2, 2022

கொரோனா & ஒமைக்ரான் நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு!- முதல்வர் எச்சரிக்கை!

மிழ்நாட்டில் கொரோனா நோயைக் கட்டுப்படுத்த பொது மக்கள் கொரோனா தடுப்பு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மருத்துவக் குழுவின் ஆலோசனையின்படி, ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள், உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் இதோ:

தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு ஆணை எண்.882, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 15.12.2021-ன்படி, 31.12.2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

பண்டிகைக் காலங்களில், கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தற்போது தமிழ்நாட்டில் பரவி வரும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும், தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுபடுத்தவும், தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் இன்று (24.12.2021) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நம் மாநிலத்தில், கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் நோய்களை கட்டுப்படுத்துதல் மற்றும் அவற்றின் பரவலாக்கத்தினை குறைத்தல் குறித்து பல்வேறு ஆலோசனைகளை மருத்துவ வல்லுநர்கள் வழங்கினார்கள்.

மருத்துவக் குழுவின் ஆலோசனையின்படி, ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள், உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் பொது மக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடுவதால் கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, பொது மக்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என அன்புடன் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

Ø பொதுமக்கள் அனைவரும் கூட்டம் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

Ø பொது மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும்போதும் கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியினையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

Ø மாவட்ட நிருவாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் தவறாது தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

Ø அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் ஆகியவற்றிற்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றி செயல்பட வேண்டும்.

கொரோனா நோயைக் கட்டுப்படுத்த பொது மக்கள் நலன் கருதி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.