முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு!- வீடியோ

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு!- வீடியோ

ந்தியத் திருநாட்டின் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி மதுலிகா ராவத் உடல்கள் டெல்லி கன்டோன்மென்ட்டில் உள்ள பரார் சதுக்கத்தில் 17 பீரங்கி குண்டுகள் முழங்க முழு ராணு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவர்களுடைய 2 மகள்கள் இறுதிச் சடங்கு செய்தனர்.

கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் முப்படை தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் நேற்று முன் தினம் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பலியான அனைவரின் உடல்களும் நேற்று மாலை குன்னூரிலிருந்து டெல்லிக்கு ராணுவ விமானம் மூலம் கொண்டு வரப்பட்டன. நேற்று இரவு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பாலம் ராணுவ தளத்தில் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் இன்று காலை டெல்லி கண்டோன்மென்ட்டில் பிரிகேடியர் எல்.எஸ்.லிட்டெரின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டி மூவர்ண தேசிய கொடியால் போர்த்தப்பட்டிருந்தது.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தளபதி நரவனே, கடற்படை தளபதி ஹரிகுமார், விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் லிட்டெரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். லிட்டெரின் மனைவி மற்றும் மகளுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

இதையடுத்து, பாலம் விமாப்படை தளத்திலிருந்து பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உடல்கள் டெல்லி காமராஜர் சாலையில் உள்ள அவர்களது அதிகாரபூர்வ இல்லத்தில் வைக்கப்பட்டது. இன்று (டிசம்பர் 10) காலை பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இலங்கை, பூடான், வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளின் ராணுவ அதிகாரிகள் வந்து கலந்துகொண்டு அஞ்சலி செய்தனர். மேலும், அண்டை நாடுகளின் தூதரக உயர் அதிகாரிகள் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, டெல்லி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள பரார் சதுக்கத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி மதுலிகா ராவத் உடல்கள் தகனம் செய்ய ஏற்பாடு செய்யபப்ட்டிருந்தது. அதன்படி முப்படைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி மதுலிகா ராவத் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. டெல்லில் சாலை எங்கும் மக்கள் இருபுறமும் நின்று முப்படைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி மதுலிகா ராவத்துக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

இதையடுத்து, முப்படைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி மதுலிகா ராவத் உடல்களுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. பிபின் ராவத் – மதுலிகா ராவத்தின் உடல்களுக்கு அவர்களுடைய மகள்கள் கிருத்திகா மற்றும் தாரிணி இருவரும் இறுதிச் சடங்குகளை செய்து பெற்றோர்களின் உடல்களுக்கு தீ மூட்டி தகனம் செய்தனர்.

அப்போது, முப்படைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி மதுலிகா ராவத்துக்கு மரியாதை செய்யும் விதமாக பிபின் ராவத் முதல் முதலில் பணியாற்றிய கூர்கா படைப்பிரிவு 17 பீரங்கி குண்டுகளை முழங்க முழு ராணுவ மரியாதை செய்தனர். இறுதி நிகழ்ச்சியில் 800 ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!