August 17, 2022

விவசாயிகள் போராட்டம் தற்காலிக முடிவு : விவசாயிகள் வீடு திரும்ப ஆயத்தம்!

ந்திய தலைநகரை ஓராண்டுக்கு மேல் ஸ்தம்பிக்க வைத்த விவசாயிகள் போராட்டம் வியாழக்கிழமை பிற்பகல் அதிகாரபூர்வமாக விவசாயிகளால் முடித்துக் கொள்ளப்பட்டது.

மோடி தலைமையிலான மத்திய அரசு இயற்றிய விவசாயச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டங்களை துவக்கினார்கள். விவசாயிகள் டெல்லிக்கு உள்ளே நுழைய அனுமதிக்கப்படாத காரணத்தினால் டெல்லி எல்லையில் 3 இடங்களில் விவசாயிகள் முகாம் அமைத்து தங்கி தங்கள் போராட்டங்களை தொடங்கினார்கள். கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேல் டெல்லி எல்லையில் உள்ள மூன்று முகாம்களில் நடந்த போராட்டம் தற்காலிகமாக முடித்துக் கொள்ளப்படுவதாக வியாழக்கிழமை பிற்பகல் அதிகாரப்பூர்வமாக விவசாயிகளின் கூட்டமைப்பாகிய சம்யுக்த கிசான் மோர்ச்சா நிர்வாகக் குழுவின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளான நவம்பர் 29ஆம் தேதி 3 விவசாய சட்டங்களையும் ரத்துச் செய்யும் திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இரு சபைகளிலும் நிறைவேற்றியது . அதைத்தொடர்ந்து குறைந்தபட்ச ஆதரவு விலை. விவசாயிகள் மீதான வழக்குகள் ரத்து, போராட்ட காலத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு, அவர்களின் வாரிசுதாரர்களுக்கு அரசு வேலை, ஆகிய கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினார்கள். அதன்பேரில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்பதாக மத்திய அரசிடம் இருந்து தகவல் அதிகாரப்பூர்வமாக சம்யுக்த கிசான் மோர்ச்சாவுக்கு அனுப்பப்பட்டது.

அந்த தகவலில் சில கருத்துக்கள் விளக்கம் இல்லாத நிலையில் உள்ளன. அவை தெளிவுபடுத்தப்பட வேண்டும். சில கருத்துக்கள் திருத்தப்பட வேண்டும் என்று திருத்தங்கள் அடங்கிய கடிதமொன்றை சம்யுக்த கிசான் மோரச்சா சார்பில் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டது .மத்திய அரசு அந்தத் திருத்தங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு போராட்ட காலத்தில் விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் உடனே ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறியது.

இந்த தகவல் தொலைபேசி மூலமாக சம்யுக்த கிசான் மோர்ச்சா நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டது .மத்திய அரசு தெரிவித்த கருத்தை ஏற்பதாகவும் மத்திய அரசு தங்கள் கருத்து கடிதம் மூலமாக தெரிவிக்க வேண்டும் அதன் பிறகு அந்தக் கடிதத்தின் அடிப்படையில் சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் நிர்வாகக் குழு கூடி முடிவு அறிவிக்கும் என்று மத்திய அரசுக்கு பதில் தெரிவிக்கப்பட்டது. விவசாயிகள் தெரிவித்த திருத்தங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு மத்திய விவசாய அமைச்சர் பிரதிநிதி ஒருவர் கையெழுத்திட்ட கடிதம் வந்தது என்று அகில இந்திய கிசான் சபை தலைவர் அசோக் தவாலே கூறினார்.

மத்திய விவசாய அமைச்சகத்தின் கடிதத்தை ஏற்று தற்காலிகமாக கிளர்ச்சியை நிறுத்திவைக்க விவசாயிகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. அதன்படி விவசாயிகள் போராட்டம் வியாழனன்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

11ந்தேதி முகாம்கள் கலைப்பு

டெல்லி எல்லையிலுள்ள போராட்ட முகாம்களை விவசாயிகள் 11 ஆம் தேதி தான் காலி செய்வார்கள்.

பத்தாம் தேதி முப்படைத் தலைவர் மற்றும் பிற அதிகாரிகளின் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிச்சடங்குகள் முடிவடைந்த பிறகு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி ஒரு நிகழ்ச்சிக்குப் பின் போராட்ட முகாம்களை காலி செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அசோக் தவாலே கூறினார்.

வரும் ஜனவரி மாதம் 15ஆம் தேதி விவசாயிகள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறும். விவசாயிகளின் அடிப்படை கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கைகள் எப்படி அமைகிறது என்பது குறித்து அன்று பரிசீலிக்கப்படும் என்றும் அசோக் தவாலே கூறினார்.