February 3, 2023

பெட்ரோல், டீசல் விலைக் குறைய வாய்ப்பு உள்ளதா? – ரமேஷ் கிருஷ்ணன் பாபு

உலகளவில் பணக்கார, ஏழை நாடுகள் அனைத்தும் ஒருமித்தக்குரலில் கோரிக்கை விடுக்கும் விஷயங்களில் இன்று முன்னணிக்கு வந்து கொண்டிருப்பது படிம எரிபொருட்களின் விலைக் குறைப்பாகும். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாவின் பாதிப்பில் உலக நாடுகள் பொது முடக்கத்தை அனுபவித்து வந்த வேளையில் படிம எரிபொருட்களுக்கான தேவை குறைந்திருந்தது. எனவே விலை வீழ்ச்சியடைந்தது. அதற்கு முன்னர் ஈராக், சிரியா போன்ற வளைகுடா நாடுகளில் நடந்தப் போர்களால் சில ஆண்டுகளாகவே படிம எரிபொருட்களின் விலை வீழ்ச்சியடைந்தே வந்தது. இந்த நிலையில் பொது முடக்கம் முடிந்து இயல்பு நிலைத் திரும்பியவுடன் மீண்டும் விலை ஏற்றமும் வந்து விட்டது.

இப்போது உலக நாடுகளுக்கு பிடித்துள்ளக் கவலை எப்படி எரிபொருள் விலையேற்றத்தை சமாளிப்பது என்பதே. வரும் ஆண்டுகளில் ஏற்கனவே இழந்த வளர்ச்சி விகிதங்களை சரிகட்ட வேண்டுமென்றால் வேகமான வளர்ச்சி வேண்டும். எரிபொருட்கள் விலை அதிகம் என்றால் இது சாத்தியப்படாது. எனவே அனைவரும் படிம எரிபொருள் உற்பத்தியாளர்களான ஓபெக் அமைப்பு, ரஷ்யா உட்பட மத்திய ஆசியா நாடுகளிடம் உற்பத்தியை அதிகரிக்கும்படி வேண்டி வருகின்றன. ஆனால் அதிலும் சிக்கல். வளைகுடா நாடுகளில் எரிபொருள் சார்ந்த பொருளாதாரத்திலிருந்து விலகி மாற்று வருமான வாய்ப்புகளைத் தேட வேண்டும் என்கிற நிலை வந்துள்ளது. அவர்களைப் பொறுத்தவரை எரிபொருள் உற்பத்தியின் அதிகபட்ச அளவை ஏற்கனவே அடைந்து விட்டனர். இதற்கு மேல் அதிகரிக்க வழியில்லை. எனவே அவர்கள் விலைக்குறைப்பு செய்ய வழியில்லை. இந்த விஷயத்தில் ரஷ்யாவிற்கும், சவூதி அரேபியாவிற்கும் மோதல். ரஷ்யா விலைக்குறைப்பு செய்ய ஒப்புக்கொண்டால் அதற்கு சவூதி எதிர்ப்புத் தெரிவிக்கிறது.

வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் படிய எரிபொருட்களின் பயன்பாட்டை 50% வரைக் குறைக்க வளரும் நாடுகள் உலக நாடுகளிடம் கோரி வருகின்றன. இதற்கு உடனடி சாத்தியங்கள் இல்லையென்றாலும் இந்தியாவிலும் சரி, பிற வளர்ந்த நாடுகளிலும் சரி மின் வாகனங்கள் சாலைகளில் ஓடத் துவங்கி விட்டன. அரசுகள் அவற்றை ஊக்குவிக்கவும் செய்கின்றன. இந்நிலையில் உற்பத்தியை எப்படி அதிகரிப்பது? அப்படி அதிகரித்தால் இழப்புதான் கூடும். மேலும் தங்களது பொருளாதாரத்தை மாற்றியமைக்க விரும்பும் வளைகுடாவின் எண்ணெய் உற்பத்தி நாடுகள் எரிபொருட்களின் விலைக் குறைந்தால் தங்களது நோக்கத்தை அடைய முடியாது.

ஒரேயொரு ஆறுதல் உலகம் முழுதும் சுமார் $4 பில்லியன்களை ஆண்டுதோறும் செலவழித்தால்தான் 2030 ஆம் ஆண்டில் தொழிற்புரட்சி காலத்திலான வெப்ப அளவை அடைந்து, புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்ஷியஸ் என்றளவில் தடுக்க முடியும். இந்நிலையில் கடல் மட்டும் உயர்ந்து கடற்கரை ஓரத்து பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதை அடிக்கடி வல்லுநர்கள் எச்சரித்தும் காப்-26 மாநாட்டில் போதுமான நடவடிக்கைகள் இல்லை என்றே அதிருப்தி நிலவுகிறது. எனவே வரும் 2025 ஆம் ஆண்டில் எரிபொருட்களுக்கான தேவை 97 மில்லியன் பேரல்களை (தினசரி) என இருக்கும் என்றும், அது 2050 ஆம் ஆண்டில் 77 மில்லியன் பேரல்களாக (தினசரி) குறைய வாய்ப்புள்ளது என பன்னாட்டு எரிசக்தி அமைப்பான ஐ ஈ ஏ தெரிவித்துள்ளது. ஆக உற்பத்தியை அதிகரிப்பது நிச்சயம். தற்போது தினசரி உற்பத்தியளவு உச்சபட்ச அளவாக 95 மில்லியன் பேரல்களாக உயர்ந்துள்ளது. இதற்கு மேல் அதிகரித்தால் இழப்பு ஏற்படலாம் என்பதே முன்னணி உற்பத்தியாளர்களின் அச்சம்.

ஆகையால் விலைக்குறையும் எனும் எதிர்பார்ப்பு சரியானதல்ல. இந்தியா தந்து உள்நாட்டு உற்பத்தியை அதுவும் எரிவாயு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்கலாம். மத்திய அரசு தனது இருப்பிலுள்ள எரிபொருட்களை வெளியில் வழங்குவதன் மூலம் விலைக்குறைப்பை செய்ய முடிவு செய்துள்ளதாகவும், அமெரிக்கா கூட இதே போல இருப்பிலிருந்து எரிபொருட்களை வெளியில் விட முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இப்போது இருப்பிலிருந்து வெளியே எடுத்தால் அதற்கு இணையாக கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய வேண்டும். பன்னாட்டு விலைக் குறையாத சூழலில் இறக்குமதி செய்வது அந்நிய செலாவணியை கூடுதலாக செலவழிக்கவே வழியேற்படுத்தும். உள்ளூரில் மக்களுக்கு நிம்மதி என்றால், மத்திய/மாநில அரசுகளுக்கு வருவாய் குறையவும் செய்யும். ஒருபுறம், வருவாய் இழப்பு இன்னொருபுறம் இறக்குமதிக்கு கூடுதல் செலவு என இரட்டைச் சுமை ஏறும். எனவே அரசு இருப்பிலிருந்து எடுத்துக் கொடுத்தாலும் விலை அதிகம் விழாதவாறு கவனிக்கும். இப்போது ஒரு லிட்டருக்கு ரூ 80-90 என இருக்கும் விலையளவு அப்படியே நீடிக்கவே வாய்ப்பு அதிகம் அல்லது அவ்வப்போது ரூ 10-20 என இறங்கி ஏறலாம்.

எரிபொருட்கள் பொருளாதார இயக்கத்தின் இரத்தம் என்றால் மிகையில்லை. மற்றொரு புறம் புதிய அனல் மின் நிலையங்களை அமைக்கவும் கட்டுப்பாடுகள் வரும். ஒரு அனல் மின் நிலையம் 30-40 ஆண்டுகள் வரை செயல்பட்டாலும் இப்போது பருவநிலை மாறுபாடுகளால் 2070 ஆம் ஆண்டில் பசுமை எரிபொருட்களையே நாம் பயன்படுத்த வேண்டும். எனவே புதிய அனல் மின் நிலையங்களை அமைப்பதற்கு பதிலாக எரிவாயு உற்பத்திக்கு முதலீடு செய்யவே அரசு விரும்பும். அத்துடன் மெத்தனால் உற்பத்திக்கு நிலக்கரியைப் பயன்படுத்தவும் அரசு முனையும். எனவே மாற்று எரிபொருளும் ஆயத்தமாகி விடும் என்றால் பெட்ரோல், டீசல் விலை இனி குறையவே வாய்ப்பில்லை. இது பொருளாதாரத்திற்கும் நல்லதல்ல என்றாலும், அரசும் இதைத் தடுக்க இயலாது. ஒரே வழி முடிந்தவரை பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைத்து மாற்று எரிபொருட்களை மக்களின் மத்தியில் பரவலாக பயன்படுத்த பழக்குவதே பொருத்தமானக் கொள்கையாக இருக்கும். பசுமை எரிபொருட்களையும், எரிசக்தி வளங்களையும் வரவேற்க மக்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும். இதுவே இந்நூற்றாண்டின் நிலையாகும்.

ரமேஷ் பாபு