November 28, 2022

தற்கொலை செய்து கொள்கிறேன்: உலகை உலுக்கிய 9 வயது சிறுவனின் கதறல்!

ஜஸ்ட் ஒன்பது வயதே ஆன நிறுவன் ஒருவன் தனது சக மாணவர்களால் தொடர் கிண்டலுக்கு ஆளாவதால் , “நான் இறந்து விடுகிறேன்” என கதறி அழும் காட்சி, உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து அந்த சிறுவனுக்கு பல்வேறு பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலிய நாட்டின் பிரிஸ்பென் நகரைச் சேர்ந்தவர் யரக்கா பேலஸ். இவரது மகன்  குவாடன் பிறவியிலேயே அகோண்ட்ரோபிலாசியா என்ற  வளர்ச்சிக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளான். இதனால் மற்ற குழந்தைகளைப் போல உடலுறுப்புகள் வளர்ச்சியடையாமல் குள்ளமாக காணப் படுகிறான். இந்நிலையில் சம்பவத்தன்று யரக்கா பேலஸ் மகனை வழக்கம்போல் பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது குவாடன் பள்ளியில் சக மாணவர்கள் தன்னை குள்ளன் என்று கேலி செய்கிறார்கள், எனக்கு வாழவே பிடிக்கவில்லை என்று அழுது.“எனக்கு ஒரு கயிறு கொடுங்கள் அம்மா… நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்” என கூறி உள்ளான். அவரது தாய் எவ்வளவு சமதானப்படுத்த முயற்சித்தும் சிறுவன் அழுவதை நிறுத்தவே இல்லை

மகனுடைய இந்த அழுகையை வீடியோ  எடுத்து  சமூகவலைதளத்தில் வெளியிட்ட அவரது தாய், , “ஒரு தாயாக எனது பொறுப்பிலிருந்து நான் தவறி விட்டதாக கருதுகிறேன். நமது கல்வித் திட்டமும் தோல்வி அடைந்து விட்டதாகவே கருதுகிறேன். சக மாணவர்களை கேலி செய்வதால், எத்தகைய விளைவு ஏற்படும் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள்.

குவாடனின் உயரத்தை கேலி செய்து, அவன் தலையில் ஒரு மாணவன் அடிப்பதை, நானே நேரில் பார்த்தேன். ஆனால் பள்ளியில் புகார் செய்து பிரச்சனை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, காரில் ஓடிவந்து ஏறிய அவன், தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அழத் தொடங்கி விட்டான். அதனால்  பெற்றோரும் ஆசிரியர்களும் இது குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார். இந்நிலையில் யரக்கா பேலஸ் பகிர்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் மின்னல் வேகத்தில் பரவியது. லட்சக்கணக்கான மக்கள் குவாடனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த காமெடி நடிகரும் குவாடனைப் போல் குள்ளத்தன்மையால் பாதிக்கப் பட்டவருமான பிராட் வில்லியம்ஸ் சிறுவனைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டினார். 24 மணி நேரத்துக்குள் சுமார் 1 கோடி ரூபாய் நிதி வசூலானது.  இந்த நிதியில் சிறுவனின் குடும்பத் தினரை அமெரிக்காவின் டிஸ்னி லேண்ட்டிற்கு அழைத்துச் செல்வதாக குறிப்பிட்டுள்ள பிராட் இதுபோன்று வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் அவதிப்படுபவர் களுக்கு உதவப் போவதாகவும் அறிவித்தார்.

ஆஸ்திரேலிய நடிகர் ஹக் ஜேக்மேன், அமெரிக்க அதிபர் டிரம்பின் மகன் எரிக் டிரம்ப், நட்சத்திர கூடைப்பந்து வீரர் எனெஸ் கேண்டர் உள்ளிட்டோரும் சிறுவனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் என்பிஏவின் கூடைப்பந்து விளையாட்டை பார்வையிட சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குவாடனுக்கு மிகவும் விருப்பமான ரக்பி விளையாட்டில் சிறந்து விளங்கும் உள்ளூர் அணியான ஆல் ஸ்டார் அணியை வழிநடத்த அழைத்தது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆரவாரத்தின் மத்தியில் குவாடன் ரக்பி வீரர்களை அழைத்து சென்றார்.

தன்னுடைய மகனின் வாழ்நாளில் மிகவும் மோசமான நாளும் மிகவும் சிறந்த நாளும் அடுத்தடுத்து அமைந்துள்ளதாக தெரிவித்த யரக்கா பேலஸ்  மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்து வதற்காக அறக்கட்டளை துவங்க உள்ளதாகவும் தெரிவித்தார். சிறுவனின் நெஞ்சை உருக்கும் அழுகை அனைத்து மனங்களையும் கரைத்ததுடன் மிகப்பெரிய அளவில் சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது