April 2, 2023

டி20 :முதல் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா!

க்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற்ற நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா!

உலகக்கோப்பை டி20 தொடரின் இறுதிப் போட்டி ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.. இந்த தொடரில் பெரும்பாலும் 2வது பேட்டிங் செய்யும் அணி வெற்றி பெற்று வரும் நிலையில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபின்ச் பவுலிங்கை தேர்வு செய்தார்.

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக மார்ட்டின் குப்திலும், டேரில் மிட்செலும் களத்தில் இறங்கினார். 4-வது ஓவர் முடிவில் மிட்செல் (11 ரன் 8 பந்து 1 சிக்ஸ்), ஹசல்வுட் பந்தில் கீப்பர் மேத்யூ வடேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். குப்தில், 35 பந்துகளில் 28 ரன்கள் (3 பவுண்டரி)எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்த ஓவர்களிலும் கேப்டன் அதிரடியை தொடர்ந்ததால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. குறிப்பாக ஸ்டார்க் வீசிய 16-வது ஓவரில், வில்லியம்சன் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 22 ரன்களை எடுத்தார். 18-வது ஓவரின் 2-வது பந்தில் கிளென் பிலிப்ஸ் 18 ரன்கள் (17 பந்து 1 பவுண்டரி 1 சிக்ஸ்) எடுத்திருந்த நிலையில் ஹசல்வுட் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதே ஓவரின் 5-வது பந்தை எதிர்கொண்ட வில்லியம்சன் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 48 பந்துகளை எதிர்கொண்ட கேன் வில்லிலயம்சன் 3 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்தார். 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை குவித்தது.

பந்து வீச்சை பொருத்தளவில் ஹஸல்வுட், ஆடம் ஸாம்பா, பேட் கம்மின்ஸ் ஆகியோர் தங்களதுவேலையை கச்சிதமாக முடித்தனர். தலா 4 ஓவர்கள் வீதம் 12 ஓவர் வீசிய இவர்கள் மொத்தம் 69 ரன்களைக் கொடுத்தனர். ஹஸல்வுட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி நியூசிலாந்துக்கு கடும் நெருக்கடி அளித்தார். 4 ஓவர்கள் வீசிய மிட்செல் ஸ்டார்க் 60 ரன்கள் கொடுத்து எதிரணிக்கு உதவிகரமாக இருந்தார்.

இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் டேவிட் வார்னர், கேப்டன் ஆரோன் ஃபின்ச் களத்தில் இறங்கினர். 5 ரன்கள் எடுத்திருந்த ஃபின்ச் போல்ட் பந்தில், டேரில் மிட்செலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 15 ரன்கள் எடுத்திருந்தபோது முக்கியமான விக்கெட்டை இழந்ததால், அந்த நேரத்தில் நியூசிலாந்தின் கை ஓங்கியிருந்தது. இதன்பின்னர், வார்னர் – மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தனர்.

தொடக்கத்திலேயே முக்கிய விக்கெட் இழப்பு, உலகக்கோப்பை இறுதியாட்டம் என எந்தவித நெருக்கடியும் இல்லாமல் இருவரும் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு ஓவரிரும் பவுண்டரிகள் பறந்ததால் ஸ்கோர் சீராக உயர்ந்தது. 13-வது ஓவரில் 102 ரன்கள் இருந்தபோது, 53 ரன்கள் எடுத்திருந்த வார்னர் போல்ட் பந்தில், போல்டாகி ஆட்டமிழந்தார். இந்த 53 ரன்களில் 3 சிக்சரும், 4 பவுண்டரிகளும் அடங்கும். அடுத்து ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷும் – மேக்ஸ்வெல்லும் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தனர். 18.5 ஓவர் முடிவில் வெற்றிக்கு தேவையான 173 ரன்களை எடுத்து ஆஸ்திரேலிய அணி முதன் முறையாக கோப்பையை வென்றது.