டெல்லியில் முழு பொது முடக்கம்? சுப்ரீம் கோர்ட் கேள்வி!

டெல்லியில் முழு பொது முடக்கம்? சுப்ரீம் கோர்ட் கேள்வி!

லைநகர் டெல்லியில் உடனடியாக காற்றின் தரக் குறியீட்டை 500ல் இருந்து குறைந்தபட்சம் 200 வரை குறைப்பதற்கு செய்ய வேண்டிய திட்டம் என்ன? வேண்டுமென்றால் இரண்டு தினங்களுக்கு முழுமையான பொது முடக்கத்தை அமல்படுத்தலாமா? என்று சுப்ரீம் கோர்ட் மத்திய அரசிடம் வினா எழுப்பியுள்ளது.

டெல்லியில் ஆண்டுக்கணக்காக இருந்து வரும் காற்று மாசு தற்போது தீபாவளிக்கு பண்டிகைக்கு பின்னர் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அங்கு பெரும் பிரச்சினை நிலவுகிறது. மேலும் வாகன நெரிசல் காரணமாகவும், அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர் கழிவுகளை எரிப்பதாலும் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிலேயே இருந்து வருகிறது. இதற்கிடையில், காற்று மாசை கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்திருந்தது. ஆனால், தீபாவளி பண்டிகையின் போது டெல்லியின் பல்வேறு பகுதிகளில் தடையை மீறி பட்டாசு வெடிக்கப்பட்டது. இதனால் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் நகர் முழுவதும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது. பகல் வேளைகளிலேயே சாலையில் வாகன ஓட்டிகள் விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் நிலை உள்ளது. இன்றைய நிலவரப்படி டெல்லியில் காற்று தர குறியீடு மோசமான கட்டத்தில் உள்ளது. இன்று காலை டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தர குறியீடு 499 ஆக இருந்ததாக காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள ஆனந்த விகார், ஜகாங்கிர்புரி, சாந்தினி சவுக், லோடி சாலை, இந்திரா காந்தி விமான நிலையம் உள்ளிட்ட 15 முக்கிய மண்டலங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து காணப்படுகிறது. டெல்லியை ஒட்டி உள்ள நொய்டா, குருகிராம், காசியாபாத், கிரேட்டர் நெய்டாவிலும் காற்று மாசு அதிகமாக இருந்தது. இன்னும் ஒரு வாரம் வரை டெல்லியில் இந்த நிலை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து டெல்லியில் தேவைப்பட்டால் 2 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆதித்ய துபே, சட்டக்கல்லூரி மாணவர் அமன் பங்கா ஆகியோர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்தது.

அப்போது, டெல்லி – என்.சி.ஆர் பகுதிகளில் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் உடனடி நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றும் காற்று மாசுபாடு என்பது மிக மிக முக்கியமான பிரச்சினை என்றும் தெரிவித்தது. காற்று தரக் குறியீட்டை 500ல் இருந்து குறைந்தபட்சம் 200 வரை குறைக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட் , வேண்டுமெனில் இரண்டு நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்திக் கொள்ளலாம் என்றும் அதுமாதிரி திட்டம் ஏதேனும் வைத்திருக்கிறீர்களா? என்றும் கேட்டதோடு, அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் நிலைமை கட்டுக்குள் வர வேண்டும் என்றும் அதற்கேற்ப அவசர நடவடிக்கைகளை முடுக்கி விடுங்கள் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் பொதுமக்கள் வீட்டிற்கு உள்ளேயும் முகக்கவசம் அணிந்து கொண்டே இருங்கள் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது. அதுமட்டுமின்றி டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை அடுத்து வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைப்பதாகவும், அதற்குள் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது உள்ளிட்ட விஷயங்களை பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுங்கள் என்றும் கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

error: Content is protected !!